×

தக்கலை பேட்டை சந்தையில் பூச்சிக்கொல்லி பூசி பழுக்க வைக்கப்படும் வாழைகுலைகள்: ஆய்வில் உறுதியானதால் அதிகாரிகள் எச்சரிக்கை

தக்கலை:  தக்கலை பேட்டை சந்தையில் வாழைத்தார் உறைபோடும் இடத்தில் பூச்சிக்கொல்லி மருந்து பயன்படுத்துவது தெரியவந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். தக்கலை பேட்டை சந்தை உள் பகுதியில் வாழைத்தார் உறை போடும் இடம்  உள்ளது. இந்த இடத்தினை நகராட்சி மூன்று ஆண்டுகளுக்கு குத்தகைக்கு  விடுத்துள்ளது. இது தவிர சந்தையின் வெளி பகுதியிலும் தனியாரால்  நடத்தப்படும் வாழை குலை உறைபோடும் குழிகள் உள்ளன. சந்தை வளாகத்தில்  உள்ள வாழைத்தார் உறை போடும் இடத்தில் வாழைத்தார்களை சமீப காலமாக பூச்சிக்  கொல்லி மருந்துகள் தடவி பழுக்க வைப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  வழக்கமாக உறை குழியில் வாழைத்தார்களை அடைத்து வைத்து புகையிட்டு சாணி வைத்து பூசி அடைத்து விடுவார்கள். மறு நாள் திறக்கும் போது  வாழைப்பழங்கள் பழுத்த நிறத்தில் காணப்படும். அவசரமாக வாழைப்பழம் பழுக்க  வைக்க வேண்டுமென்றால் இரண்டு நாட்கள் உறைக்குள் வைத்து பழுக்க வைப்பார்கள்.  இது வழக்கமாக நடைபெறுவது வழக்கம்.

 சந்தையில் வாழைக்குலைகளை வாங்கும்  பெட்டிக் கடைகாரர்கள், சிறு வியாபாரிகள், விஷேச நிகழ்ச்சிக்கு வாங்குபவர்கள்  என அனைவரும் வாழைக் குலைகளை உறைபோடுவது வழக்கம்.   ஆனால் இடைக்காலங்களில்  வாழைத்தார்கள் பழுக்க வைக்க கார்பைடு கற்கள் பயன்படுத்தப்பட்டதாக  புகார்கள் எழுந்தன. மாம்பழம் உள்ளிட்ட பழ வகைகளை பழுக்க வைக்க  பயன்படுத்தப்பட்ட இந்த கார்பைட் கற்கள் வாழைப்பழம் பழுக்க வைக்க  பயன்படுத்தப்பட்டதால் நகராட்சி அதிகாரிகள் அந்த கால கட்டத்தில் சோதனை  மேற்கொண்டனர்.  இந்நிலையில் தற்போது வாழைப்பழங்களை அவசரமாக பழுக்க  வைப்பதற்காக ரசாயனம் உள்ள பூச்சி மருந்துகளை பயன்படுத்துகின்றனர். இந்த  மருந்துகளை தண்ணீரில் கலக்கி அதனை வாழை பழம் மீது பூசுகின்றனர்.   எத்திலின் என்ற மருந்தை ஸ்பிரே செய்வதன் மூலமும் செயற்கையாக பழுக்க வைக்கலாம்  என கூறப்படுகிறது.  இதனால் மறுநாள் வாழைத்தார்கள் பழுத்த நிலைக்கு வந்துவிடுகிறது.

இதன்காரணமாக  உறை குழி நடத்துபவர்களுக்கு நேரச் செலவு குறைவதுடன் பணச் செலவும்  குறைகிறது. ஆனால் இதனை வாங்குகின்ற நுகர்வோர்களான குழந்தைகள் முதல்  பெரியவர் வரை உடல் ஆரோக்கியம் கேள்விக்குறியாகிறது. தக்கலை சந்தை  வளாகத்தில் உள்ள வழைத்தார் உறையில் பூச்சிகொல்லி மருந்து பயன்படுத்துவதாக  கிடைத்த தகவலின் பேரில் நேற்று முன் தினம் மாலை பத்மனாபபுரம் நகராட்சி  சுகாதார அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது பூச்சிக்கொல்லி மருந்து தடவுவது  தெரியவந்தது. எனினும் உரிய நடவடிக்கை எடுக்காமல் எச்சரித்து விட்டுச்  சென்றதால் அதனை  பார்த்த பொதுமக்களும், வியாபாரிகளும் அதிர்ச்சி அடைந்தனர்.

உயிருடன் விளையாடுவது ஏன்?
பூச்சிக்கொல்லி மருந்து தடவி வாழைத்தார்கள் பழுக்க  வைப்பது நகராட்சி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  மக்களின்  உயிருடன் விளையாடும் சம்பவத்தை சாதாரண சம்பவமாக நகராட்சி சுகாதார துறை  விட்டுச் சென்றது  ஏன் என்ற கேள்வியை நகர மக்கள் எழுப்புகின்றனர். இது  மட்டுமல்லாமல் நகரப்பகுதியில் பழ வகைகளும் பூச்சிக் கொல்லி மருந்துகள்  பயன்படுத்தி பழுக்க வைப்பதாக தெரிய வருகிறது. எனவே மாவட்ட நிர்வாகமும்,  உணவு பாதுகாப்பு துறையும் இணைந்து அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.


Tags : Takalai , Bananas ripened with pesticides in Thakkalai hood market: Officials warn as study confirms
× RELATED தக்கலை அருகே சூப்பர் மார்க்கெட் உரிமையாளர் மாயம்