சேலம் மாவட்ட பேரூராட்சிகளில் கொசு மருந்து இயந்திரம் வாங்கியதில் முறைகேடு: 10 அதிகாரிகள் மீது வழக்கு

சேலம்: சேலம் மாவட்ட பேரூராட்சிகளில் கொசு மருந்து இயந்திரம் வாங்கியதில் முறைகேட்டில் ஈடுபட்டதாக  மாஜி உதவி இயக்குனர் உள்பட 10 அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சேலம் மாவட்ட பேரூராட்சிகளில், கடந்த 2015-16ல் டெங்கு, பறவைகாய்ச்சல் நோய்களை தடுக்க கொசு மருந்து, புகை மருந்து அடிப்பான் இயந்திரங்கள் வாங்கியதில் மோசடி குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தினர். இதில், உள்ளாட்சி அமைப்புகளுக்கு கொசு புகை மருந்து, புகை அடிப்பான் கருவிகள் வாங்க மக்கள் அறியும்படி ஒப்பந்தம் விடாமல், குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு சாதகமாக அதிகாரிகள் செயல்பட்டது தெரிந்தது. இதில் போலியான நிறுவனங்கள் விலை பட்டியலை வழங்கியது. இந்நிறுவனங்கள், சேலம் மாவட்ட பேரூராட்சி உதவி இயக்குநர், செயல்அலுவலர்களுக்கு பெரும் தொகையை வழங்கியதும் தெரியவந்தது.

கொசு மருந்து புகை தெளிப்பான்களான அஸ்பி தெர்மல் ஏரோசால், ஜெட் புகைப்பான் ஆகியவற்றின் அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளரிடம் வாங்கினால் ஜிஎஸ்டி வரி உள்பட 2.62 லட்சத்துக்கு கிடைத்தது. ஆனால் போலி நிறுவனங்கள் 3.12 லட்சம் சேர்த்து தலா 5.75 லட்சத்துக்கு விலை பட்டியல் வழங்கியது தெரியவந்தது. இதன்படி, 9 பேரூராட்சிகளில் 28.05 லட்சத்துக்கு கூடுதல் விலை கொடுத்து, கொசு மருந்து புகை அடிக்கும் இயந்திரங்கள் வாங்கப்பட்டுள்ளது. இதற்குரிய பணத்தை வழங்க, அப்போதைய சேலம் மாவட்ட பேரூராட்சி உதவி இயக்குநர் முருகன் அனுமதித்து, ேமாசடிக்கு உடந்தையாக இருந்தாக கூறப்படுகிறது.

இவர், ஓய்வு பெற்ற நிலையில் தற்போது இந்த வழக்கில் சிக்கி உள்ளார். இது தவிர, இந்த மோசடியில் ஈடுபட்டதாக பேரூராட்சி செயல் அலுவலர்கள், சங்ககிரி சிறப்பு நிலை பேரூராட்சி செயல் அலுவலர் பாலசுப்ரமணி, செந்தராப்பட்டி சீனிவாசன், தம்மம்பட்டி சுந்தரமூர்த்தி, பெத்தநாயக்கன்பாளையம் கணேஷ், கன்னங்குறிச்சி ஆறுமுகநயினார் ஆகியோர் சிக்கினர்.

மேலும், முன்னாள் செயல் அலுவலர்களான ஓமலூர் அசோக்குமார், இடங்கணசாலை மேகநாதன், பனமரத்துப்பட்டி கணேசன், கீரிப்பட்டி காதர்பாட்ஷா ஆகியோர் மீது கூட்டு சதி, நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல், தவறான அறிக்கை, போலி ஆவணங்களை அங்கீரித்து மோசடி, மோசடிக்கு உடந்தை, அரசு நிதியை தவறான முறையில் கையாடல் ஆகிய பிரிவுகளில் கடந்த மாதம் 28ம் தேதி சேலம் லஞ்ச ஒழிப்புதுறை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். ஒரு மாவட்டத்தில் 9 பேரூராட்சிகளில் 28 லட்சத்துக்கு மேல் மேசாடி நடந்துள்ளது. தமிழகம் முழுவதும் கோடிக்கணக்கில் மோசடி நடந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதனால், தமிழகம் முழுவதும் முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகளின் பட்டியலை, லஞ்ச ஒழிப்பு போலீசார் தயாரித்து வருகின்றனர்.

Related Stories: