×

தலைமை தேர்தல் ஆணையர் கண்டிப்பு எதிரொலி: தமிழகம் முழுவதும் ரவுடிகளை கைது செய்ய உத்தரவு: வாகன சோதனை நடத்தவும் நடவடிக்கை

சென்னை: சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர  ஓட்டலில் தமிழக அரசு அதிகாரிகள், வருமான வரித்துறை அதிகாரிகளுடன் தலைமை  தேர்தல் ஆணையர் சுனில் அரோரா மற்றும் தேர்தல் ஆணைய அதிகாரிகள் கடந்த 10,  11ம் தேதி ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனைக் கூட்டத்தின்போது வழக்கத்தை விட  அதிகாரிகள் மீது தலைமை தேர்தல் ஆணையர் கடுமையாக குற்றம்சாட்டி பேசினார்.  உள்துறைச்  செயலாளர் எஸ்.கே.பிரபாகரிடம், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு, மதுவிலக்கு  பிரச்னைகள் உள்ளன. நீங்கள் சரியாக கவனிக்கவில்லை. கண்காணிக்கவும் இல்லை.  உங்களுக்கு வேலை செய்யத் தெரியவில்லை. நீங்கள் எதற்கும் பயன் இல்லாத  அதிகாரி. சட்டம் ஒழுங்கும் மோசமாக உள்ளது. அதை எல்லாம் கண்காணிக்கவில்லை.  தமிழக போலீசில் அதிகாரிகளுக்கு ஏன் பதவி உயர்வு கொடுக்கவில்லை. தேர்தல்  நெருங்குகிறது. இனி ஒரு வாரத்தில் அவர்களுக்கெல்லாம் பதவி உயர்வு உங்களால்  வழங்க முடியுமா? தேவையில்லாமல் போலீசில் உயர் அதிகார மட்டத்திலான பதவியை  காலியாக ஏன் வைத்துள்ளீர்கள் என்று சரமாரியாக கேள்விகளை கேட்டு  துளைத்தெடுத்துள்ளார்.

அதேபோல, தமிழக டிஜிபி திரிபாதியைப் பார்த்து,  தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மோசமாக உள்ளது. ரவுடிகள் சுதந்திரமாக  சுற்றுகின்றனர். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவில்லை. முன்னெச்சரிக்கை நடவடிக்கையை ஏன் எடுக்கவில்லை.  எனக்கு சட்டம் ஒழுங்கு பணியில் திருப்தியில்லை என்று கடுமையாக கூறினார்.  ஆனால் சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபியிடம் இது குறித்து ஒரு கேள்வி கூட  கேட்கவில்லை. பின்னர் மதுவிலக்கு சிறப்பு டிஜிபி ஷகீல் அக்தரைப் பார்த்து,  தமிழகத்தில் கள்ளச்சாரயம் அதிகமாக விற்பனையாகிறது. அது தொடர்பாக சரியாக  நடவடிக்கை எடுக்கவில்லை. போலி மது விற்பனை செய்யும் பெரிய விஐபிக்களை கைது  செய்யவில்லை. எளியவர்களைத்தான் கைது செய்துள்ளீர்கள். உங்களிடம் தெளிவான  விளக்கம் இல்லை. தேர்தல் நேரத்தில் அதிக அளவில் மதுவை பலர் வாங்கி பதுக்கி  வைத்துள்ளனர். தேர்தல் நேரத்தில் அவற்றை பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக  கூறப்படுகிறது  என்று சரமாரியாக கேள்விகளை எழுப்பினார் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா.

பின்னர்  தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சனிடம் நான் சொன்ன குற்றச்சாட்டுகள்  அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி அறிக்கை அளிக்க வேண்டும் என்று கேட்டுக்  கொண்டார். அதைத் தொடர்ந்து, தலைமைச் செயலகத்தில் உள்துறைச் செயலாளர்  எஸ்.கே.பிரபாகர் மற்றும் பல்வேறு துறைகளின் செயலாளர்கள், சட்டம் ஒழுங்கு  டிஜிபி திரிபாதி, சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ், சென்னை போலீஸ் கமிஷனர்  மகேஷ்குமார் அகர்வால் மற்றும் உயர் ேபாலீஸ் அதிகாரிகளுடன் தலைமைச் செயலாளர்  ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில், தமிழகம் முழுவதும் ரவுடிகளின்  பட்டியலை தயாரித்து, அவர்களை கைது செய்ய வேண்டும் என்று தலைமைச் செயலாளர்  உத்தரவிட்டுள்ளார். அதைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் உள்ள போலீஸ்  கமிஷனர்கள், எஸ்பிக்களுக்கு டிஜிபி திரிபாதி வெளியிட்டுள்ள உத்தரவில்,  மாநிலம் முழுவதும் காவல்நிலையங்களில் குற்றப்பதிவேட்டில் உள்ள ரவுடிகளை  கைது செய்ய வேண்டும்.

தவறு செய்யாத ரவுடிகளை குற்றவியல் நடைமுறைச் சட்டம்  110 பிரிவின் கீழ் பிடித்து வருவாய்துறை அதிகாரிகள் முன்பு ஆஜர்படுத்த  வேண்டும். அதன்பின்னரும் அவர்கள் தவறு செய்தால் உடனடியாக சிறையில் அடைக்க  உத்தரவிட வேண்டும். மாநிலம் முழுவதும் போலி மதுபானங்கள் விற்பனை, பதுக்கல்  குறித்து விசாரிக்க வேண்டும். இரவு நேரத்தில் வாகனச் சோதனையை தீவிரப்படுத்த  வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுக்க  உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவுகளைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் குற்றவாளிகள், ரவுடிகள் மீதான நடவடிக்கையை போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர்.

Tags : Chief Election Commissioner ,Tamil Nadu , Chief Electoral Commissioner Strict Echo: Order to arrest rowdies across Tamil Nadu: Action to conduct vehicle check
× RELATED மதுபானம், பணம், பரிசுப் பொருட்கள்,...