×

ஆண்டவன் சொல்றான்..அருணாச்சலம் செய்றான்.. என ரஜினி சொல்வது போல..ஸ்டாலின் சொல்றாரு... பழனிசாமி செய்றாரு..: மு.க.ஸ்டாலின் சரவெடி!!

விருத்தாசலம் :விருத்தாசலத்தில் நடந்த உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார். பின்னர் அவர் பேசுகையில், திமுக ஆட்சிக்கு வந்தவுடன் 100 நாட்களில் உங்கள் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். மாநாடு போல திரண்டிருக்கிறீர்கள். எவ்வளவுதான் குறைச்சு போட்டாலும் 10 ஆயிரம் பேர் திரண்டிருக்கின்றனர். கட்டுப்பாடோடு, இங்கே வந்திருப்பதுதான் திமுக. ஒன்றிணைவோம் வா திட்டத்தின் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உறுதுணையாக நின்ற இயக்கம்தான் திமுக. உங்கள் கோரிக்கை மனுவை பதிவு செய்துள்ளார்கள். அதற்கு ஒரு பதிவு சான்று கொடுத்திருப்பார்கள். இந்த ஒப்புகை சீட்டு, பதிவு எண் மிக முக்கியம். இதனை வாங்காதவர்கள் மறக்காமல் வாங்கி கொள்ளுங்கள். இந்த அட்டைக்கு எல்லா உரிமையும் இருக்கிறது.

திமுக மிகப்பெரிய வெற்றியை பெற்று, பதவிப்பிரமாணம் எடுத்த அடுத்த நாள் இந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுப்போம். நிறைவேறவில்லை யெனில் இந்த அட்டை எண்னை காண்பித்து என்ன ஆச்சு என கேட்கும் உரிமை இருக்கிறது. கோட்டைக்கு வரலாம், முதல்வர் அறைக்கு வந்தே கேட்கலாம். பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இங்கே கூடியிருக்கிறீர்கள். உங்களின் நம்பிக்கை காப்பற்றப்படும், என்றார்.தொடர்ந்து பொதுமக்களிடம் அவர் கலந்துரையாடினார்.

ராஜேஸ்வரி (நெய்வேலி): இலவச வீடு கட்டும் திட்டத்தில் அவர்களே (அதிமுக) எடுத்துக்கொண்டு கொள்ளையடித்தனர். கழிவறை கட்டாமலே அதிமுகவினரே கொள்ளையடித்தனர். ஏழைகளுக்கு தங்கத்தாலி வழங்கும் திட்டத்திலும் எங்களை புறக்கணித்தனர். குளம் தூர்வாருவதிலும் ஊழல் செய்திருக்கின்றனர்.ஸ்டாலின்: அதிமுக அமைச்சர்கள் ஒரு திட்டத்தில் கூட ஊழல் செய்யாமல் இல்லை. இவர்களுக்கு எல்லாம் மானசீக குரு வேலுமணி. முதல்வரை மிஞ்சி ஊழல் செய்கிறார். ஊழல் மணி உள்ளிட்டவர்கள் திமுக ஆட்சிக்கு வந்ததும் கம்பி எண்ணுவார்கள்.

சிறுமி சஞ்சனா: விருத்தாசலத்தை தனி மாவட்டமாக மாற்ற வேண்டும். குட்டி, குட்டி ஊரெல்லாம் மாவட்டமாகிவிட்டது. எல்லா வசதிகளும் இங்கு இருக்கிறது. எங்களது மருத்துவமனையை தரம் உயர்த்தி தாருங்கள். இரவில் மருத்துவர் இல்லை. வெளியூருக்கு மருத்துவ சிகிச்சை பெற செல்லும் வழியிலே இறந்து போய்விடுகின்றனர். எனவே எங்களின் கோரிக்கையை தீர்த்து வைக்க வேண்டும்.ஸ்டாலின்: 4 வயது சிறுமி நன்றாக படிக்க வேண்டும். அருமையாக பேசிய சிறுமிக்கு எனது பாராட்டுக்கள்.

பேருந்து நிலையம் படுமோசமாக இருக்கிறது. மருத்துவமனையில் மருத்துவர்களை தேடித்தான் பிடிக்க வேண்டும். கடலூரில் சட்டக்கல்லூரி அல்லது மருத்துவ கல்லூரியை ஏற்படுத்தி தர வேண்டும்.
திமுக ஆட்சிக்கு வந்ததும் சட்டக்கல்லூரி அமைத்து தர வேண்டும்.ஸ்டாலின்: விருத்தாசலத்தை தனி மாவட்டமாக்க அனைத்து விதமான நடவடிக்கைகளை எடுப்போம். கலைஞர் கொண்டு வந்தார் என்பதற்காக கடலூர் மருத்துவ கல்லூரி திட்டத்தை அதிமுக அரசு முடக்கியுள்ளது. வேலைவாய்ப்பில் தமிழர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள். வெளிமாநிலத்தை சேர்ந்தவர்களை நியமிக்கிறார்கள். ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் நாம் செய்வோம். நான் என்ன சொன்னாலும் முதல்வர் எடப்பாடி நிறைவேற்றி வருகிறார்.
ராமசாமி பூமாலை:

எம்.புதூர் கிராமத்தை சேர்ந்தவன். கலைஞர் காப்பீடு திட்டத்தில் எல்லோருக்கும் மருத்துவ வசதி கிடைத்தது. வாய் பேச முடியாத குழந்தைகளுக்கு மருத்துவ சிகிச்சை கிடைக்க செய்ய வேண்டும். தனியார் கரும்பு ஆலை அதிபர்கள் நிலுவைத்தொகை வழங்கவில்லை. நிலுவைத்தொகை கிடைக்காத நிலையில் எங்களை அடமானம் வைத்து கடன் வாங்கி இருக்கிறார்கள்.10 நாளில் இதற்கு தீர்வு காண்பேன் என்று முதல்வர் சொன்னார். ஒன்னும் கிடைக்கவில்லை.அமைச்சர் சம்பத்தான் இந்த மாவட்டத்தில் ஒன்றும் நடைபெறாமல் இருக்க காரணம். கோரிக்கையை சொன்னால் மின்னல் மாதிரி ஓடி ஒளிகிறார். தேசிய வங்கிகளில் வாங்கிய கடனை ரத்து செய்யுங்கள்.

ஸ்டாலின்: ஜனவரி 13ம் தேதி விவசாய கடன் ரத்து செய்வேன் என்று சொன்னேன். ரத்து. பண்ண முடியாது என சுப்ரீம் கோர்ட்டில் போய் தடையாணை பெற்றவர்தான் பழனிசாமி. இருக்கிற வரையில் கொள்ளையடிக்கலாம் என்பதிலும், டெபாசிட்டாவது வாங்க வேண்டுமே என்பதற்காக விவசாய கடன் ரத்து என்று இப்போது சொல்கிறார். விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தந்தது திமுக. விவசாயிகள் ஒரு பைசா கட்டணத்தை குறைக்க தான் கோரிக்கை வைத்தனர். ஆனால் நீங்கள் ஒரு பைசா கூட கொடுக்க தேவையில்லை என்றவர் கலைஞர். பச்சை துண்டை மட்டும் போட்டுக்கொண்டு விவசாயிகளுக்கு துரோம் செய்பவர் பழனிசாமி. அவர் நானும் ரவுடிதான் என்பது போல விவசாயி என்று கூறி வருகிறார்.இவ்வாறு கலந்துரையாடல் நடந்தது.

Tags : Lord ,MK Stalin ,Arunachalam ,Rajini ,Palanisamy , மு.க.ஸ்டாலின்
× RELATED ராம நவமியை முன்னிட்டு ராமேஸ்வரத்தில் பக்தர்கள் ஊர்வலம்