×

கள்ளக்குறிச்சியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேச்சு: அதிமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை

சென்னை: ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்ச்சி கள்ளக்குறிச்சி திமுக சார்பில் உளுந்தூர்பேட்டையில் நடந்தது. இதில் கலந்துகொண்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு திமுக பொறுப்பாளர்கள் உதயசூரியன் எம்எல்ஏ, வசந்தம் கார்த்திகேயன் எம்எல்ஏ ஆகியேர் வெள்ளி செங்கோலை பரிசாக வழங்கினர். பல்வேறு பகுதிகளில இந்து தொண்டர்கள், பொதுமக்கள் அதிகளவில் வந்ததால் கூட்டம் நிரம்பி வழிந்தது. கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: பட்டியலின, மிகவும் பிற்படுத்தப்பட்ட என சமூக நீதிக்காக பாடுபட்ட இயக்கம் திமுக. கால் நூற்றாண்டு வளர்ச்சி எல்லாம் தன்னுடைய 3 ஆண்டு சாதனையாக கூறி வருகிறார். பழைய கிளினிக்கில் பச்சை பெயிண்ட் அடித்து மினி கிளினிக் என புதிதாக திறக்கின்றனர்.  பெண்களுக்கு பாதுகாப்பான நகரங்களில் சென்னை, கோவையும் இருப்பதாக கூறி வருகின்றனர். எவ்வளவு பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்பதற்கு பொள்ளாச்சி சம்பவம் ஒன்று போதும். ஊழலில் தான் முதலிடத்தில் உள்ளது. விளம்பரத்தில் வெற்றிநடைபோடும் தமிழகம் என்கிறார்கள். அது வெற்றுநடைதான். கெத்து நடைபோட திமுகவினால் மட்டும்தான் முடியும். திமுக ஆட்சியை அமையும், மக்கள் கவலை தீரும். என பேசினார்.

முன்னதாக விழுப்புரம் மாவட்டம் காணை ஒன்றியம் குப்பம் ஊராட்சியில் நடந்த பிரசார கூட்டத்தில், மு.க.ஸ்டாலின் பேசியதாவது:  தமிழகத்தில் நடைபெறுகிற எடப்பாடி பழனிசாமி ஆட்சி ஒரு ஊழல் ஆட்சி. விழுப்புரத்திலேயே அதற்கு ஒரு உதாரணம் இருக்கிறது. பொதுப்பணித்துறை சார்பில் எனதிரிமங்கலத்தில் ₹25 கோடி செலவில் ஒரு தடுப்பணை கட்டப்பட்டது. அந்த அணை உடைந்து போனது. இந்த தொகுதியில் உள்ள அமைச்சர் என்ன சொன்னார்? அணை உடையவில்லை. சுவர்தான் உடைந்தது என்று சொன்னார். ஆனால் ராத்திரியில் அணை, காலையில் சுவர் என்று மாற்றி மாற்றி பேசினார். கடைசியில் அணையே திறக்கவில்லை என்று சொன்னார். இந்த 25 கோடியில் எவ்வளவு கோடிக்கு ஊழல் நடந்தது என தெரியவில்லை.

 அணை உடைந்ததும் திருடனுக்கு தேள் கொட்டியதுபோல மாட்டிக்கொண்டனர். அணையே திறக்கவில்லை என்று சொன்ன சி.வி.சண்முகம் அணையை திறந்து வைக்கும் வீடியோ காட்சியை பாருங்கள். (தொடர்ந்து அந்த வீடியோ காட்சி பொதுமக்களுக்கு ஒளிபரப்பு செய்யப்பட்டது.) பார்த்தீர்களா? அணையை திறந்து வைத்து விட்டு அண்ட புளுகு ஆகாச புளுகாக பேசியுள்ளார். சி.வி.சண்முகம் பகலில் ஒரு பேச்சு, ராத்திரியில் ஒரு பேச்சு பேசுபவர். எனதிரிமங்கலத்தில் அணையே கட்டவில்லை என சொல்வார். படத்தில் வடிவேல் கிணற்றை காணோம், கிணற்றை காணோம் என்று சொல்வது போல பேசுவார். அதிகாரிகள் மீது கண் துடைப்புக்காக நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஒப்பந்ததாரர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. குளித்து முடித்துவிட்டு கோயிலுக்கு சென்று வரும் யானை எதிரே சாக்கடையில் புரண்டு விட்டு வரும் பன்றியை பார்த்து ஒதுங்கி போகிறது.

ஏனெனில் சாக்கடை அதன் மேல் பட்டுவிடக்கூடாது என்பதற்காகதான். சி.வி.சண்முகத்திடம் பத்திரிகையாளர்கள் மைக் நீட்டுவது பேசுவதற்காகத்தான். வாந்தி எடுக்க அல்ல. தற்போது, உங்கள் அமைச்சர், நந்தன் கால்வாய் திட்டம் செயல்படுத்தப்படும் என்றார்களே, ஒரு துரும்பையாவது கிள்ளி போட்டீர்களா?. விரிவுபடுத்தப்பட்ட பாதாள சாக்கடை திட்டம், விழுப்புரம் நகராட்சிக்கு சிறப்பு அந்தஸ்து, போக்குவரத்து நெரிசலை குறைக்க சுற்றுவட்டச்சாலை என எதையுமே செய்யவில்லை. இன்னும் 3 மாதத்தில் கோட்டையை தி.மு.க. மீட்க போகிறது. உங்கள் பிரச்னை தீரும். இவ்வாறு அவர் பேசினார்.

பழ.நெடுமாறன் நலம் பெற வேண்டும்
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முகநூல் பதிவு: தமிழர் தேசிய முன்னணித் தலைவரும், ஈழத் தமிழர்களின் உரிமைகளுக்காக நீண்ட நெடிய காலமாகப் போராடியும், குரல் கொடுத்து வருபவருமான மூத்த தலைவர்  பழ.நெடுமாறனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்துள்ள செய்தி அறிந்து மிகுந்த வேதனைக்கு உள்ளானேன்.சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கும் அவர் விரைவில் நலம்பெற விழைகிறேன்.

அதிமுக ஆட்சியில் பட்டாசு விபத்து சாதாரணம்
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: சாத்தூர் அருகே உள்ள அச்சங்குளத்தில் இருக்கும் பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடி விபத்தில் பள்ளி மாணவி உள்பட 11 பேர் பலியாகியிருப்பது பேரதிர்ச்சியையும் பெருந்துயரத்தையும் அளிக்கிறது. உயிரிழந்த அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அவர்களின் குடும்பத்தினருக்கு எனது அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். பட்டாசு தொழிற்சாலைகளில் வெடி விபத்துக்கள் என்பது அதிமுக ஆட்சியில் சர்வ சாதாரணமாகி விட்டது. இதற்கு முன் பல முறை இதுபோன்ற வெடி விபத்துக்கள் நிகழ்ந்து-உயிரிழப்புகள் ஏற்பட்டபோதும் பட்டாசு தொழிற்சாலைகளின் பாதுகாப்பு குறித்து அதிமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காதது மிகுந்த கண்டனத்திற்குரியது.


Tags : MK Stalin ,DMK ,Women ,speech ,Kallakurichi ,AIADMK , DMK leader MK Stalin's speech in Kallakurichi: Women are not protected in the AIADMK regime
× RELATED முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி...