உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா 3 லட்சம்: முதல்வர் எடப்பாடி உத்தரவு

விருதுநகர்: பட்டாசு தொழிற்சாலையில் நடந்த வெடி விபத்தில் உயிரிழந்த 11 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் வழங்க முதல்வர் எடப்பாடி உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:  விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை வட்டம் அச்சன்குளம் கிராம பட்டாசு தொழிற்சாலையில் நேற்று ஏற்பட்ட வெடி விபத்தில், பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 11 பேர் உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்த 11 பேரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும்,  அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வெடி விபத்தில் 36 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களுக்கு உயரிய சிகிச்சை அளிக்க மாவட்ட நிர்வாகத்திற்கும், மருத்துவமனை அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளேன்.

கோடைக்காலம் விரைவில் தொடங்க இருப்பதாலும், கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதாலும், பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வரும் தொழிற்சாலைகள் உரிய பாதுகாப்புடனும், கவனமாகவும் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட வேண்டும். மேலும், சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்கள் பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலைகளை அவ்வப்போது ஆய்வு மேற்கொண்டு தொழிலாளர்களின் பாதுகாப்பு  நடவடிக்கைகளை உறுதி செய்து கொள்ள வேண்டும்.இந்த விபத்து குறித்து உரிய விசாரணை மேற்கொண்டு, சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளேன்.

இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்ப நிலையினை கருத்தில் கொண்டு, அவர்களுக்கு தலா ரூ.3 லட்சமும், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சமும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories:

More
>