×

தர்மயுத்தத்தின்போது உடன் இருந்த கே.பி.முனுசாமியின் மனமாற்றம் கவலையில் ஓபிஎஸ்

தர்ம யுத்தத்தில் ஆதாயம் அடைந்தது கேபி முனுசாமி மட்டும் தான் என மன உளைச்சலில் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகத்தில் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுகவில் பல மாற்றங்கள் அரங்கேறின. சசிகலாவை எதிர்த்து ஓபிஎஸ் தர்மயுத்தம் நடத்தினார். இதற்கு மூளையாக செயல்பட்டது கேபி முனுசாமி என்பது அனைவரும் அறிந்ததே. ஓபிஎஸ், இபிஎஸ் அணி இரண்டு அணிகளாக செயல்பட்டபோது ஓபிஎஸ் அணி சார்பில் அனைத்து கட்ட பேச்சுவார்த்தைகளிலும் கேபி முனுசாமி கலந்துகொண்டு ஓபிஎஸ்சுக்கு ஆதரவாக பேசினார். அதன் பிறகு இரண்டு அணிகளும் இணைந்த பின்னர் கட்சியில் ஓபிஎஸ், இபிஎஸ் என இருவருக்கும் அடுத்தபடியாக மூன்றாவது பொறுப்பில் கே.பி. முனுசாமி அமர்த்தப்பட்டார். அதன் பிறகு தொடர்ந்து இபிஎஸ் அணியைச் சேர்ந்த மந்திரிகள் பலருடனும் நெருக்கமான தொடர்பை ஏற்படுத்தி கொண்டார். குறிப்பாக அவரது சொந்த ஊரான கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அனைத்து பணம் வரும் தொழில்களும் கே.பி.முனுசாமி மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு வழங்கப்பட்டன.

 இதை தாமதமாக தெரிந்து கொண்ட ஓபிஎஸ், கே.பி.முனுசாமி நடவடிக்கையில் சந்தேகம் அடைந்தார். அவரது அணியினரும் அவரை உற்று நோக்க ஆரம்பித்தனர். அப்போதுதான் பல அதிர்ச்சியூட்டும் உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்தன. இதுகுறித்து பெயர் சொல்ல விரும்பாத ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த ஒருவர் கூறுகையில், ‘கடந்த சில மாதங்களாகவே ஓபிஎஸ் மிகுந்த மன உளைச்சலில் உள்ளார். இதற்கு காரணம் அவர் பெரிதும் நம்பிய கே.பி. முனுசாமி ஓபிஎஸ்க்கு  துரோகம் செய்ததால்தான். ஆரம்ப காலகட்டத்தில் இருந்தே முனுசாமி நடவடிக்கைகள் சரியில்லை என நாங்கள் பலரும் ஓபிஎஸ் இடம் தெரிவித்தோம். ஆனால் அவர் அப்படி எல்லாம் ஒன்றும் இருக்காது அவரைப் பற்றி எனக்கு நன்றாகத் தெரியும். நீங்கள் உங்கள் வேலையை பாருங்கள் என்று கூறி தட்டிக் கழித்தார்.  ஆனால் தற்போது தனது நெருங்கிய வட்டாரத்தில் உள்ளவர்களிடமும் வெளிப்படையாக இவர் ஏன் இப்படி மாறி விட்டார். நான் இவரிடம் ஒரு விஷயத்தைக் கூறி. இதை முடித்து வாருங்கள் என கூறினால், இவர் அவர்களிடம் சென்று பேசுகிறார்.

பின்னர் அவர்கள் கூறுவதை வந்து அப்படியே என்னிடம் கூறி, என்னை சமாதானப் படுத்தி வருகிறார் எனக் கூறி வருத்தப்படுகிறார். அந்த அளவிற்கு கே.பி. முனுசாமி செயல்பாடுகளால் ஓபிஎஸ் அதிர்ந்து போயுள்ளார். குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் ஜனவரி மாதம் ஓபிஎஸ்சை நேரில் சென்று தேனியில் சந்தித்துவிட்டு வந்த கேபி முனுசாமி அதன் பிறகு யாருக்கும் தெரியாமல் தனது டிரைவரை கூட மாற்றி வேறு ஒருவரை வண்டியை ஓட்டச் சொல்லி சேலம் சென்று முதல்வரை சந்தித்து விட்டு வந்துள்ளார். அங்கு சுமார் இரண்டரை மணிநேரம் முதல்வருடன் பேச்சுவார்த்தை நடந்துள்ளது. அதன்பிறகு கே.பி.முனுசாமி செயல்பாடுகளில் மாற்றம் தெரியவந்துள்ளது. குறிப்பாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அவரது மகன் சதீஷூக்கு வருகின்ற சட்டமன்ற தேர்தலில் சீட்டை உறுதி செய்துள்ளார். மேலும் அவரை பொதுக்குழு உறுப்பினராக்கியுள்ளார்.

 தற்போது அதிமுகவில் மாவட்ட செயலாளர்களை மாற்றியமைத்தபோது சென்னையின் ஒதுக்குப்புறமாக உள்ள ஒரு மாவட்டத்திற்கு அவரது சமூகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு ஆதரவாக செயல்பட்டு மாவட்ட செயலாளர் பதவி வாங்கி கொடுத்துள்ளார். இதேபோன்று, முருகர் பெயரைக்கொண்ட ஒருவருக்கும் மாவட்ட செயலாளர் பதவி வாங்கி கொடுத்துள்ளார். இதேபோன்று, வேலூரில் தனது சமூகத்தை சேர்ந்த ஒருவருக்கு மாவட்ட செயலாளர் பதவி வாங்கி கொடுத்துள்ளார். இதற்காக அவரது எதிர்பார்ப்பை ெபரிய அளவில் மாவட்டச் செயலாளர்கள் பூர்த்தி செய்துள்ளனர். இவ்வாறு கேபி முனுசாமி யாரை கை காட்டுகிறாரோ அவர்களுக்கெல்லாம் மாவட்ட செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. அந்த அளவிற்கு இபிஎஸ் அணி யுடன் நெருங்கி பழகி வருகிறார். இவரின் செயல்பாடுகளால் அதிர்ச்சி அடைந்த மனோஜ் பாண்டியன் எப்பொழுது ஓபிஎஸ் வீட்டிற்கு வந்தாலும் கே.பி.முனுசாமி வீட்டிற்கு சென்று, அதன்பின்னர் இருவரும் சேர்ந்துதான் ஓபிஎஸ் வீட்டிற்கு செல்வார்கள்.

 ஆனால் சமீப காலமாக மனோஜ் பாண்டியன் தனியாகவே ஓபிஎஸ் வீட்டிற்கு சென்று வருகிறார். மேலும் இபிஎஸ்க்கு நெருக்கமான அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் காரின் முன் இருக்கையில் அமர்ந்து கொண்டு செல்லும் அளவிற்கு கே.பி.முனுசாமியின் செயல்பாடுகள் ஓபிஎஸ்க்கு மனவேதனையை அளித்துள்ளது. மேலும் சேலத்தைச் சேர்ந்த தமிழ்நாடு கூட்டுறவு வங்கியில் உயரிய பொறுப்பில் உள்ள ஒரு நபரிடம் தொடர்ந்து முனுசாமி பல விவகாரங்களில் கைகோர்த்து செயல்படுவதாகவும் ஓபிஎஸ் க்கு தொடர்ந்து பல தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன. இது குறித்து ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பலர் நாம் எதற்காக தர்மயுத்தம் நடத்தினோம். உங்களை வைத்தே, உங்களது வாயால் முதலமைச்சர் வேட்பாளரை அறிவிக்க வைத்துவிட்டார் முனுசாமி. இது நியாயம் தானா எனக்கூறி சங்கடப்பட்டுள்ளனர். அதற்கு ஓபிஎஸ் இன்னும் 15 நாட்கள் பொறுத்திருங்கள் எனக்கூறி தனது ஆதரவாளர்களை சமாதானப்படுத்தியுள்ளார். இவ்வாறு ஆரம்பத்தில் சிறுசிறு பிரச்சனைகளாக தொடங்கிய இந்த விவகாரம்  தற்போது ஓபிஎஸ் க்கும் கேபி முனுசாமி க்கும் இடையே விஸ்வரூபம் எடுத்துள்ளது.

இதுமட்டுமன்றி சமீபத்தில் சசிகலா, பெங்களூருவில் இருந்து சென்னை நோக்கி வந்த போது எம்ஜிஆர் இளைஞர் அணி சூளகிரி கிழக்கு ஒன்றிய செயலாளர் சம்பங்கி என்பவரது காரை பயன்படுத்தினார். இவர் கேபி முனுசாமியின் தீவிர ஆதரவாளர். இவவாறு ஆரம்பம் முதல் கடைசியாக நடந்து முடிந்த சம்பவம் வரை அனைத்திலும் கேபி முனுசாமியின் செயல்பாடுகளில் மர்மம் உள்ளதாகவும் விரைவில் கே.பி.முனுசாமி விவகாரத்தில் ஒரு நல்ல முடிவு எடுக்கப்படும் எனவும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Tags : KP Munuswamy ,Dharmayutham ,conversion , KP Munuswamy, who was with him during the Dharmayutham, is worried about his conversion
× RELATED ஒழுக்கமான கட்சிக்கு பயம் ஏன்? எங்களை...