×

மானாமதுரை திருடு போகும் அரசு பள்ளி மாணவிகளின் சைக்கிள்கள்: ஸ்டாண்ட் அமைக்குமா மாவட்ட நிர்வாகம்?

மானாமதுரை: மானாமதுரை அரசு பெண்கள் மேல்நிலைபள்ளி சிவங்கை மெயின்ரோட்டில் உள்ளது. இந்த பள்ளியில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் கிராமப்புறங்களில் இருந்து தினமும் சைக்கிள்களில் வருகின்றனர்.

தற்போது 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்புவரை வகுப்புகள் நடந்து வருவதாலும், கிராமங்களுக்கு இயக்கப்பட்ட டவுன் பஸ்கள் சில நிறுத்தப்பட்டதாலும் பெரும்பாலான மாணவிகள் சைக்கிள்களில் வருகின்றனர்.அதிக எண்ணிக்கையில் படிக்கும் மேல்நிலைப்பள்ளியில் கூடுதல் கட்டிடங்கள் கட்டப்பட்டதால் சைக்கிள் நிறுத்துமிடம், விளையாட்டு மைதானம் போன்றவை இல்லாமல் இடநெருக்கடி ஏற்பட்டதால் மாணவிகள் தாங்கள் கொண்டுவரும் சைக்கிள்களை பள்ளிக்கு வெளியே அன்புநகர் ரோட்டில் இருபுறமும் நிறுத்துகின்றனர்.

இந்த ரோட்டில் அன்புநகர், பட்டத்தரசி, அண்ணாமலைநகர், ராம்நகர் உள்ளிட்ட பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. வணிகவளாகங்களும் இருப்பதாலும் இந்த ரோட்டில் நிறுத்தப்படும் சைக்கிகள்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இதுகுறித்து 12ம் வகுப்பு மாணவி ஒருவர் கூறுகையில்,கடந்த மூன்று ஆண்டுகளாக பள்ளிவளாகத்தின் அருகில் உள்ள நெடுஞ்சாலைத்துறை பயணியர் விடுதி காலியிடத்தில் சைக்கிள்களை நிறுத்தினோம். திடீரென அங்கு நிறுத்தக்கூடாது என அவர்கள் எங்களை விரட்டினர். இதனால் இப்போது ரோட்டில் நிறுத்தப்படும் சைக்கிள்கள் திருட்டுபோகிறது. சைக்கிள்களில் வாலிபர்கள் காற்றைபிடுங்கி விடுவது, சேதப்படுவது என சேட்டை செய்கின்றனர். எனவே, பள்ளி வளாகத்திற்குள் சைக்கிள் ஸ்டாண்டு அமைத்து தர வேண்டும்’ என்றார்.

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த சரவணன் கூறுகையில், பள்ளி வளாகத்தில் ஏராளமான கட்டிடங்கள் கட்டப்பட்டதால் சைக்கிள்களை நிறுத்த இடமில்லாமலும், விளையாட்டு மைதானமும் இல்லாததால் அருகிலுள்ள நெடுஞ்சாலைத்துறை அலுவலத்தை வேறு இடத்திற்கு மாற்றி அந்த இடத்தை பள்ளிக்கு வழங்கவேண்டும் என்று மானாமதுரையில் உள்ள அனைத்து கட்சிகள், சமூக இயங்கங்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றன. ஆனால், இப்பள்ளிக்கு கூடுதல் இடங்களை பெற்றுதர இங்கு நான்கு முறை வென்ற அதிமுக எம்எல்ஏக்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் பள்ளி மாணவிகளின் சைக்கிள்கள் திருட்டுபோவதுடன் ரோட்டில் செல்லும் வாகனங்கள் இடித்து பழுதாகிறது. ரோட்டில் செல்லும் மற்ற வாகனங்களும் போக்குவரத்து நெரிசலில் சிக்கிகொள்கின்றது. இதனால் அவசரத்திற்கு இந்தபாதையை பயன்படுத்த முடியாமல் அண்ணாமலைநகர், சாஸ்தா நகர் சுற்றி சிவகங்கை மெயின்ரோட்டிற்கு செல்லவேண்டியுள்ளது.  சிவகங்கை மாவட்ட கலெக்டராவது பள்ளி மாணவிகள் சைக்கிள் நிறுத்துவதற்கு அருகில் உள்ள காலியிடங்களை முறைப்படி பெற்று தந்து நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என்றார்.

Tags : Manamadurai ,government school students ,district administration , Bicycles
× RELATED மானாமதுரை வீரஅழகர் கோயில் சித்திரை திருவிழா காப்பு கட்டுதலுடன் துவக்கம்