குமரி மாவட்டத்தில் 1027 பேருக்கு ஒதுக்கீடு இருந்தும் அம்மா இருசக்கர வாகன திட்டத்திற்கு யாரும் விண்ணப்பிக்கவில்லை: மாவட்ட ஊராட்சி கூட்டத்தில் அதிகாரி தகவல்

நாகர்கோவில்: அம்மா இரு சக்கர வாகன திட்டத்திற்கு விண்ணப்பிக்க ஆளில்லாத நிலை குமரிமாவட்டத்தில் இருந்து வருவதாக நாகர்கோவிலில் நடைபெற்ற மாவட்ட ஊராட்சி கூட்டத்தில் அதிகாரி தெரிவித்தார்.குமரி மாவட்ட ஊராட்சி கூட்டம் மாவட்ட  ஊராட்சித் தலைவர் மெர்லியன்ட் தாஸ்  தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவர் சிவகுமார் மற்றும் உறுப்பினர்கள்  ஜாண்சிலின் விஜிலா, அம்பிளி, செலின்மேரி, பரமேஸ்வரன், லுயிஸ், ராஜேஷ்பாபு, ஜோபி,  ஷர்மிளா ஏஞ்சல், நீலபெருமாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஊராட்சி செயலாளர் முருகானந்தம்,  மகளிர் திட்ட உதவி திட்ட அலுவலர் அருண் பிரசாந்த், ஆதி திராவிடர் நலத்துறை கண்காணிப்பாளர் பென்னட் ஆசீர் உட்பட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:ஜாண்சிலின் விஜிலா: குமரி மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட சுய உதவி குழுக்கள் எத்தனை உள்ளன. என்ன பயிற்சி அளிக்கப்படுகிறது? வடசேரியில் உள்ள பூமாலை வணிக வளாகம் கடைகள் மூடப்பட்டு அங்கு போதிய அடிப்படை வசதி இல்லாமல் செயல்பட்டு வருகிறது.மகளிர் திட்ட அலுவலர்: குமரி மாவட்டத்தில் 4644 பதிவுபெற்ற சுய உதவிக்குழுக்கள் செயல்படுகிறது. வடசேரியில் உள்ள வணிக வளாகம் அனைத்து கடைகளும் திறக்கப்பட்டு தற்போது  செயல்பட்டு வருகிறது. அங்கிருந்த குறைபாடுகள் சரி செய்யப்பட்டுள்ளது. பராமரிப்பு பணிக்கு தனி நிதி ஒதுக்கீடு இல்லை. சுய உதவி குழுவினருக்கு டெய்லரிங், மசாலா தயாரிப்பு, காளான் வளர்ப்பு உள்ளிட்ட பயிற்சி அளிக்கப்படுகிறது.

பரமேஸ்வரன்: குமரி மாவட்டத்தில் அம்மா இருசக்கர வாகன திட்டத்தின் கீழ் எத்தனை பேருக்கு இருசக்கர வாகனம் வழங்கப்பட்டுள்ளது? கிடைக்கப்பெறாதவர்கள் இருசக்கர வாகனங்கள் பெற என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?மகளிர் திட்ட அதிகாரி :  குமரி மாவட்டத்தில் 2017 ம் ஆண்டு முதல் இதுவரையான ஒதுக்கீட்டில், எஞ்சியுள்ள 1027 பேருக்கு இருசக்கர வாகனங்கள் பெற யாரும் விண்ணப்பிக்காத நிலை உள்ளது. இவர்களுக்கு இரு சக்கர வாகன வினியோகம் செய்யும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எஸ்டி எஸ்டி பிரிவினருக்கான ஒதுக்கீடு பயன்படுத்தப்படாமல் உள்ளது.மெர்லியன்ட் தாஸ்:  குமரி மாவட்டத்தில் என்னென்ன ஆதி திராவிடர் நலத்துறை திட்டங்கள் செயல்படுத்தபடுகிறது?ஆதி திராவிடர் நல கண்காணிப்பாளர்: குமரி மாவட்டத்தில் ஆதிதிராவிட நலத்துறை சார்பில் 1965 க்கு முன்னர் வழங்கப்பட்ட எஸ்சி எஸ்டி காலனி குடியிருப்புகளில் ஆதிதிராவிடர்கள் தான் வசிக்கின்றார்களா? அல்லது மற்றவர்களுக்கு அந்த வீட்டு மனை, நிலம் வழங்கப்பட்டுள்ளதா? என்பதை கண்டறிய அரசு உத்தரவிட்டுள்ளது. அதுவரை வீட்டுமனை பட்டா விநியோகம் இல்லை.

தாசில்தார், துணை தாசில்தார் வருவாய் ஆய்வாளர், பிர்கா சர்வேயர் உள்ளிட்டோர் இது தொடர்பாக அதி திராவிடர் குடியிருப்புகளில் ஆய்வு நடத்தி அறிக்கை அளிக்க உள்ளனர்.மெர்லியன்ட் தாஸ்: மாவட்ட ஊராட்சி கூட்டத்திற்கு வருகை தராத மாசு கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் மீது ஊராட்சி செயலாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு விவாதம் நடந்தது.விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டற்கு தமிழக முதல்வரை பாராட்டி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 15ம் மத்திய நிதிக்குழு மானிய நிதியில் இருந்து 2020-21ம் ஆண்டுக்கான மாற்று வேலைகள் தேர்வு செய்தல், மாநில நிதிக்குழு மானியம் 2020-2021ல் தேர்வு செய்யப்பட்ட வேலைகளை ரத்து செய்தல் தொடர்பாகவும் கூட்டத்தில் முடிவுகள் எடுக்கப்பட்டன.

Related Stories:

>