×

திமுக தான் ஆட்சியை பிடிக்கும்.. அமைச்சர் சி.வி.சண்முகம் ராத்திரியில் ஒரு பேச்சு, பகலில் ஒரு பேச்சு : விழுப்புரத்தில் மு.க.ஸ்டாலின் ஆவேச பேச்சு

விழுப்புரம் : உங்கள் தொகுதியில் ஸ்டாலின் மூன்றாம் கட்ட பிரசாரத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று விழுப்புரம் மாவட்டத்தில் தொடங்கி கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர் என பிப்ரவரி மாதம் 15ம் தேதி வரை சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

விழுப்புரம் அருகே காணை ஒன்றியம் குப்பம் ஊராட்சியில் இன்று காலை நடந்த உங்கள் தொகுதியில் ஸ்டாலின் பிரசார கூட்டத்தில், விழுப்புரம், திருக்கோவிலூர், வானூர், விக்கிரவாண்டி தொகுதி மக்களை சந்தித்து மனுக்களை பெற்றார். முன்னதாக விழா பந்தலுக்கு வந்த மு.க.ஸ்டாலின் நேராக பொதுமக்கள், ெதாண்டர்கள் இருந்த இடத்திற்கு சென்று கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தார். அப்போது, அவருடன் பொதுமக்கள் ெசல்பி எடுத்துக் கொண்டார். பலர் அவரது கன்னத்தை வருடி வாழ்த்து தெரிவித்தனர்.
தொடர்ந்து பொதுமக்கள் மத்தியில் மு.க.ஸ்டாலின் பேசுகையில், தமிழகத்தில் நடைபெறுகிற எடப்பாடி பழனிசாமி ஆட்சி ஒரு ஊழல் ஆட்சி. விழுப்புரத்திலேயே அதற்கு ஒரு உதாரணம் இருக்கிறது. பொதுப்பணித்துறை சார்பில் எனதிரிமங்கலத்தில் ரூ.25 கோடி செலவில் ஒரு தடுப்பணை கட்டப்பட்டது. அந்த அணை உடைந்து போனது உங்கள் எல்லோருக்கும் தெரியும். இந்த தொகுதியில் உள்ள அமைச்சர் என்ன சொன்னார்? அணை உடையவில்லை. சுவர் தான் உடைந்தது என்று சொன்னார். ஆனால் ராத்திரியில் அணை, காலையில் சுவர் என்று மாற்றி மாற்றி பேசினார்.

கடையில் அணையே திறக்கவில்லை என்று சொன்னார். இந்த 25 கோடியில் எவ்வளவு கோடிக்கு ஊழல் நடந்தது என தெரியவில்லை. அணை உடைந்ததும் திருடனுக்கு தேள் கொட்டியது போல மாட்டிக்கொண்டனர். அணையே திறக்கவில்லை என்று சொன்ன சி.வி.சண்மும் அணையை திறந்து வைக்கும் வீடியோ காட்சியை பாருங்கள். (தொடர்ந்து அந்த வீடியோ காட்சி பொதுமக்களுக்கு ஒளிபரப்பு செய்யப்பட்டது.) பார்த்தீர்களா? அணையை திறந்து வைத்துவிட்டு அண்ட புலுகு ஆகாச புலுகாக பேசியுள்ளார். எனதிரிமங்கலத்தில் அணையே கட்டவில்லை என சி.வி.சண்முகம் சொல்வார். வடிவேல் கிணற்றை காணோம், கிணற்றை காணோம் என்று சொல்வது போல பேசுவார். அதிகாரிகள் மீது கண் துடைப்புக்காக நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஒப்பந்ததாரர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. ரயிலில் திருடியவனை விட்டுவிட்டு கரித்துண்டு பொறுக்குபவர்களை பிடிக்கிறார்களே என்ற கலைஞரின் பாலைவன ரோஜாக்கள் படத்தின் வசனம் தான் நினைவுக்கு வருகிறது.

செஞ்சியில் தரமற்ற கட்டிடத்தை கட்டிய ஒப்பந்ததாரர் கைது செய்யப்பட்டார். இந்த ஒப்பந்ததாரர் ஏன் கைது செய்யவில்லை?. எல்லாவற்றிக்கும் பதில் சொல்வாரே சி.வி.சண்முகம். இந்த அதிமேதாவி இதற்கு பதில் சொல்வாரா? சட்டத்துறை பொறுப்பு வகிக்கும் அவர் மரியாதைக்குரிய வகையில் நடந்து கொள்கிறாரா? என்னை ஒருமையில் பேசுவதால் என் தகுதி குறையப்போவதில்லை. குளித்து முடித்துவிட்டு கோயிலுக்கு சென்று வரும் யானை எதிரே சாக்கடையில் புரண்டுவிட்டு வரும் பன்றியை பார்த்து ஒதிங்கி போகிறது. ஏனெனில் சாக்கடை அதன் மேல் பட்டுவிடக்கூடாது என்பதற்காக தான். சி.வி.சண்முகத்திடம் பத்திரிகையாளர்கள் மைக் நீட்டுவது பேசுவதற்காகத்தான். வாந்தி எடுக்க அல்ல.

என்னை பார்த்து வெட்கம் இல்லையா? என்று கேட்கிறார். உங்களை கொலை செய்ய ஆள் அனுப்பியவர் வீட்டில் தலை வாழை இலைபோட்டு சாப்பிட்டீர்களே. உங்களுக்கு வெட்கம் இல்லையா? அம்மா, சின்னம்மா என்று நொடிக்கு ஒரு முறை கூறினீர்களே. தற்போது என்ன ஆனது. அம்மா என்று அழைத்த ஜெயலலிதா மரணத்தில் என்ன நடந்தது என உங்களால் விளக்கமாக சொல்ல முடியுமா? அந்த விவகாரத்தில் துணை முதல்வர் ஓபிஎஸ்சை பார்த்து கருங்காலி என்று சொன்னீர்களே. ஜெயலலிதா ஆட்சியில் மாவட்ட செயலாளர், அமைச்சர் பதவியை ஏன் பறித்தார்கள். சி.வி.சண்முகம் அங்கு அதிகாரிகளை ஒருமையில் வசைபாடியது. பத்திரப்பதிவு துறையில் புகுந்து விளையாடினார் என்பதால் ெஜயலலிதா பதவியை பறித்து மூலையில் உட்கார வைத்தார். தற்போது உங்கள் அமைச்சர் பதவியை பயன்படுத்தி நீங்கள் உங்கள் சொந்த ஊருக்கு என்ன செய்தீர்கள். நந்தன் காய்வாய் திட்டம் செயல்படுத்தப்படும் என்றீர்களே, ஒரு துரும்பையாவது கிள்ளி போட்டீர்களா?. விரிவுபடுத்தப்பட்ட பாதாள சாக்கடை திட்டம், விழுப்புரம் நகராட்சிக்கு சிறப்பு அந்தஸ்து, போக்குவரத்து நெரிசலை குறைக்க சுற்றுவட்டச்சாலை என எதையுமே செய்யவில்லை. இன்னும் 3 மாத்தில் கோட்டையை திமுக மீட்க போகிறது. தற்போது உள்ள ஆட்சியில் மக்களை பற்றியும் கவலையில்லை. மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்ற சிந்தனையும் இல்லை. மக்களுக்கான மக்களாட்சி விரைவில் மலரும். கழக ஆட்சி மலரும். உங்கள் பிரச்னை தீரும். இவ்வாறு அவர் பேசினார்

Tags : speech ,DMK ,Shanmugam One ,Villupuram ,MK Stalin , மு.க.ஸ்டாலின்
× RELATED ராஜஸ்தான் பிரசாரத்தில் வெறுப்பு...