ஜவாஹிருல்லா குற்றச்சாட்டு அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைக்காக உபா சட்டம்

சென்னை: மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா நேற்று வெளியிட்ட அறிக்கை: மனித உரிமை போராளிகள், சமூக செயற்பாட்டாளர்கள் பல்வேறு உரிமைகளுக்காக போராடும் சாமானிய மக்கள்  மற்றும் பத்திரிகையாளர்கள் உபா எனும் சட்டவிரோத நடவடிக்கை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள். உபா சட்டம் அரசின் தவறுகளை சுட்டிக்காட்டுபவர்களை பழிவாங்கும் நோக்கிலும், குரலற்றவர்களின் குரலை நசுக்கும் நோக்கத்திற்காக மட்டுமே கொண்டு வரப்பட்டது. அதாவது 2016 முதல் 2019 வரை உபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்களில் 2.2% பேர் மீது மட்டுமே குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது என்பதும், மீதமுள்ள அப்பாவிகளான 97.8 விகிதத்தினர் சட்டத்திற்குப் புறம்பாகச் சிறையில் அடைத்து வைக்கப்பட்டு சித்ரவதை அனுபவிக்கின்றனர் என்பதும் தெள்ள தெளிவாகிறது.  

மத்திய உள்துறை இணை அமைச்சர் நாடாளுமன்றத்தில் அதிகாரபூர்வமாக தெரிவித்த இந்த ஒப்புதல் வாக்குமூலத்தின் மூலம் மத்திய அரசின் இந்த கொடூர உபா சட்டமானது பழிவாங்கும் நோக்கத்தில், பாசிச எண்ணத்துடன் கொண்டு வரப்பட்டது என்பது தெளிவாகிறது. அப்பாவிகள் மீது அநியாயமான முறையில் பாய்ந்து கொண்டிருக்கும் இந்த உபா சட்டம் இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில் நடைமுறையில் இருப்பது பெரும் இழுக்காகும். உபா சட்டத்தை ரத்து செய்து, சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்கள் மீது பதியப்பட்டுள்ள வழக்குகளத் திரும்பப்பெற வேண்டும்.

Related Stories:

>