×

தமிழகத்தில் பாஜ தேர்தல் பிரசாரம் எடுபடாது மோடி, அமித்ஷாவை மக்கள் கெஸ்ட் ஆகத்தான் பார்க்கிறார்கள் : திமுக கொள்கை பரப்பு செயலாளர் திண்டுக்கல் ஐ.லியோனி

* தேர்தல் ஜுரம் ஆரம்பித்து விட்டது. தமிழக மக்களின் மனநிலை எவ்வாறு உள்ளது?
தமிழகத்தில் 10 தொகுதிகளில் விடியலை நோக்கி ஸ்டாலின் என்ற பிரசாரத்தை முடித்துள்ளேன். மற்ற பிரசாரங்களுக்கும் இப்போது நாங்கள் எடுத்து இருக்கின்ற முறைக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. நேருக்கு நேர் மக்கள் இருக்கும் இடத்திற்கே சென்று சந்தித்து வருகிறோம். மக்களிடம் இறங்கி போய் பார்க்கும் போது, நாட்டில் ஒரு மாற்றம் தேவை என்பதில் எல்லாரும் உறுதியாக இருக்கிறார்கள். இதே ஆட்சி நீடிப்பதில் யாருக்கும் விருப்பம் இல்லை. மாற்றம் என்பது கண்டிப்பாக வர வேண்டும். மாற்றத்தை கொடுப்பதற்கு தகுதியான தலைவர் இன்றைக்கு மு.க.ஸ்டாலின் தான் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். மக்களை சந்திக்கும் போது, முக்கியமாக சொல்வது முதியோர் உதவி ெதாகை நிறுத்தம், 100 நாட்கள் வேலை திட்டம் ஒழுங்காக செயல்படுத்தவில்லை, வேலைவாய்ப்பின்மை. உள்ளாட்சி அமைப்புகள் இல்லததால் சுகாதார சீர்கேடுகள் நிறைய இருக்கிறது என்று சொல்வதை காண முடிகிறது.

* அதிமுகவை பற்றி மக்கள் எண்ணம் என்னவாக உள்ளது?
அதிமுகவில் மிகப்பெரிய குழப்பம் நடந்து கொண்டு இருக்கிறது என்று மக்கள் தெள்ள தெளிவாக பார்க்கிறார்கள். எடப்பாடியின் தலைமையே அதிமுகவில் உள்ள பாதி பேர் இன்னும் ஏற்றுக்கொள்ளவே இல்லை என்பது இப்போது வரைக்கும் நன்றாக தெரிகிறது. முதல்வர் வேட்பாளரில் இன்னும் ஒருமித்த கருத்து என்பது அதிமுக தொண்டர்கள் வரைக்கும் இல்லை. ஏதோ முதல்வர் என்பதால் அவர் அழைக்கும் இடத்திற்கு மக்கள் போகிறார்கள். போலீசார், அதிகரிகளுடன் துணையுடன் மக்கள் கூட்டம் போகிறது. அதே நேரத்தில் முறையாக அவரை முதல்வர் வேட்பாளராக அதிமுக தொண்டர்களே ஏற்றுக்கொள்ளவில்லை என்பது தெளிவாக தெரிகிறது.

*சசிகலா வருகையை எப்படி பார்க்கிறீர்கள்?
சசிகலா வருகைக்கு பிறகு அமைச்சர்கள் பேச்சு, பேட்டிகள் ரொம்ப முறையற்று போய் உள்ளது. ஒரு சரியான, தெளிவான அறிக்கையை யாருமே கொடுக்கவில்லை. டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்க சென்ற 4 அமைச்சர்களில் யார் முதலில் பேசுவது என்பதில் கூட, அவர்களுக்குள் பயங்கர குழப்பம் ஏற்பட்டது. ஒருவருக்கொருவர் போட்டி, போட்டு கொண்டு பேசியவர்கள், சசிகலா வருகை குறித்து பேசுவதில் தயக்கம் ஏற்பட்டுள்ளது. தயக்கம் என்பதே ஒரு பீதி, ஒரு பயம் ஏற்பட்டிருக்கிறது என்பது தெளிவாக தெரிகிறது. முதல்வர் வேட்பாளராக இருக்கிற எடப்பாடி இதுவரைக்கும் சசிகலா என்ற பெயரை இன்னும் வாயில் உச்சரிக்கவே இல்லை. தினகரனுக்கு தான் பதில் சொல்லி கொண்டிருக்கிறார். கட்சியின் ஓருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வமும் இதுவரை தெளிவான ஒரு கருத்தை சொல்லவே இல்லை.

* தமிழகத்தில் மோடி, அமித்ஷா உள்ளிட்ட பாஜ தேசிய தலைவர்களின் பிரசாரம் எடுபடுமா?
தமிழகத்தில் பாஜ தேசிய தலைவர்களின் பிரசாரம் எடுபடாது. இதற்கு முக்கிய அடிப்படை காரணம், இதுவரை தமிழக மக்களுக்கு தனிப்பட்ட முறையில் பாஜ கட்சி எதுவும் செய்யவில்லை. மக்களின் தனிப்பட்ட பிரச்னையில் பாஜக தனியாக நின்று எந்த போராட்டத்திலும் பங்கேற்கவில்லை. விவசாயிகள் போராட்டம், ஆசிரியர்கள் போராட்டம், மீனவர்கள் போராட்டம், வேலையில்லா திண்டாட்டம் உள்ளிட்ட எந்த பிரச்னைக்கும் எதிர்த்து போராடவே இல்லை. மக்களின் பிரச்னையில் நிற்காத பாஜவினர் வேல் பிரசாரம், கந்த சஷ்டி பிரசாரத்தை மக்கள் விரும்பவில்லை. தமிழகத்தில் பாஜ எந்தவிதத்திலும் கால் ஊன்ற முடியாது. எவ்வளவு பேர் படையெடுத்து வந்தாலும், அவர்களை வட இந்தியாவில் இருந்து ஒரு கெஸ்ட் (விருந்தினராக) வந்துட்டு ேபான மாதிரி தான் மக்கள் எல்லாரும் பார்க்கிறார்கள். இவர்கள் மக்கள் பிரச்னையை தீர்ப்பார்கள் என்பதில் மக்களுக்கு நம்பிக்கை கிடையாது. முக்கியமாக விவசாயிகள் போராட்டத்தை அவர்கள் கையாண்டு கொண்டு இருக்கும் முறை, விவசாயிகள் மத்தியில் மிகப்பெரிய அதிர்ச்சியை உண்டாக்கியிருக்கிறது. எத்தனை மோடி, அமித்ஷா உள்ளிட்ட பாஜ தேசிய தலைவர்கள் படையெடுத்து வந்தாலும், அடிப்படை மக்களின் வாக்குகளை பாஜ வாங்கவே முடியாது.



Tags : election campaign ,BJP ,Tamil Nadu ,Dindigul I. Leoni ,Modi ,Amit Shah ,guests ,DMK , BJP election campaign will not take place in Tamil Nadu: People see Modi, Amit Shah as guest: DMK policy outreach secretary Dindigul I. Leoni
× RELATED பணம் சுருட்டல், கூலி ஆட்களை வைத்து...