×

நாலா பக்கம்: புதுவை - கேரளா - மேற்கு வங்கம் - அசாம்

ஒரே கல்லில் 2 மாங்காய்
மேற்கு வங்கத்தில் நடக்கும் மம்தா-பாஜ.வின் ஈகோ யுத்தத்தைப் புரிந்து கொள்ள முடியும். ஆனால், ஆளும் கட்சியாக உள்ள அசாமிலும் பாஜ ஏன் அதீத கவனம் செலுத்த வேண்டும் என்ற கேள்வி எழுகிறதுதானே… வெறுமனே ஆட்சியைத் தக்கவைப்பது மட்டுமே பாஜ.வின் கவலையல்ல. விஷயமே வேறு… குடியுரிமை சட்டத்துக்கு எதிராக முதன் முதலில் போராட்டங்கள் எழுந்த மாநிலம் அசாம் தான். அதன் பிறகே தீயாகப் பற்றிக் கொண்டு நாடு முழுவதும் போராட்டங்கள் பரவின. இதன் உண்மையான எதிர்வினை வரும் சட்டசபை தேர்தலில்தான் கிடைக்கும் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். மீண்டும் பாஜ ஆட்சிக்கு வந்தால், ‘குடியுரிமை சட்டமானது தேசத்தின் நலனைப் பாதுகாக்கவே கொண்டு வரப்பட்டது’ என்ற எண்ணம், அசாம் மூலமாக நாடு முழுவதும் வலுப்பெறும். இல்லாவிட்டால் அது மத்திய அரசின் கொள்கை ரீதியிலான தோல்வியாகவே எதிரொலிக்கும். அதனால் தான், ஆளும் கட்சி என்ற நினைப்பையும் மறந்து உழைத்துக் கொண்டுள்ளது பாஜ. ஆக மொத்தம், இத்தேர்தலில் பாஜ வெற்றி பெற்றால், ஒரே கல்லில் 2 மாங்காய் அடிக்கும் என்கின்றனர் அரசியல் நிபுணர்கள்.

அனல் பறக்கும் வார்த்தை போர்
மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜிக்கும், பாஜ தலைவர் ஜேபி நட்டா, அமித்ஷா ஆகியோருக்கு இடையே வார்த்தை போரில் அனல் பறக்கிறது. ‘நான் எதற்கும் அஞ்சாத வங்கப்புலி’ என்று பாஜ.வுக்கு எச்சரிக்கை விடுத்த மம்தா, அதற்கு முன்பாக, பிரதமர் மோடியுடன் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் ‘ஜெய் ஸ்ரீராம்’ கோஷமிட்டதால் ஆத்திரமடைந்து பேசாமல் சென்றார். இவற்றுக்கு நேற்று பிரசாரம் செய்தபோது பதிலடி கொடுத்துள்ள அமித்ஷா, ‘புலிக்கு பயந்தது பாஜ அல்ல. இந்த தேர்தல் பிரசாரம் முடியும் முன்பாக, மம்தாவும் ஜெய் ஸ்ரீராம் என கோஷமிடுவார். இந்த தேர்தல் மோடியின் வளர்ச்சி திட்டங்களுக்கும், மம்தாவின் அழிவு திட்டங்களுக்கும் நடக்கும் தேர்தலாகும்,’’ என்றார்.

தேவை என்றால் தாராளம் இல்லை என்றால் கெடுபிடி
சட்டசபை தேர்தல் நெருங்கி விட்ட  நிலையில் மதுபான பதுக்கலை  முன்கூட்டியே தடுக்கும் வகையில், புதுச்சேரி கலால் துறை நடவடிக்கைகளை  தொடங்கியுள்ளது. புதுச்சேரியில் மது விற்பனையில்  புதிய நடைமுறையை அமல்படுத்தியுள்ள கலால் துறை, அனைத்து சாராய ஆலைகள்,  மதுபான கடைகள், குடோன்களில் சிசிடிவி கேமிராக்கள்  இயங்குவதை உறுதி செய்ய உத்தரவிட்டுள்ளது. மேலும், இவற்றை நேரடியாக தாங்கள் பார்க்கும் வகையில் கலால் துறை துணை ஆணையர் அலுவலகத்துடனும் சிசிடிவி இணைப்பை இணைக்க அறிவுறுத்தி உள்ளது. மேலும், அனைத்து சாராய ஆலைகள், மதுபான உரிமம் பெற்றவர்கள் நாள்தோறும் அதன் விற்பனை விபரத்தை ஆன்லைனில்  தெரிவிக்கவும் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. ‘தேவை’ என்றால் கண்டுக்கொள்ள மாட்டார்கள். ‘தேவையில்லை’ என்றால் இப்படி கெடுபிடி செய்வார்கள் என்று இதுவரை பலமாக கொழுத்து வந்த மதுபான விற்பனையாளர்கள் புலம்புகின்றனர்.

இங்கிருந்து பால் போட்டால் அங்கிருந்து சிக்சர் அடிக்கலாம்
கேரளாவை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர்களான காங்கிரஸ் மூத்த தலைவர் வயலார் ரவி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மூத்த தலைவர் அப்துல் வகா, சிபிஎம் கட்சியின் கே.கே. ராகேஷ் ஆகியோரின் பதவிக் காலம் வரும் 15ம் தேதி முடிகிறது. மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் குலாம் நபி ஆசாத்தின் பதவி காலமும் அதே தேதியில் முடிகிறது. இவர், 2015ம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் சட்டசபை மூலம் மாநிலங்களவை எம்பி.யானார். தற்போது, ஜம்மு காஷ்மீர் 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டுள்ளதால் ஆசாத்தை கேரளாவில் இருந்து எம்பி.க்கலாம் என கணக்கு போட்டுள்ளதாம் காங்கிரஸ் மேலிடம். தற்போது, கேரளாவில் ஆளும் இடது முன்னணியின் சார்பில் 2 மாநிலங்களவை எம்.பிக்கள், காங்கிரஸ் ஒரு எம்.பியையும் தேர்வு செய்ய முடியும்.

ஏற்கனவே, கேரளாவை சேர்ந்த கே.சி.வேணுகோபாலை ராஜஸ்தானில் இருந்து மாநிலங்களவை எம்பி.யாக்கி உள்ளது காங்கிரஸ். இதனால், ஜம்மு காஷ்மீரை சேர்ந்த குலாம் நபி ஆசாத்தை கேரளாவில் இருந்து மாநிலங்களவை எம்பி.யாக்கினால், அவருக்கும் பதவி வழங்கியது போல் இருக்கும். கேரளாவில் சட்டப்பேரவை தேர்தல் நடப்பதால், ஆசாத்துக்கு இங்கிருந்து எம்பி பதவி அளிக்கப்படுவதால் முஸ்லிம் ஓட்டுகளையும் அள்ள முடியும் என  கருதுகிறதாம் காங்கிரஸ். அதாவது, டெல்லியில் இருந்து பால் போட்டால், கேரளாவில் சிக்சர் அடிக்கலாம்!!

Tags : Kerala ,New Delhi ,Assam ,West Bengal , Nala Page: New Delhi - Kerala - West Bengal - Assam
× RELATED மசோதாக்களில் கையெழுத்து போடவில்லை...