×

புதிதாக அமைக்கப்பட்ட மலைப்பாதையில் தடுப்புச்சுவர் இல்லாததால் விபத்து அபாயம்

சேலம்: சேலம் ஜருகுமலையில் புதிதாக அமைக்கப்பட்ட மலைப்பாதையில் தடுப்புச்சுவர் அமைக்கப்படாததால் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பெரும் அசம்பாவிதங்கள் நிகழும் முன்பு தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும் என்று மலைவாழ் மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

சேலம் மாவட்டம் மலைகள் சூழ்ந்த பகுதியாகும். சேலத்தில் வடக்கே சேர்வராயன் மலைத்தொடரும், தெற்கே ஜருகுமலை, ஊத்துமலை, நாமமலை உள்பட பல்வேறு மலைத்தொடர்களும் உள்ளன. தமிழகத்தில் மற்ற ஊர்களில் இயற்கை சீற்றம் ஏற்பட்டால் பெரிய அளவில் சேதம் ஏற்படும். சேலத்தை சுற்றி மலைத்தொடர்கள் இருப்பதால் இயற்கை சீற்றம் ஏற்பட்டாலும் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படுவதில்லை.

சமீப காலமாக சேலத்தை சுற்றி கனிம வளங்கள் அதிகளவில் சுரண்டப்படுகிறது. அதனால் எதிர்வரும் காலங்களில் சேலம் மாவட்டம் இயற்கை சீற்றங்களை தாங்குமா? என்று கேள்வி இயற்கை ஆர்வலர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்நிலையில் சேலம் மையப்பகுதியில் இருந்து தெற்கே நீண்ட தொடராக ஜருகுமலை உள்ளது. இம்மலையில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களின் பிரதான தொழில் விவசாயம்.

சிலர் கூலி தொழிலுக்காக அடிவாரத்தில் உள்ள எருமாபாளையம், அம்மாப்பேட்டை, நிலவாரப்பட்டி, சீலநாயக்கன்பட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு வருகின்றனர். இம்மலைவாழ் மக்களின் 75 ஆண்டுகளுக்கு மேலான கோரிக்கை மலை அடிவாரத்தில் இருந்து தார்ச்சாலை அமைக்க வேண்டும். மின்சாரம், குடிநீர், சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்பதாகும். இதற்காக அவர்கள் மக்கள் பிரதிநிதிகளிடமும், அதிகாரிகளிடமும் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். அதன் அடிப்படையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஜருகுமலை அடிவாரத்தில் இருந்து மலையின் மேல்பகுதி வரை மின்சாரம் வசதி செய்யப்பட்டது. மற்றொரு கோரிக்கையான தார்ச்சாலை அமைக்கும் பணி, கடந்த 5ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது. இப்பணி எருமாபாளையம் ஏரி பகுதியில் இருந்து தொடங்கப்பட்டது. சுமார் ஐந்து கிலோமீட்டர் தூரம் மலைகளை குடைந்தும், பாறைகளை வெட்டியும் சாலை அமைக்கும் பணி தொடங்கியது. சாலை அமைக்கும் பணி கடந்த சில நாட்களுக்கு முன்பு நிறைவடைந்தது. இதையடுத்து கடந்த மாதம் மலைப்பாதை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டது.

மலைப்பாதையில் அடிவாரத்தில் இருந்து மலை மேல் வரை சாலை வளைவுப்பகுதிகளில் மட்டுமே தடுப்புச்சுவர் கட்டப்பட்டுள்ளது. மற்ற இடங்களில் தடுப்புச்சுவர் இல்லாமல் உள்ளது. சாலையின் மட்டமும், ஓரப்பகுதியும் ஒரே அளவில் உள்ளது. இதனால் இரவு மலைப்பாதையை பயன்படுத்தும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே பெரும் அசம்பாவிதம் ஏற்படும் முன்பு சாலையில் தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. இது குறித்து ஜருகுமலை மலைவாழ் மக்கள் கூறியதாவது: ஜருகுமலையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். இங்கு நெல், சாமை, திணை, கேழ்வரகு, கம்பு, அவரை, மரவள்ளிக்கிழங்கு உள்பட பல்வேறு பயிர்களை சாகுபடி செய்து வருகிறோம். ஜருகுமலையில் தார்ச்சாலை என்பது எங்களின் 75 ஆண்டு கனவாகும். பல ஆண்டு கனவு இப்போது நிறைவேறியுள்ளது. இச்சாலையில் வளைவு பகுதிகளில் மட்டுமே தடுப்புச்சுவர் உள்ளது. மற்ற இடங்களில் தடுப்புச்சுவர் இல்லை. சாலை குறுகியதாக இருப்பதால் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.

குறிப்பாக இரவு நேரங்களில் வாகனங்களில் வருபவர்கள் விபத்தில் சிக்க நேரிடுகிறது. தடுப்புச்சுவர் அமைத்தால் வாகன ஓட்டிகள் சிரமமின்றி சென்று வரமுடியும். இதற்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மலைவாழ் மக்கள் கூறினர்.

Tags : Accident
× RELATED கோவையில் மோடி ரோடு ஷோவில் பள்ளி...