ஐஎஸ்எல் கால்பந்து அரையிறுதிக்கு முன்னேறியது மும்பை: தடுமாற்றத்தில் சென்னை

கோவா: ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் மும்பை முதல் அணியாக அரையிறுதியை உறுதி செய்துள்ளது. ஆனால் தொடர் தோல்விகளை சந்தித்து வரும் சென்னையின் எப்சி அணி  அரையிறுதிக்கு முன்னேறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்தியன் பிரிமீயம் லீக்(ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியின் நடப்புத் தொடர் இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளது. இதுவரை தலா 16 ஆட்டங்களில் விளையாடி உள்ள மும்பை சிட்டி எப்சி 10 வெற்றி, 4 டிரா 2 தோல்விகளுடன் 34 புள்ளிகளை பெற்று புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. கூடவே முதல் அணியாக அரையிறுதி வாய்ப்பையும் உறுதி செய்துள்ளது.  

ஏடிகே மோகன் பாகன்(கொல்கத்தா) அணியும் 16 போட்டிகளில் விளையாடி 10 வெற்றி, தலா 3 டிரா தோல்விகளுடன் 33 புள்ளிகளை பெற்று புள்ளிப் பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது. ஆனாலும் அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்யும் நிலையில் உள்ளது. இன்னொரு வெற்றி அல்லது டிரா செய்தால் மட்டுமல்ல, மற்ற அணிகளின் தோல்விகள் கூட கொல்கத்தாவுக்கு அரையிறுதி வாய்ப்பை தரும்.

அதற்கு அடுத்த 3 இடங்களில் தலா 16போட்டிகளில் விளையாடி தலா 5 வெற்றி, தலா 8 டிரா, தலா 3 தோல்விகளுடன் தலா 23 புள்ளிகள் பெற்று  எப்சி கோவா, ஐதராபாத் எப்சி, நார்த்ஈஸ்ட் யுனைடட் எப்சி அணிகள் சம பலத்தில் உள்ளன.  ஜாம்ஷெட்பூர் அணியும்  17 போட்டிகளில் விளையாடி 21 புள்ளிகளுடன் அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கிறது. இனி கிடைக்கும் வெற்றிகள் யாருக்கு அரையிறுதி வாய்ப்பு என்பதை முடிவு செய்யும். ஆனால் 2முறை சாம்பியன் பட்டம் வென்ற சென்னை அணியின் அரையிறுதி வாய்ப்பு கேள்விகுறியாக உள்ளது. சென்னை இதுவரை 17 போட்டிகளில் விளையாடி 3 வெற்றி, 8 டிரா, 6 தோல்விகளுடன் 17 புள்ளிகளை பெற்று புள்ளிப் பட்டியலில் 8வது இடத்தில் உள்ளது. எஞ்சியுள்ள 3 போட்டிகளில் வென்றாலும் 26புள்ளிகள் கிடைக்கும். அது அரையிறுதி வாய்ப்பை தருமா என்பது சந்தேகம்தான்.

காரணம் சென்னையை போலவே முன்னாள் சாம்பியன் பெங்களூர்,  எஸ்சி ஈஸ்ட் பெங்கால், கேரளா, புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ள ஒடிஷா ஆகிய அணிகளும் உள்ளன. அதனால்  மும்பை, கொல்கத்தாவின் தொடர் வெற்றிகள்,  கோவா, ஐதராபாத், நார்த்ஈஸ்ட், ஜாம்ஷெட்பூர், பெங்களூர் அணிகளின் தொடர் தோல்விகள் சென்னைக்கு அரையிறுதி வாய்ப்பை பெற்றுத் தரலாம். ஆனால் அதற்கான வாய்ப்பு குறைவு. எனினும் விளையாட்டில் கடைசி நேரத்தில் எதுவும் நடக்கலாம். கடந்த ஆண்டு தொடர் தோல்விகளால்  கடைசி இடத்தில் இருந்த சென்னை  இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

Related Stories:

>