×

தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சியினர், விஐபிக்களின் பணபரிமாற்றத்தை வருமான வரி அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்

சென்னை: தமிழகத்தில் சட்டமன்ற பொதுத்தேர்தல் வருவதையொட்டி அரசியல் கட்சியினர், முக்கிய பிரமுகர்களின் பண பரிமாற்றம் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் வருமான வரி துறை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார். மிழக சட்டமன்ற பொதுத்தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதையொட்டி தேர்தல் தொடர்பான பணிகள் குறித்து ஆலோசனை நடத்த இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையில் தேர்தல் ஆணைய உயர்மட்ட குழுவினர் 2 நாள் பயணமாக நேற்று முன்தினம் சென்னை வந்தனர். சென்னை கிண்டியில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழா ஓட்டலில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி நிர்வாகிகளை தேர்தல் ஆணைய உயர்மட்ட குழுவினர் தனித்தனியாக சந்தித்து ஆலோசனை நடத்தினர். அனைத்துக்கட்சி நிர்வாகிகளும், தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்த வேண்டும்’ என்று வலியுறுத்தினர். அதிமுக தவிர அனைத்து எதிர்க்கட்சி நிர்வாகிகளும், தமிழகத்தில் ஒவ்வொரு தேர்தலிலும் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்படுகிறது.

போலீசார் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதால் இதை தடுக்க முடியவில்லை. இந்த தேர்தலிலாவது இதற்கு ஒரு சரியான தீர்வு காண வேண்டும்’ என்று கூறினர். இந்நிலையில், டெல்லியில் இருந்து வந்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா மற்றும் உயர்மட்ட குழுவினர் நேற்று 2வது நாளாக தமிழக தலைமை செயலாளர், உள்துறை செயலாளர், டிஜிபி, தமிழக வருமான வரித்துறை மற்றும் அமலாக்க துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.இந்த ஆலோசனையின்போது, தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்னை மற்றும் சட்டமன்ற தேர்தலை எந்த தேதியில் நடத்தலாம் என்பது குறித்தும் கருத்துக்களை கேட்டனர். வருமான வரித்துறை அதிகாரிகள் மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகளுடன் தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆலோசனை நடத்தும்போது”தமிழகத்தில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தேர்தல் ஆணையம் தடுக்க முடியவில்லை என்று ஒவ்வொரு தேர்தலிலும் அரசியல் கட்சிகள் குற்றம் சாட்டி வருகிறார்கள்.

அதனால், தேர்தல் அறிவிப்பு வெளியிடும் முன்பே, அதாவது  இப்போதே தமிழகத்தில் அரசியல் கட்சியினர் மற்றும் முக்கிய பிரமுகர்களின் பண பரிமாற்றங்களை கண்காணிக்க வேண்டும். அப்படி பணம் பரிமாற்றம் இருந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையர் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

ஒரே கட்டமாக தேர்தல்
தமிழகத்தில் 2 நாள் ஆலோசனை முடிந்து, நேற்று பிற்பகல் இந்திய தலைமை தேர்தல் ஆணைய குழுவினர், பிற்பகல் புதுச்சேரி சென்று அந்த மாநில சட்டமன்ற தேர்தல் ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். இதையடுத்து டெல்லி செல்லும் தேர்தல் ஆணையர் தமிழகத்தில் தேர்தல் தேதியை அறிவிப்பது குறித்து உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துவார். அதைத்தொடர்ந்து மார்ச் முதல் வாரத்தில் தமிழகத்தில் எப்போது தேர்தல் நடத்தப்படும் என்ற தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது. தமிழகத்தில், ஒரே கட்டமாக தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

Tags : income tax authorities ,elections ,Tamil Nadu Assembly ,parties ,VIPs , Income tax officials should monitor the transfers of political parties and VIPs ahead of the Tamil Nadu Assembly elections
× RELATED மக்களவை தேர்தல்: திரிபுராவில் 54.47% வாக்குப்பதிவு