×

நாகர்கோவிலில் பொது மக்களிடம் தரம் பிரித்து பெற உத்தரவு: தூய்மை பணியாளர்களுக்கு குப்பை தொட்டி வழங்காத மாநகராட்சி

நாகர்கோவில்: நாகர்கோவில் மாநகராட்சியில் தினசரி சராசரியாக 115 டன் முதல் 125 டன் குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன. இவற்றை வலம்புரிவிளையில் கொட்டுவதற்கு பசுமை தீர்ப்பாய உத்தரவின் படி தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த குப்பைகள் நாகர்கோவில் மாநகரில் அமைக்கப்பட்டுள்ள 11 நுண் உர செயலாக்க மைத்திற்கு கொண்டு செல்லப்பட்டு தரம் வாரியாக அழிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தற்போது தினசரி 55 டன் மக்கும் குப்பைகளும், 10 டன் இலைதளை, 5 டன் பிளாஸ்டிக் பைகள், 10 டன் மரக்கழிவுகள், மாஸ்க், மருந்து கழிவுகள் மற்றும் பூச்சி மருந்து பாட்டில்கள், மின்சார பேட்டரி போன்ற அபாயகரமான மின்னணு கழிவுகளும் வருகின்றன. இந்த குப்பைகளை நுண் உர செயலாக்க மையத்தில் சேகரித்து தரம் பிரிக்க போதிய இடமோ, தூய்மை பணியாளர்களோ இல்லை.

இதனால், இந்த குப்பைகளை பொதுமக்களே தங்கள் வீடுகளில் தரம் பிரித்து வழங்க மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. எனினும், பெரும்பாலானவர்கள் குப்பைகளை தரம் பிரித்து வழங்குவதில்லை. இதனால், தூய்மை பணியாளர்களே அவற்றை தரம் பிரித்து கொண்டு செல்ல ஒவ்வொறு வீட்டிலும், 10 நிமிடங்களுக்கு மேல் ஆவதால், வேலை நேரம் முடிந்த பின்னர் எஞ்சியுள்ள வீடுகளில் குப்பைகள் பெற முடிவதில்லை. அதாவது தினசரி 50 வீடுகளில் முன்பு குப்பைகள் சேகரித்தால், தற்போது தூய்மை பணியாளர்களே மக்கும் குப்பை , மக்காத குப்பை, அபாயகரமான கழிவுகள், மருத்துவ கழிவுகள் என 4 வகையாக தரம் பிரித்து எடுத்து செல்லும்போது அதிக பட்சம் 30 வீடுகள் மட்டுமே சேகரிக்க முடிகிறது.

தற்போது தரம் பிரிக்கும் குப்பைகள் கொண்டு செல்லும் வாகனத்தில் தனித்தனியாக குப்பைகள் கொட்ட முடியாது என்பதால், தனியாக சாக்குகளில் சிறிய தள்ளுவண்டிகளில் சேகரிக்க வேண்டிய நிர்பந்தம் உள்ளது. இதனால், போதிய சாக்குகள் இன்றியும், குப்பை சேகரிக்கும் வண்டி சிறிதாக உள்ளதால், பலமுறை குப்பைகள் கொட்டப்படும் மையங்களுக்கு செல்ல வேண்டியும் உள்ளதால், பல கட்ட இன்னல்களுக்கு தூய்மை பணியாளர்கள் ஆளாகியுள்ளனர்.

வீடுகளில் குடியிருப்போர் நலச்சங்கங்கள் மூலம் மக்கும் குப்பை, மக்காத குப்பை, மருத்துவ கழிவுகளுக்கு என குப்பை கூடைகள் வழங்கி அதில் குப்பைகளை தர வேண்டும் என மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டுள்ளார். ஆனால், மாநகராட்சி தூய்மை பணியாளர்கள், தரம் பிரித்து வாங்க தனித்தனி தொட்டிகள் மற்றும் அதற்கேற்ப வாகனங்கள் வழங்காதது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

Tags : public ,cleaning staff ,Nagercoil: Corporation , Dust bin
× RELATED வாக்குப்பதிவு நடைபெறும் இன்று வெப்ப...