கோயம்பேடு மார்க்கெட்டில் ஆய்வு: வியாபாரிகளின் மனுக்களை பெற ஓபிஎஸ் மறுப்பு: சரமாரி கேள்வியால் திரும்பி சென்றார்

அண்ணாநகர்: கோயம்பேடு மார்க்கெட்டில் நேற்று ஆய்வு மேற்கொண்ட துணை முதல்வர் ஓபிஎஸ், தங்களின் குறைகளை கேட்காமல் திரும்பி சென்றதாக வியாபாரிகள் வேதனை தெரிவித்தனர். கொரோனா பரவல் காரணமாக கடந்த 8 மாதங்களுக்கு மேலாக மூடப்பட்ட கோயம்பேடு மார்க்கெட்,  பல்வேறு தளர்வுகளுக்கு பிறகு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று மதியம் திடீரென கோயம்பேடு மார்க்கெட் வந்து காய்கறி, பழம் மற்றும் உணவு தானிய கடைகளில் ஆய்வு மேற்கொண்டார். கோயம்பேடு நிர்வாக அலுவலர் கோவிந்தராஜன் உட்பட உயரதிகாரிகள் பலர் உடனிருந்தனர். அப்போது அங்கு கூடியிருந்த சிறு, குறு வியாபாரிகள் கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை துணை முதல்வரிடம் தர முற்பட்டனர்.

முதலில் அவற்றை வாங்க ஓபிஎஸ் மறுத்ததால், ஆத்திரமடைந்த வியாபாரிகள் எங்க மனுக்களை வாங்க மாட்டீர்களா என சரமாரியாக கேள்வி எழுப்பினர். அதன் பின்பு, வியாபாரிகளின் மனுக்களை விருப்பமின்றி  அவர் வாங்கினார். அதனைத்தொடர்ந்து, சம்பிரதாயத்திற்கு கோயம்பேடு மார்க்கெட்டை ஆய்வு செய்து விட்டு, அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.  இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில்,  ‘‘கோயம்பேடு மார்க்கெட்டுக்கு திடீரென வந்த ஓபிஎஸ் கடைகளை ஆய்வு செய்தார். இங்குள்ள வியாபாரிகள் மற்றும் கூலி தொழிலாளிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடுதல் உள்ளிட்ட  பல கோரிக்கைகளை அவரிடம் கூற இருந்தோம். ஆனால் அவர் எதையும் கேட்காமல், திடீரென புறப்பட்டு சென்றது ஏமாற்றத்தை தந்தது’’என்றனர்.

Related Stories:

More
>