×

பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: 17 பேர் பலி: சாத்தூர் அருகே சோகம்

விருதுநகர்: சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் நடந்த பயங்கர வெடி விபத்தில் 7 மாத கர்ப்பிணி உள்பட 17 பேர் பலியாகினர். தீயில் கருகியதால் பல உடல்களை அடையாளம் காணமுடியவில்லை. 31 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே அச்சங்குளம் கிராமத்தில் ஏழாயிரம்பண்ணையை சேர்ந்த சந்தனமாரி என்பவருக்கு சொந்தமான மாரியம்மாள் பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. பேன்சி ரக பட்டாசு தயாரிப்பு உரிமம் பெற்ற இந்த ஆலையை விஜயகரிசல்குளத்தை சேர்ந்த சக்திவேல் உட்பட 4 பேருக்கு குத்தகைக்கு விட்டுள்ளார். ஆலையில் 20 அறைகளில் பட்டாசு தயாரிக்கப்பட்டு வந்தது. இங்கு நேற்று, 89 பேர் வேலை பார்த்துள்ளனர். ஆலை போர்மேன் விஜயகுமார் பேன்சி ரக பட்டாசுகளுக்கு நேற்று மதியம் மணி மருந்து கலக்கும்போது ஏற்பட்ட உராய்வினால் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் ஏற்பட்ட பயங்கர தீ மளமளவென அடுத்தடுத்த அறைகளுக்கு பரவி 13 அறைகள் வெடித்து தரைமட்டமானது. சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். தீயில் சிக்கிய தொழிலாளர்களின்அபாய குரல் கேட்டு அதிர்ச்சியடைந்தனர்.

தகவலறிந்ததும் சாத்தூர், வெம்பக்கோட்டை தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்து இடிபாடுகளில் சிக்கி இருந்தவர்கள் உடல்களை மீட்டனர். பட்டாசு ஆலையில் உடல் கருகி அடையாளம் தெரியாத அளவில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். சிவகாசி அரசு மருத்துவமனையில் சின்னதம்பி (32), ரெங்கராஜ் (57), ரவிச்சந்திரன் (40), செல்வி, கண்ணன் உட்பட 8 பேர் உயிரிழந்துள்ளனர். மதுரை சிகிச்சைக்கு கொண்டு செல்லும் வழியில் 7 மாத கர்ப்பிணி கற்பகவள்ளி (22) உயிரிழந்தார். இதுவரை விபத்தில் மொத்தம் 17 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 7 பேரின் உடல் அடையாளம் காணப்பட்டுள்ளது. மீதமுள்ளவர்கள் அடையாளம் காண முடியாத அளவிற்கு உடல் கருகி கிடக்கின்றனர். சாத்தூர் அரசு மருத்துவமனையில் 22 பேரும், சிவகாசி அரசு மருத்துவமனையில் 7 பேரும், கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் 2 பேர் என 31 பேர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து நடந்த இடத்தை விருதுநகர்  கலெக்டர் கண்ணன், மதுரை சரக டிஐஜி ராஜேந்திரன் ஆய்வு செய்தனர். பட்டாசு ஆலை வெடி விபத்து தொடர்பாக 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அடையாளம் காண்பதில் சிரமம்
விருதுநகர் மாவட்ட கலெக்டர் கண்ணன் கூறுகையில், ‘‘அச்சங்குளம் கிராமத்தில் நடந்த பட்டாசு ஆலை விபத்தில் காயமடைந்த 24 பேர் சாத்தூர் அரசு மருத்துமனைக்கு கொண்டு வரப்பட்டனர். இதில் 60 சதவீதத்திற்கு மேல் காயமிருந்த 14 பேர் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 9 பேர் சிவகாசிக்கும், ஒருவர் விருதுநகர் அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர். இறந்தவர்களின் உடல்களை விரைந்து பிரேத பரிசோதனை நடத்தி உறவினர்களிடம் வழங்கப்படும். சில உடல்களை வைத்து அது ஆணா, பெண்ணா என்பதை அடையாளம் காண முடியாத நிலை ஏற்பட்டது. உறவினர்களை வைத்து சரி பார்க்கப்படுகிறது’’ என்றார்.

தடை செய்யப்பட்ட கெமிக்கல் பயன்பாடா?
பட்டாசு ஆலைகளில் பேன்சி ரக வெடிகள் தயாரிக்க செந்தூரம் என்ற கெமிக்கல் பயன்படுத்தப்படுகிறது. இந்த கெமிக்கல் பயன்படுத்த அரசு தடை விதித்துள்ளது. ஆனால் பெரும்பாலான பட்டாசு ஆலைகளில் இந்த கெமிக்கலை பயன்படுத்தி பேன்சி ரக வெடிகள் உற்பத்தி செய்யப்படுவதாக கூறப்படுகிறது. வெடிபொருள் கட்டுப்பாட்டு அதிகாரிகள் பட்டாசு  ஆலைகளில் சோதனை நடத்தி நடவடிக்கை எடுப்பதில்லை. இதனால் பட்டாசு ஆலைகளில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு உயிர் பலியாகும் அவலம் தொடர்கிறது.

இன்ஜினியரிங் மாணவி பலி
அன்பின் நகரை சேர்ந்த பெருமாள் மகள் சந்தியா (20). பி.இ. முதலாம் ஆண்டு படித்து வந்தார். கொரோனா காரணமாக வீட்டில் இருந்து வந்தார். ஆன்லைனில் படித்து வந்த இவர், பட்டாசு ஆலையில் அக்கவுண்ட்ஸ் பிரிவில் பணியாற்றி வந்தார். இவரும் நேற்றைய விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

அவசர உற்பத்தியே விபத்திற்கு காரணம்
விபத்து நடந்த பட்டாசு ஆலையில் 150க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்துள்ளனர். உற்பத்திக்கு ஏற்ப கூலி வழங்கப்படும் என்பதால் தொழிலாளர்கள் அவசர கதியில் உற்பத்தி பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுவே விபத்துக்கு காரணமாகிவிட்டது.

20 ஆண்டுகளில் 482 பேர் பலி
பட்டாசு தொழிற்சாலைகள் மற்றும் பட்டாசு விற்பனை மையங்களில் பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக அதிகாரிகள் கண்காணிக்காதால் கடந்த 20  ஆண்டுகளில் நடந்துள்ள 336 விபத்துகளில் 482 பேர் பலியாகியுள்ளனர். இந்த எண்ணிக்கையை உயர்த்தும் வகையில் நேற்றும் பட்டாசு விபத்து, பல உயிர்களை பலி கொண்டுள்ளது.  பட்டாசு தொழிற்சாலைகள் மற்றும் பட்டாசு விற்பனை மையங்களில் கடந்த 20 ஆண்டுகளில் நடந்த விபத்துக்கள் பற்றிய புள்ளிவிவரம் :

ஆண்டு    விபத்து    பலி    காயம்
2000    10    25    
2001    2    4    
2002    5    8    
2003    8    7    5
2004    8    12    10
2005    26    25    40
2006    24    36    33
2007    20    31    24
2008    10    2    3
2009    23    33    26
2010    21    16    4
2011    22    41    26
2012    14    60    72
2013    22    30    29
2014    20    27    17
2015    13    9    18
2016    13    27    14
2017    14    18    9
2018    21    34    7
2019    21    10    10
2020    19    27    14


Tags : Firecracker ,Sattur , Firecracker factory blast kills 17: Tragedy near Sattur
× RELATED பட்டாசு வெடித்ததில் 2 வீடுகள் நாசம்: பாஜ வேட்பாளர் மீது வழக்கு