×

விமான நிலையத்தில் காமராஜர், அண்ணா பெயர்களை அகற்றியது தமிழர்களை அவமதிக்கும் செயல்: தலைவர்கள் கடும் கண்டனம்

சென்னை: விமான நிலையத்தில் காமராஜர், அண்ணா பெயர் அகற்றம் தமிழக மக்களை அவமதிக்கும் செயல் என்று தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். கே.எஸ்.அழகிரி (தமிழக காங்கிரஸ் தலைவர்): மீனம்பாக்கம் விமான நிலையத்தில் உள்ள உள்நாட்டு விமான முனையத்துக்கு காமராஜர் பெயரும், அயல்நாட்டு விமான முனையத்துக்கு அண்ணா பெயரும் சூட்டப்பட்டிருந்த நிலையில், தற்போது அப்பெயர்கள் அகற்றப்பட்டுள்ளதை வன்மையாகக் கண்டிக்கிறேன். தமிழகத்தின் தனிப்பெரும் தலைவர்களாக விளங்குகிற காமராஜர், அண்ணாவின் பெயர்களை விமான நிலையங்களிலிருந்து அகற்றுவது தமிழக மக்களை அவமதிக்கிற செயலாகும். தமிழகத்தின் வளர்ச்சிக்காகவும், மேம்பாட்டிற்காகவும் தமது வாழ்நாளை அர்ப்பணித்த இருபெரும் தலைவர்களின் புகழுக்குக் களங்கம் கற்பிக்கின்ற வகையில், அகற்றிய மத்திய பாஜ அரசு, உடனடியாக அந்த பெயர்கள் இடம்பெறுகிற வகையில் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இல்லையெனில்  காங்கிரஸ் சார்பில் கடுமையான போராட்டங்களை மத்திய பாஜ அரசு சந்திக்க நேரிடும்.

ஜவாஹிருல்லா (மமக தலைவர்): இரு தலைவர்களின் பெயர்களை நீக்கிய மத்திய அரசின் இந்த இருட்டடிப்புச் செயலானது தமிழர்களின் உணர்வுகளைப் புண்படுத்துவது மட்டுமின்றி தமிழ் இனத்தின் மீதான பாசிச தாக்குதல். இதுகுறித்து, நாடாளுமன்ற கூட்டத்தொடரில் தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து எம்.பி.க்களும் குரல் எழுப்பி, மீண்டும் இருபெரும் தலைவர்களின் பெயர்களை பழையபடியே விமான நிலையத்தில் சூட்டுவதற்கு மத்திய அரசை வலியுறுத்த வேண்டும். நெல்லை முபாரக் (எஸ்.டி.பி.ஐ. கட்சி தலைவர்): தமிழகத்தின் அடையாளமாக திகழக்கூடிய  தலைவர்களான காமராஜர், அண்ணா பெயர்களை நீக்கிய மத்திய அரசின் இந்த நடவடிக்கை  கண்டனத்திற்குரியது. இந்த பெயர்கள் மீண்டும் இடம்பெறும் வகையில் தமிழக  அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். காலம்தாழ்த்தாமல் உடனடியாக இரு  பெரும் தலைவர்களின் பெயர்களும் விமான நிலையங்களில் இடம்பெறவேண்டும்.

Tags : removal ,airport ,Kamaraj ,Leaders ,Anna ,Tamils , Removal of Kamaraj and Anna names at airport is an insult to Tamils: Leaders strongly condemn
× RELATED சென்னை விமான நிலையத்தில் டிஜியாத்ரா திட்டம் அறிமுகம்: வரும் 31ம் தேதி அமல்