அரசு விமானத்தில் செல்ல மராட்டிய ஆளுநருக்கு அனுமதி மறுப்பு : மாநில அரசின் தவறல்ல என முதல்வர் விளக்கம்.. மன்னிப்பு கோர பாஜக வலியுறுத்தல்

மும்பை : மராட்டிய ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரியின் பயணத்திற்கு அரசு விமானம் தர மறுத்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதற்கு ஆளுநர் மாளிகையின் கவனக்குறைவே காரணம் என்று அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே விளக்கம் அளித்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க தனது சொந்த மாநிலமான  உத்தரகாண்ட் மாநிலத்திற்கு சென்ற மராட்டிய ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரியின் பயணத்திற்கு அரசு விமானம் வழங்க சமீபத்தில் மராட்டிய அரசு அனுமதி மறுத்தது. மராட்டிய அரசுக்கு சொந்தமான வி.வி.ஐ.பி.க்களுக்கான விமானத்தில் ஆளுநர் ஏறி அமர்ந்துவிட்டார். சுமார் 15 நிமிடம் ஆளுநர் விமானத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் விமானம் புறப்படாமல் இருந்து உள்ளது.

ஆளுநர்அரசு விமானத்தில் பயணம் செய்ய மாநில அரசின் அனுமதி கிடைக்கவில்லை என விமானி தெரிவித்தார். ராஜ்பவன் அதிகாரிகள் அரசிடம் ஒப்புதல் பெற முயன்றும் பயன் அளிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆளுநர்அந்த விமானத்தில் இருந்து இறங்கி செல்ல வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து பகத்சிங் கோஷ்யாரி பயணிகள் விமானத்தில் டெஹ்ராடூன் சென்றார். ஆளுநரின் பயணத்திற்கு அரசு விமானத்தை தர மறுத்தது சர்சையை ஏற்படுத்திய நிலையில், இது குறித்து மராட்டிய முதல்வர் உத்தவ் தாக்கரே விளக்கம் அளித்துள்ளார்.

ஆளுநரின் பயணத்திற்கு மாநில அரசின் விமானத்தை வழங்குவது குறித்து முடிவு செய்யவில்லை என்று முன்னதாகவே ஆளுநர் மாளிகைக்கு தகவல் தெரிவித்துவிட்டதாக முதல்வர் தாக்கரே கூறியுள்ளார். ஆனால் இதனை கருத்தில் கொள்ளாமல் அரசுக்கும் தகவல் தெரிவிக்காமல் ஆளுநர் மாளிகை செயலகம் கவனம் குறைவாக நடந்து கொண்டதே பிரச்சனைக்கு காரணம் என்று தாக்கரே கூறியுள்ளார். இந்த விவகாரத்தில் மத்திய உள்துறையின் நடைமுறைகளை மராட்டிய அரசு பின்பற்றியுள்ளதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார். ஆளுநரின் பயணத்தை உறுதி செய்யாதது ஆளுநர் மாளிகை செயலகத்தின் தவறு என்றும் இந்த விவகாரத்தில் மாநில அரசை குறை கூறுவது தவறு என்றும் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.இதனிடையே மகாராஷ்டிரா ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரிக்கு அரசு விமானத்தில் செல்ல அனுமதி மறுக்கப்பட்டதற்கு பாஜக கண்டனம் தெரிவித்து உள்ளது. மேலும் பாஜக சார்பில் சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் மாநில அரசை மன்னிப்பு கோர வலியுறுத்தி உள்ளார்.

Related Stories: