×

மாநில அரசுகளுக்கான ஜிஎஸ்டி இழப்பீட்டில் 6 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசு வழங்கியது

டெல்லி: மாநில அரசுகளுக்கான ஜிஎஸ்டி இழப்பீட்டில் 15-வது தவணையாக 6 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசு வழங்கியுள்ளது. இதில் 5,516 கோடியே 60 லட்சம் ரூபாய் 23 மாநிலங்களுக்கும், 483 கோடியே 40 லட்சம் ரூபாய் டெல்லி, ஜம்மு காஷ்மீர், புதுச்சேரி ஆகிய யூனியன் பிரதேசங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. இதுவரை, மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கான சிறப்பு சாளரத்தின் கீழ் 90 ஆயிரம் கோடி ரூபாய் கடன்களுக்கு நிதி அமைச்சகம் வழி வகுத்துள்ளது. இதில் தமிழ்நாட்டுக்கு 9 ஆயிரத்து 627 கோடி ரூபாய் கடனாக பெற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி மாதத்தில் ரூ.1,19,847 கோடி ஜிஎஸ்டி வசூலாகியுள்ளது என மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு ஜனவரியை விட நடப்பாண்டு 8 சதவிகித ஜிஎஸ்டி கூடுதலாக வசூலாகி உள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் கூறியுள்ளது.

ஜிஎஸ்டி இழப்பீட்டை ஈடுகட்டும் வகையில், 20 மாநிலங்கள் ரூ.68,825 கோடி கடன் வாங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. ஜிஎஸ்டியை அமல்படுத்தும்போது, இதனால் மாநிலங்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுகட்டும் வகையில், 5 ஆண்டுகளுக்கு இழப்பீடு வழங்க மத்திய அரசு ஒப்புக்கொண்டது. அதன்பிறகு மாநில அரசுகள் தங்களுக்கு உரிமையாக கிடைக்க வேண்டிய இழப்பீட்டை போராடி பெற்றன. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தப் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால், மத்திய, மாநில அரசுகளின் வரி வருவாய் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதைக் காரணம் காட்டி, மாநில அரசுகளுக்கு இழப்பீடு வழங்க முடியாது என மத்திய அரசு கைவிரித்து விட்டது.

அதே நேரம், ஜிஎஸ்டி இழப்பீடான ரூ.97,000 கோடியை பெற விரும்பும் மாநிலங்கள், ரிசர்வ் வங்கி மூலமாக கடன் பத்திரங்கள் வெளியிட்டு திரட்டிக் கொள்ளலாம் என கூறியது. இதற்கு எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. 20 மாநிலங்கள் மத்திய அரசின் யோசனையை ஏற்றன. ஆந்திரா, அருணாசல பிரதேசம், அசாம், பீகார், கோவா, குஜராத், அரியானா, இமாசலப் பிரதேசம், கர்நாடகா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகலாந்து, ஒடிசா, சிக்கிம், திரிபுரா, உத்தரப் பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்கள், விருப்பத்தேர்வு 1ஐ தேர்வு செய்துள்ளன. இதன்படி இந்த மாநிலங்கள் ரூ.68,825 கோடி கடன் வாங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

Tags : government ,state governments , GST
× RELATED ரயில், பேருந்து பயணத்தின்போது சலுகை...