பிப்ரவரி 17 வரை தமிழகம், புதுவை பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: வங்கக்கடலில் தென்கிழக்கு பகுதியில் பலத்த சூறைக்காற்று வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல்  தெரிவித்துள்ளது. மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில் சூறைக்காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது; பிப்ரவரி 13 முதல் பிப்ரவரி 17 வரை தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும்.

அதிகபட்ச வெப்பநிலை 30 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும். தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் குறிப்பிடத்தக்க அளவு மழை எங்கும் பதிவாகவில்லை. வறண்ட வானிலை நிலவும் என அறிவிக்கப்பட்டாலும் காலை நேரங்களில் பல இடங்களில் பனிப்பொழிவு அதிகமாக உள்ளது. ஊட்டி, கொடைக்கானல் போன்ற பகுதிகளில் மக்களை குளிர் வாட்டி எடுக்கிறது. புல்வெளிகளில் உறைபனி அதிகம் படர்ந்து கிடக்கின்றன. இதனால் பொதுமக்கள் அன்றாடப் பணிகளை மேற்கொள்ள முடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பிப்ரவரி 13ஆம் தேதி தென் கிழக்கு வங்க கடல் பகுதியில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் மேற்கூறிய பகுதிகளுக்கு செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Related Stories:

>