×

கிராம சபை கூட்டங்களை நடத்தக்கோரி திமுக, மநீம வழக்கில் பதில்தர அரசுக்கு இறுதி கெடு: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: தமிழ்நாடு பஞ்சாயத்து சட்டப்படி, கிராம சபை கூட்டம் ஆண்டுக்கு நான்கு முறை ஜனவரி 26, மே 1, ஆகஸ்ட் 15, அக்டோபர் 2 ஆகிய தேதிகளில் நடத்த வேண்டும். ஆனால், கொரோனா ஊரடங்கு விதிகளால் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி மற்றும் அக்டோபர் 2ம் தேதி நடத்த வேண்டிய கிராம சபை கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டன. இதை எதிர்த்தும், கிராம சபை கூட்டங்களை நடத்தவும் அரசிற்கு உத்தரவிடக்கோரி திமுக தரப்பில் முதன்மை செயலாளர் கே.என்.நேரு, மக்கள் நீதி மய்யம் சார்பில் பொதுச் செயலாளர் ஏ.ஜி.மவுரியா ஆகியோர்  பொதுநல மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்குகளில் தமிழக அரசு பதிலளிக்குமாறு தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்குகள் தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தன. தமிழக அரசு தரப்பில், ஒவ்வொரு ஆண்டும் நான்கு முறை கிராம சபை கூட்டங்கள் நடத்தப்பட்டு வந்தது.  கொரோனா ஊரடங்கு  காரணமாகதான் கடந்த ஆண்டு நடத்தப்படவில்லை. தற்போது நிலைமை சீராக இருந்து வருவதால், கிராம சபை கூட்ட விதிகள் முறையாக பின்பற்றப்படும். இந்த வழக்கில் பதிலளிக்க அவகாசம் வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இதையேற்று, பதில் மனுதாக்கல் செய்ய ஒரு வார கால இறுதி அவகாசம் வழங்கப்படுகிறது. அவ்வாறு தாக்கல் செய்யாவிட்டால் பதில் மனு இல்லாமலேயே வழக்குகள் விசாரிக்கப்படும் என்று தெரிவித்து வழக்கை 2 வாரங்களுக்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.

Tags : government ,DMK ,village council meetings ,High Court , Final deadline for respondent government in DMK, Manima case to hold village council meetings: High Court order
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மீனவ...