×

சமூக நலத்துறை சார்பில் தாலிக்கு தங்கம் வழங்கும் விழா: டோக்கனில் சாதிப்பெயர் குறிப்பிட்டதால் சர்ச்சை

காஞ்சிபுரம்: சமூக நலத்துறை சார்பில் காஞ்சிபுரத்தில் தாலிக்கு தங்கம் வழங்கும் விழா நடந்தது. இதில், அமைச்சர் பென்ஜமின் கலந்து கொண்டு, நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது, டோக்கனில் சாதிப்பெயர் குறிப்பிட்டு இருந்ததால் சர்ச்சை ஏற்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் சமூக நலத்துறை சார்பில் 2020-21ம் நிதியாண்டில் திருமணமான படித்த, பட்டயம் பெற்ற 1331 பெண்களுக்கு 5.24 கோடியில் தாலிக்கு தங்கம், 5.11 கோடி திருமண நிதியுதவி வழங்கும் விழா காஞ்சிபுரம் அண்ணா அரங்கில் நடந்தது. கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட சமூக நல அலுவலர் சங்கீதா வரவேற்றார். ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பென்ஜமின் கலந்து கொண்டு, தாலிக்கு தங்கம் மற்றும் திருமண நிதி உதவிகளை வழங்கினார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் மட்டும் கடந்த 2011 - 12ம் நிதியாண்டு முதல் 2019 - 20ம் நிதியாண்டு வரை 60,526 பெண்களுக்கு தலா 8 கிராம் தங்கம் மற்றும், 204.72 கோடி திருமண நிதியுதவியும் வழங்கப்பட்டுள்ளது. 2020-21ம் நிதியாண்டில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொத்தம் 1331 பேருக்கு திருமண நிதியுதவி மற்றும் தாலிக்கு தங்கம் வழங்கப்பட்டுள்ளது.

இதில் 10 மற்றும் 12ம் வகுப்பு படித்தவர்கள் 619 பேர், பட்டம், பட்டயப் படிப்பு படித்தவர்கள் 712 பேர் பயனடைந்தனர். நிகழ்ச்சியில் எம்எல்ஏ பழனி, முன்னாள் எம்எல்ஏக்கள் வாலாஜாபாத் கணேசன், சோமசுந்தரம் உள்பட பலர் கலந்துகொண்டனர். தொழிற் கூட்டுறவு அலுவலர் ஜெகதீசன் நன்றி கூறினார். இந்நிலையில், தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் வட்டத்தில் 555 பேர், வாலாஜாபாத் வட்டத்தில் 156, உத்திரமேரூர் வட்டத்தில் 262, ஸ்ரீபெரும்புதூர் வட்டத்தில் 142, குன்றத்தூர் வட்டத்தில் 210 பேர் என மொத்தம் 1331 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அதில், உத்திரமேரூர் வட்டத்தைச் சேர்ந்தவர்களின் பட்டியல் மற்றும் டோக்கனில், அவர்களது சாதி பெயர் குறிப்பிடப்பட்டு இருந்தது. இதனால், அங்கு சர்ச்சை ஏற்பட்டது. அனைவரையும் சமமாக நடத்த வேண்டிய அரசு விழாவில் சாதியை குறிப்பிட்டு டோக்கன் வழங்கியது, அங்கு வந்தவர்களுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இதுகுறித்து கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமாரிடம் கேட்டபோது, தாலிக்கு தங்கம் வழங்கும் விழாவில் சமுதாயம் வாரியாக பயனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கிறது தொடர்பாக, துறை சார்ந்த அலுவலர்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டது. இனி இதுபோன்ற தவறுகள் நடக்காது. உத்திரமேரூர் வட்டத்தை சேர்ந்த சிலருக்கு இதுபோல் நடந்துள்ளது. இனி இதுபோல் நடக்காது. இதுபற்றி எனது கவனத்துக்கு வந்தவுடன், அனைத்து அடையாள அட்டைகளையும் திரும்பப் பெற்று, துறை சார்ந்த அலுவலர்களை எச்சரித்தேன் என்றார்.

Tags : Gold Award Ceremony ,Social Welfare Department , Gold Award Ceremony on behalf of the Social Welfare Department: Controversy over caste name mentioned in token
× RELATED குழந்தைகள் இல்லத்தில் கலெக்டர் ஆய்வு