×

சாத்தூர் வெடிவிபத்தில் 19 பேர் உயிரிழந்த நிலையில், சிவகாசியில் மேலும் ஒரு பட்டாசு ஆலை விபத்து : தமிழகத்திற்கு அடுத்தடுத்து சோகம்!!

விருதுநகர்  : சிவகாசி அருகே காக்கிவாடன்பட்டியில் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. நேற்றைய தினம் விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே அச்சங்குளம் கிராமத்தில் ஏழாயிரம்பண்ணையை சேர்ந்த சந்தனமாரி என்பவருக்கு சொந்தமான மாரியம்மாள் பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் 7 மாத கர்ப்பிணி உள்பட 19 பேர் பலியாகினர். தீயில் கருகியதால் பல உடல்களை அடையாளம் காணமுடியவில்லை. 31 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பூலாவூரணியை சேர்ந்தவர் ராஜ் (56). இவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை மாரனேரி-காக்கிவாடன்பட்டி சாலையில் உள்ளது. நாக்பூர் உரிமம் பெற்ற இந்த ஆலையில் 40 அறைகள் உள்ளன. சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த 120 பேர் பணியாற்றி வருகின்றனர். பேன்ஸி ரக பட்டாசு தயாரிக்கப்படுகிறது.இன்று காலை வழக்கம்போல் பணியாளர்கள் பணியில் ஈடுபட்டனர். ஒரு அறையில் மருந்து கலவை செலுத்தும் போது உராய்வு காரணமாக வெடிவிபத்து ஏற்பட்டது.

இதில் அறை தரைமட்டமானது. அறையிலிருந்த பூலாவூரணியை சேர்ந்த மனோகரன் மகன் சுரேஷ் (31) காயமடைந்தார். மற்ற தொழிலாளர்கள் அலறியடித்து வெளியே ஓடினர். சிவகாசி தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து போராடி தீயை அணைத்தனர்.காயமடைந்த சுரேஷ் சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து மாரனேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.சாத்தூர் அருகே அச்சங்குளம் கிராமத்தில் நேற்று ஏற்பட்ட வெடிவிபத்தில் 19 பேர் பலியான நிலையில், இன்று மற்றொரு பட்டாசு ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்டது மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : blast ,firecracker factory accident ,Sattur ,Sivakasi ,Tamil Nadu , Fireworks, factory, accident
× RELATED உதகையில் உள்ள பிரபல தனியார்...