×

தமிழக அரசு தமிழ்நாட்டையும் தமிழ்மொழியையும் மத்திய அரசுக்கு அடகு வைத்துள்ளது : கனிமொழி எம்பி பேச்சு

பள்ளிபாளையம் : நாமக்கல் மாவட்டத்தில் இன்று, திமுக மாநில மகளிரணி செயலாளர் கனிமொழி எம்பி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.பள்ளிபாளையம் பேருந்து நிலையம் அருகே திறந்த வேனில் கனிமொழி எம்பி பொதுமக்களிடையே பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:  நாமக்கல்லில் அரசு மருத்துவமனை கட்டும்போதே இடிந்து விழுந்தது. ரேஷனில் தரமில்லாத பொருட்களை வினியோகம் செய்கின்றனர். தமிழக அரசு தமிழ்நாட்டையும் தமிழ்மொழியையும் டெல்லியில் உள்ள மத்திய அரசுக்கு அடகு வைத்துள்ளது. தமிழக அரசு சுயவிளம்பரத்திற்காக ஆயிரம் கோடியை வீண் செய்துள்ளது. தற்போது நடைபெறும் ஆட்சியில் விவசாயிகளுக்கு எந்த பாதுகாப்பும் இல்லை. விவசாயிகள் தற்கொலை செய்து வருகின்றனர்.  கேஸ், பெட்ரோல் விலை தினமும் அதிகரித்து வருகிறது. எல்லா துறைகளிலும் ஊழல் தான். மாஸ்க் வாங்குவது முதல் நிலக்கரி உள்ளிட்ட அனைத்திலும் ஊழல் நிறைந்து காணப்படுகிறது.

இப்பகுதியில் சுயசுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும் என்ற நீண்டநாள் கோரிக்கை இருந்தது. இதையடுத்து 2014ல் சுய சுத்திகரிப்பு நிலையம் அமைக்க அறிவிக்கப்பட்டது. ஆனால் இதுவரை எந்த பணியும் துவங்கவில்லை. ஆனால் தற்போது தேர்தலுக்காக முதல்வரை வைத்து சுய சுத்திகரிப்பு நிலையம் அமைக்க அடிக்கல் நாட்டப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. ஆனால் அடிக்கல் நாட்டப்படுவதோடு சரி, அப்படியே நிறுத்தி வைக்கப்படும்.திமுக ஆட்சிக்கு வந்த பிறகு சுய சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும்,வேலை வாய்ப்பு உருவாக்கப்படும். ரேஷனில் தரமான பொருட்கள் வழங்கப்படும்.  மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு சுழல் நிதி வழங்கப்படும். டெல்லியில் அடகு வைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு மீட்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

Tags : Government ,Tamil Nadu ,speech ,Kanimozhi MP ,Central Government , கனிமொழி
× RELATED தேவர் சமுதாய அரசாணை விவகாரத்தில்...