மக்களவையில் ப.சிதம்பரம் பேச்சு: பணக்காரர்களுக்கான பட்ஜெட்

புதுடெல்லி: ‘இது பணக்காரர்களுக்காக, பணக்காரர்களால், பணக்காரர்களே தயார் செய்த பட்ஜெட்’ என முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் பேசி உள்ளார். மக்களவையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் காங்கிரஸ் மூத்த தலைவரான ப.சிதம்பரம் பேசியதாவது: கடந்தாண்டு கொரோனா பரவலுக்கு முன்பாகவே நாட்டின் பொருளாதாரம் படுமோசமாக இருந்தது. இரண்டாண்டுகளாகவே பொருளாதார மந்தநிலையை சந்தித்து வந்தது. இந்தச் சூழலில்தான் கொரோனா ஊரடங்கு விதிக்கப்பட்டது. இந்த ஊரடங்கல் 12 கோடிக்கும் மேற்பட்டோரின் வேலை இழந்தனர். மக்களின் வாங்கும் திறன் முற்றாக மோசமடைந்தது.

எனவே, பட்ஜெட்டில் ஏழை மக்கள், வேலையிழந்தோர், சிறு குறு தொழிலாளர்கள் மீது கவனம் செலுத்தி திட்டங்களை அறிவித்திருக்க வேண்டும். மாறாக இவர்கள் அனைவரையும் புறக்கணித்து, நாட்டின் 73 சதவீத சொத்துக்களை கொண்ட ஒரு சதவீத பெரும் பணக்காரர்களுக்காக பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. இது பணக்காரர்களால், பணக்காரர்களுக்காக, பணக்காரர்களே தயார்செய்த பட்ஜெட். ஏழை சாமானியர்களுக்கானது அல்ல.

பெரும்பாலான இந்தியாவை புறக்கணித்து விட்டனர்.

எனது வார்த்தையை குறித்துக் கொள்ளுங்கள், 2021 இறுதியில் நாட்டின் பொருளாதாரம் நீங்கள் நினைத்தபடி (11 சதவீத ஜிடிபி) எல்லாம் இருக்காது. அதிகபட்சம் 9.4 அல்லது 8.4 சதவீதமாக மட்டுமே இருக்கும். கொரோனாவை காரணம் காட்டி நீங்கள் தப்பித்து விட முடியாது. மக்கள்விரோத இந்த பட்ஜெட்டை நாங்கள் எதிர்க்கிறோம். எதிர்ப்புத் தெரிவித்தால் போராட்ட ஜீவி என எங்களை முத்திரை குத்துவீர்கள். அதைப் பற்றி கவலை இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories:

>