×

திருக்குறளை பார்க்காமல் சொல்லும் மாணவர்களுக்கு ஒரு லிட்டர் பெட்ரோல்: பங்க் உரிமையாளரின் தமிழ்த் தொண்டு

கரூர்: கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அடுத்துள்ள ஒரு பெட்ரோல் பங்கில் தமிழ் மொழியை வளர்க்கும் நோக்கில், 20 திருக்குறளை மனப்பாடமாக கூறும் மாணவ, மாணவிகளுக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசமாக வழங்கப்படுகிறது. கரூர்  மாவட்டம் அரவக்குறிச்சி அடுத்து தடாகோயில் அருகே நாகம்பள்ளி கிராமம் உள்ளது. இந்த பகுதியின் சாலையோரம் பெட்ரோல் பங்க் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த பங்க்கில் திருவள்ளுவர் தினம் முதல்,  பெற்றோர்களுடன் வந்து, 20 திருக்குறளை பார்க்காமல் சொல்லும் மாணவ, மாணவிகளுக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசமாக வழங்கப்படும் என அறிவிப்பு பலகை பங்க் முன்பு வைக்கப்பட்டிருந்தது.

இதனை பார்த்த, இந்த பகுதியை சேர்ந்த மாணவ, மாணவிகள் தினமும் பெற்றோருடன் வாகனங்களில் பங்க்குக்கு வந்து, ஆர்வத்துடன் 20 திருக்குறளை மனப்பாடமாக சொல்லி வருகின்றனர். அப்படி சொல்லும் மாணவர்களின்் பெற்றோருக்கு,  உரிமையாளர் ஒரு லிட்டர் பெட்ரோலை பரிசாக வழங்கி வருகிறார். இதற்கு நல்ல வரவேற்பு ஏற்பட்டுள்ளது. தமிழை வளர்க்கும் விதத்தில் செயல்படும் பங்க் உரிமையாளரை பலரும் பாராட்டி வருகின்றனர்.இதுகுறித்து பெட்ரோல் பங்க் உரிமையாளர் செங்குட்டுவன் கூறியதாவது:

சமீப காலமாக மாணவர்களிடையே வாசிக்கும் திறன் குறைந்து வருகிறது. வாசிக்கும் பழக்கம் ஏற்பட்டால்தான் அவர்களின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும். அந்த வகையில் தாய்மொழியில் திருக்குறள் புத்தகம் மிகவும் சிறப்பு வாய்ந்த புத்தகம்.  அதை மாணவர்கள் அனைவரும் படிக்க வேண்டும். அதற்கு ஏதாவது ஊக்கம் தரவும், தமிழை வளர்க்கவும் வேண்டும் என்பதால்தான் இந்த யோசனை உருவானது. இதுவரை 140 மாணவ, மாணவிகள் தங்களின் பெற்றோருடன் வந்து  திருக்குறளை சொல்லிவிட்டு பெட்ரோல் பெற்றுச் சென்றுள்ளனர். தை திருவள்ளுர் தினத்தன்று துவங்கிய இந்த திட்டம், ஏப்ரல் 31 வரை நடைமுறையில் இருக்கும் என்றார்.



Tags : Tirukurala ,charity ,Tamil ,Punk owner , A liter of petrol for students who say no to Tirukurala: Punk owner's Tamil charity
× RELATED தீ தொண்டு நாள் வார விழா