×

உத்தரகாண்ட் ஆற்றில் நீர் மட்டம் உயர்வு: மீட்பு பணிகள் தற்காலிக நிறுத்தம்

டேராடூன்: உத்தரகாண்ட்டின் தவுலி கங்கா ஆற்றில் திடீரென நீர் மட்டம் உயர்ந்ததால், முன்னெச்சரிக்கை கருதி, தபோவன் சுரங்கத்தில் 5வது நாளாக நடந்த மீட்பு பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. உத்தராண்ட் மாநிலத்தில் நந்தாதேவி பனிப்பாறை உடைந்ததில் தவுலி கங்கா ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு வந்த ரிஷிகங்கா நீர் மின்திட்ட கட்டமைப்புகள் மற்றும் தபோவன் சுரங்கம் முழுமையாக சேதமடைந்தது. அங்கு பணியாற்றி வந்த பல தொழிலாளர்கள் நிலை தெரியவில்லை. இதுவரை 34 சடலங்கள் மீட்பட்டுள்ள நிலையில், 175 பேரை காணவில்லை.

தபோவன் சுரங்கத்தில் சிக்கிய சில தொழிலாளர்கள் மீட்கப்பட்ட நிலையில், இன்னும் 30 பேர் வரை அங்கு ஆழமான பகுதியில் சிக்கியிருப்பதாக தெரிகிறது. அவர்களை மீட்க இந்தோ-திபெத் படை வீரர்கள் 450 பேர் மற்றும் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர், ராணுவத்தினர் ஈடுபட்டனர். 5ம் நாளாக நேற்று இங்கு மீட்பு பணிகள் தொடர்ந்தன. சுரங்கம் முழுவதையும் சேறும், பாறைகளும் மூடியுள்ளன. அவற்றிலிருந்து தொடர்ந்து தண்ணீர் வெளியேறியபடி இருப்பதாலும், பாறைகள் நிலையின்றி இருப்பதாலும் ஜேசிபி இயந்திரம் மூலம் கழிவுகளை அகற்றுவதில் சிக்கல் நிலவுகிறது. இதனால், சுரங்கத்தின் பக்கவாட்டில் துளையிட்டு முதற்கட்டமாக சிக்கியருக்கும் தொழிலாளர்களுக்கு ஆக்ஸிஜன் வழங்கவும், தொடர்ந்து அவர்களை காப்பாற்றவும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இரவு பகலாக நடக்கும் மீட்பு பணியில் நேற்று அதிகாலை 2 மணி அளவில் துளையிடும் பணிகள் தொடங்கப்பட்டன. இதுவரை 120 மீட்டர் நீளத்திற்கு சுரங்கத்தின் உள்ளே  உள்ள கசடுகள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன. சுமார் 180 மீட்டர் ஆழத்தில் தொழிலாளர்கள் சிக்கியிருக்கலாம் என தெரிகிறது. 12 மீட்டர் தூரத்திற்கு சுரங்கத்தில் துளையிட முடிவு செய்து பணிகள் நடந்து வந்த நிலையில், நேற்று திடீரென தவுலிகங்கா ஆற்றில் நீர் மட்டம் உயரத் தொடங்கியது.

இதனால் முன்னெச்சரிக்கை கருதி, மீட்பு பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. தபோவன் சுரங்கத்தில் இருந்து புல்டோசர் உள்ளிட்ட வாகனங்கள் வெளியில் கொண்டு வரப்பட்டுள்ளன. சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்களின் உறவினர்கள், மீட்பு பணிகள் மந்தகதியில் நடப்பதாக ஏற்கனவே குற்றம்சாட்டி வரும் நிலையில், தற்போது தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருப்பது அவர்களை கவலை அடையச் செய்துள்ளது.

Tags : Uttarakhand ,river water level rise ,Rescue operations , Uttarakhand, Water Level, Rise: Recovery
× RELATED பிரபல கல்வி நிறுவனங்களின் நுழைவுத்...