×

தேனீயைப் போல் தேனியில் விவிஐபிக்கள் மொய்ப்பு

தேனி: வரும் சட்டசபை தேர்தலில் தேனி மாவட்டத்தில் பல விவிஐபிக்கள் போட்டியிட முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். தேனி மாவட்டத்தில் நான்கு சட்டசபை தொகுதிகள் உள்ளன. தற்போதைய நிலையில் இரண்டு தொகுதிகளில்  அதிமுகவினரும், இரண்டு தொகுதிகளில் திமுகவினரும் எம்எல்ஏவாக உள்ளனர். துணை முதல்வர் பன்னீர்செல்வம் மீண்டும் போடி தொகுதியில் களம் இறங்கும் வாய்ப்புகள் உள்ளன. அதிமுக சார்பில் பெரியகுளம் தொகுதி பாஜவுக்கு  ஒதுக்கப்பட உள்ளது என்றும், அக்கட்சி சார்பில் பாஜ மாநில தலைவர் முருகன் போட்டியிடுவார் என்றும் பாஜவினர் கூறி வருகின்றனர்.

இதுபோல மாவட்டத்துக்கு ஒரு தொகுதியை தனக்காக ஒதுக்கும்படி அவர் கட்சியினருக்கு அன்புக் கட்டளையிட்டதாக கேள்வி. அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தேனி மாவட்டத்தில் ஒரு தொகுதியில் போட்டியிட போவதாக  கூறியுள்ளார். அவர் ஆண்டிபட்டி தொகுதியை குறிவைப்பதாக அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர். திமுக சார்பில் ஓபிஎஸ்க்கு கடுமையான போட்டியை ஏற்படுத்தும் அளவில் தங்கமான வேட்பாளரை அங்கு களமிறக்கப் போவதாக கூறப்படுகிறது.  பெரியகுளம் தொகுதியில் திமுக தேர்வு செய்து வைத்துள்ள வேட்பாளரை வெற்றி கொள்வது அவ்வளவு சுலபம் அல்ல என்று இப்போதே மார் தட்டுகிறார்கள்.

தவிர பெரியகுளம் எப்போதுமே திமுகவிற்கு சாதகமான தொகுதி. அதனால்தான் அதிமுக அத்தொகுதியில் ேபாட்டியிடாமல் பாஜ பக்கம் தள்ளி விடுகிறதாம். ஆண்டிபட்டி தொகுதியில் எம்ஜிஆர், ஜெயலலிதா போன்ற விவிஐபிக்கள்  போட்டியிட்டுள்ளனர். இந்நிலையில், டிடிவி தினகரன் அங்கு களம் இறங்க உள்ளதால் இப்போதே அங்கு பரபரப்பு தொற்றியுள்ளது. இப்படி ஓபிஎஸ்,  டிடிவி தினகரன், பாஜ மாநில தலைவர் முருகன் என விவிஐபிக்கள் தேனீயைப் போல் தேனி  மாவட்டத்தை மொய்க்கின்றனர்.

Tags : VIPs , VIPs swarm in the bee like a bee
× RELATED அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம்:...