×

சென்னை சேப்பாக்கத்தில் இந்தியா-இங்கிலாந்து மோதும் 2வது டெஸ்ட் நாளை தொடக்கம்: பதிலடி கொடுக்குமா கோஹ்லி?

சென்னை: இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையே 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடந்து வருகிறது. இதில் சென்னையில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா அணி 227 ரன் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இந்நிலையில் 2வது டெஸ்ட் நாளை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்குகிறது. ஆஸ்திரேலியா மண்ணில் டெஸ்ட் தொடரை வென்ற உற்சாகத்துடன் களம் இறங்கிய இந்தியா முதல் டெஸ்ட்டில் தோல்வி அடைந்தது பெரிதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் வெற்றி நெருக்கடியில் இந்தியா 2வது டெஸ்ட்டில் களம் காண்கிறது. கோஹ்லி தலைமையில் கடைசியாக ஆடிய 4 டெஸ்ட்டிலும் இந்தியா தோற்றுள்ளது. இதனால் வெற்றிப்பாதைக்கு திரும்ப வேண்டிய நெருக்கடியும் உள்ளது. ரகானே பேட்டிங்கில் தொடர்ந்து சொதப்பி வருகிறார்.

கடைசியாக ஆடிய 7 இன்னிங்சில் ஒரு சதம் மட்டுமே அடித்துள்ளார். இதனால் அவர் மீது விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், பார்முக்கு திரும்ப வேண்டிய கட்டாயம் உள்ளது. ரோகித்சர்மாவும் முதல் டெஸ்ட்டில் ஒற்றை இலக்க ரன்களில் வெளியேறினார். இருப்பினும் பேட்டிங் ஆர்டரில் எந்தவித மாற்றமும் இருக்க வாய்ப்பு இல்லை.

அக்‌ஷர் பட்டேல் காயத்தில் இருந்து மீண்டுள்ளதால் அவர் ஆடும் லெவனில் இடம்பெறுகிறார். ஷபாஸ் நதீம், வாஷிங்டன் சுந்தர், இசாந்த் சர்மா ஆகியோருக்கு பதிலாக அக்‌ஷர்பட்டேல், குல்தீப் யாதவ், முகமது சிராஜ் ஆகியோர் இடம் பெறலாம். மறுபுறம் இங்கிலாந்து சொந்த மண்ணில் இந்தியாவை வீழ்த்திய உற்சாகத்தில் உள்ளது. மேலும் தொடர்ச்சியாக 6 டெஸ்ட்டில் வெற்றிபெற்று வலுவுடன் உள்ளது. ஜோ ரூட் சூப்பர் பார்மில் உள்ளார். சுழற்பந்து வீச்சை எளிதாக சமாளித்து ஹாட்ரிக் சதம் விளாசி உள்ளார். ஆல்ரவுண்டர் பென்ஸ்டோக்ஸ், சிப்லியும் அவருக்கு பக்க பலமாக உள்ளனர். முழங்கை காயம் காரணமாக ஆர்ச்சர் விலகி உள்ள நிலையில், ஸ்டுவர்ட் பிராட் களம் காண்கிறார். பட்லருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

15 ஆயிரம் ரசிகர்களுக்கு அனுமதி

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக முதல் டெஸ்ட்டில் ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் நாளை தொடங்கும் 2வது டெஸ்ட்டில் 50 சதவீத ரசிகர்களுக்கு அனுமதி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி 15 ஆயிரம் ரசிகர்கள் மைதானத்தில் அனுமதிக்கப்படுகின்றனர். இதற்காக 100, 150, 200 ரூபாய்க்கான டிக்கெட்டுகள் அனைத்தும் விற்று தீர்ந்துள்ளன.

தோற்றால் டெஸ்ட் சாம்பியன்ஸ் ஷிப் பைனல் வாய்ப்பு காலி
 
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் இங்கிலாந்து 70.2 வெற்றி சதவீதத்துடன் (442 புள்ளி) முதல் இடத்தில் உள்ளது. நியூசிலாந்து 70.0 வெற்றி சதவீதத்துடன் (420 புள்ளி) 2வது இடத்திலும், ஆஸ்திரேலியா 69.2 வெற்றி சதவீதத்துடன் (332 புள்ளி) 3வது இடத்திலும், இந்தியா 68.3 வெற்றி சதவீத்துடன்( 430 புள்ளி) 4வது இடத்திலும் உள்ளன. இதில் நியூசிலாந்து முதல் அணியாக பைனலுக்கு தகுதி பெற்றுவிட்டது. மற்றொரு அணிக்கு இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் இடையே போட்டி ஏற்பட்டுள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான தொடரை 3-1, அல்லது 2-1 என கைப்பற்றினால் தான் இந்தியா பைனலுக்கு முன்னேற முடியும். ஏற்கனவே முதல் டெஸ்ட்டில் தோற்றதால் நாளை தொடங்கும் 2வது டெஸ்ட்டில் தோல்வி அடைந்தால் பைனல் வாய்ப்பு பறிபோய்விடும். தொடரை இங்கிலாந்து 3-1 என கைப்பற்றினால் பைனலுக்கு முன்னேறலாம். 2-2 என தொடர் சமனில் முடிந்தால் ஆஸ்திரேலியாவுக்கு அந்த வாய்ப்பு போய்விடும்.

Tags : India ,Test ,England ,Chennai Chepauk ,Will Kohli , 2nd Test between India and England at Chennai Chepauk starts tomorrow: Will Kohli and Co. retaliate?
× RELATED இஸ்ரேலுக்கான விமான சேவை தற்காலிகமாக...