×

நிறைவேற்றாத வாக்குறுதிகள் சின்னாபின்னமான சிவகங்கை: சிவகங்கை தொகுதி எம்எல்ஏ, அமைச்சர் பாஸ்கரன்

தமிழகத்தில்  ‘வானம் பார்த்த பூமி’ என்  சிவகங்கை தொகுதியை குறிப்பிடலாம்.  விவசாயமே  இப்பகுதி மக்களின் முக்கிய வாழ்வாதாரமாக உள்ளது. தொழிற்சாலைகள் மற்றும்  பெரிய அளவு தொழில்கள் இல்லாத நிலையில், பல ஆண்டுகளாக வறட்சியால் விவசாயமும்  பொய்த்து வருகிறது. இம்மாவட்டத்தின் முக்கிய தொழிலாதாரமாக கருதப்படும், சிவகங்கை  கிராபைட் தொழிற்சாலை போதிய விரிவாக்கமில்லை. மதுரை - தொண்டி ரயில் பாதை  வசதி, விரிவடைந்த சாலை போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு திட்டங்களும்,  கட்டமைப்புகளும் மேம்படவில்லை.

அமைச்சராக இருந்தும்...
சிவகங்கை தொகுதி அதிமுக எம்எல்ஏ  பாஸ்கரன். அமைச்சராக இருந்தும், தொகுதி வளர்ச்சிக்கு  சொல்லிக்  கொள்ளும்படியான எந்த திட்டமும் இவரால் கொண்டு வரப்படவில்லை. சிவகங்கை அருகே  மிளகாய், வாசனை பொருட்களை பதப்படுத்தி ஏற்றுமதி செய்வதற்காக  உருவாக்கிய ஸ்பைசஸ் பார்க்கை மேம்படுத்துவேன் என வாக்குறுதி அளித்தார்.  ஆனால், இதை அப்படியே கண்டுகொள்ளாமலேயே விட்டு விட்டார்.

வேலைவாய்ப்பின்றி தவிப்பு...
வேலைவாய்ப்பின்றி  இப்பகுதி இளைஞர்கள் திருப்பூர், சென்னை, கோவை மற்றும் வெளிமாநிலம், வெளிநாடுகளுக்கு  செல்கின்றனர். இளைஞர்கள் வேலைவாய்ப்பிற்கு வழி செய்வேன் என்ற அமைச்சர்,  தொகுதியை விட்டு வெளியேறிச் செல்லும் இளைஞர்களை வெறும் ‘வேடிக்கை’ மட்டுமே  பார்த்து வருகிறார். சிவகங்கை, காளையார்கோவில் தொழில் வளர்ச்சிக்கு  விரிவடைந்த தொழிற்பேட்டைகள், கிராபைட் ஆலை விரிவாக்கம், காளையார்கோவிலில்  அரசு கலைக்கல்லூரி, சிவகங்கையில் பொறியியல் கல்லூரி, சட்டக்கல்லூரி, மதுரை -  தொண்டி ரயில் பாதை திட்டம், வரலாற்று சிறப்புமிக்க கம்பர், மருதுபாண்டியர்  நினைவிட சுற்றுலா மேம்பாடு என இத்தொகுதி மக்களின் நீண்டநாள்  எதிர்பார்ப்புகளை எல்லாம் கல்யாண வீட்டு மளிகை சாமான்கள் போல பட்டியலிட்டு,  அமைச்சர் பாஸ்கரன் தேர்தல் வாக்குறுதிகளை போகும் இடங்களில் எல்லாம் அள்ளிக்  கொட்டினார். நிறைவேற்றவில்லை.

தரமற்ற சாலைப்பணி...
இத்திட்டங்கள் வாக்குறுதிகளாக மட்டுமே இப்போது வரை  இருக்கிறது. கம்பன் நினைவிடம் செல்லும் கண்டனிப்பட்டி சாலை கடந்த 10  ஆண்டுகளாக கண்டுகொள்ளப்படவில்லை. இந்த சாலை சேதமடைந்து போக்குவரத்தும்  துண்டிக்கப்பட்டுள்ளது. நகருக்குள் காந்தி வீதி, ரயில்வே மேம்பாலம் கீழ்புற  சாலைகள் போக்குவரத்திற்கு லாயக்கற்று இருக்கிறது. கிராமச்சாலைகள்  குண்டும், குழியுமாக உள்ளது. தேர்தலுக்காக தற்போது சில இடங்களில் நடத்தும்  சாலைப்பணிகளும் தரமற்று உள்ளன. பெரியாறு அணை, வைகை அணையிலிருந்து  சிவகங்கை மாவட்டத்திற்கான பங்கு நீர் கிடைக்க அமைச்சர் குரல் எழுப்பவில்லை. சிவகங்கை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை மேம்படுத்தும்  வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. அமைச்சர் என்பதால் தனக்கே இத்தொகுதியில்  சீட் என நம்பிக்கையோடு காத்திருக்கிறார். ‘‘வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாம, தொகுதியை சின்னாபின்னமாக்கிட்டாரே’’ என  தொகுதி மக்கள் புலம்புகின்றனர்.

‘பயிர்களுக்கு காப்பீடு...  ழைகளுக்கு பட்டா...’
அமைச்சர்  பாஸ்கரன் கூறும்போது, ‘‘சிவகங்கை அருகே அரசனூர் பகுதியில் தொழிற்பேட்டை  அமைக்க சர்வே பணிகள் முடிந்துள்ளன. அடுத்தகட்ட பணிகள் தொடங்க உள்ளன.  ரூ.1,800 கோடியில் குடிநீர் திட்டப்பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. கிராமங்களில்  ரேஷன் கடைகள், நாடக மேடை உள்ளிட்ட கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன.  கண்மாய், குளங்கள் தூர்வாரும் பணிகள் செய்யப்பட்டுள்ளன. அரசு கல்லூரி  அமைப்பது குறித்து முதல்வரிடம் பேசியுள்ளேன். பயிர்கள் பாதிப்பிற்கு உரிய  இழப்பீடு பெற்றுத் தரப்பட்டுள்ளது. தற்போது மழையால் பாதிக்கப்பட்ட  பயிர்களுக்கு இழப்பீடு பெற்றுத்தர விரைந்து நடவடிக்கை எடுத்து வருகிறேன்.  ஏராளமான ஏழை, எளிய மக்களுக்கு வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளது’’  என்றார்.

‘வளர்ச்சி திட்டங்களை கொண்டு வரவில்லை’
2016 தேர்தலில் சிவகங்கை  தொகுதியின் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் குணசேகரன் கூறும்போது,  ‘‘அமைச்சராக இந்த  தொகுதிக்கு எந்த உருப்படியான வளர்ச்சி திட்டங்களும் கொண்டு வரவில்லை.  கிராபைட் தொழிற்சாலை மூடப்படும் நிலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.  ஸ்பைசஸ் பார்க் முடக்கப்பட்டுள்ளது. சிவகங்கை பாதாள சாக்கடை திட்டம்  ஏற்கனவே 98 சதவீத பணிகள் முடிக்கப்பட்ட நிலையில் கடந்த ஐந்து ஆண்டுகளாக  தொடர்ந்து இழுபறி நிலையிலேயே உள்ளது. அரசனூர் தொழிற்பேட்டை அமைப்பு பணிக்கு  பெரும் முயற்சி எடுத்தும், தொடர்ந்து பணிகள் நடக்கவில்லை. சோலார் ஆய்வுமைய  திட்டத்ததை செயல்படுத்தவில்லை. திமுக ஆட்சி காலத்தில் அறிவிக்கப்பட்ட  12 கிமீ ரிங் ரோடு திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. புதிய அரசு கல்லூரிகள்  திறக்கப்படவில்லை. ஏற்கனவே உள்ள கல்லூரிகளிலும் மேம்பாடு பணிகள்  நடக்கவில்லை’’ என்றார்.

Tags : Baskaran ,constituency ,Sivagangai ,MLA , Unfulfilled promises Sivagangai iconic: Sivagangai constituency MLA, Minister Baskaran
× RELATED ஓடும் பஸ்சில் இருக்கையோடு தூக்கி வீசப்பட்ட கண்டக்டர்