×

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ரேஷன் கடை ஊழியர்கள் வேலைநிறுத்தம்: விரைவில் தீர்வு காண்பதாக அரசு உறுதி

சென்னை: தமிழ்நாடு கூட்டுறவு நியாயவிலை கடை ஊழியர்களின் அனைத்து தொழிற்சங்க  கூட்டமைப்பு நிர்வாகிகளின் அவசர கூட்டம் கடந்த வாரம் சென்னையில் நடந்தது. இந்த கூட்டத்தில் தொமுச,  சிஐடியு, தமிழ்நாடு அரசு கூட்டுறவு நியாயவிலை கடை பணியாளர் சங்கம்,  ஏஐடியுசி, ஐஎன்டியுசி, டிடியுசி, அம்பேத்கர் சங்கம், ஜெஎம்எஸ், போக்குவத்து  மற்றும் பொது தொழிலாளர்கள் சங்கம், எரிவாயு பணியாளா–்கள் சங்கம் ஆகிய  தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொணடனர்.இந்த கூட்டத்தில், ரேஷன் கடை ஊழியர்களின் கோரிக்கையை அரசு நிறைவேற்றும் வரை 12ம் தேதி (நேற்று) சென்னை, கீழ்ப்பாக்கத்தில் உள்ள மாநில கூட்டுறவு பதிவாளர் அலுவலகத்தில் காலை 10 மணியில் இருந்து ஊதிய உயர்வு அறிவிப்பை தமிழக அரசு வெளியிடும் வரை காலவரையற்ற போராட்டம் நடத்துவது என ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டது.

அதன்படி, நேற்று காலை 10 மணி முதல் சென்னை, கீழ்ப்பாக்கத்தில் உள்ள பதிவாளர் அலுவலகத்தில் ரேஷன் கடை ஊழியர்கள் கால வரையற்ற போராட்டத்தை தொடங்கினர். இதில், கன்னியாகுமரி, கோவை, தேனி, தூத்துக்குடி, விழுப்புரம், திருச்சி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் என தமிழகம் முழுவதும் இருந்து சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்க நிர்வாகிகளை கூட்டுறவு பதிவாளர் அழைத்து பேசினார். அப்போது, ‘‘தமிழக அரசு ரேஷன் கடை ஊழியர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவது குறித்து பரிசீலித்து வருகிறது. வருகிற திங்கள் அல்லது செவ்வாய் நல்ல தீர்வு கிடைக்கும்’’ என்று உறுதி அளித்தார். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டு ஊழியர்கள் கலைந்து சென்றனர்.

Tags : Ration shop workers ,Government , Ration shop workers strike over various demands: Government promises to resolve the issue soon
× RELATED ஒன்றிய அரசு குறித்து அமெரிக்கா மீண்டும் விமர்சனம்