×

தெலங்கானா பொதுக்கூட்டத்தில் சலசலப்பு: போராட்டம் நடத்தியவர்களை நாய் என திட்டிய முதல்வர் ராவ்: மன்னிப்பு கேட்கக் கோரி எதிர்க்கட்சிகள் கண்டனம்

நலகொண்டா: பொது மேடையில் பேசிக் கொண்டிருந்த போது, கூட்டத்தில் போராட்டம் நடத்தியவர்களைப் பார்த்து ‘நாய்’ என தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் திட்டிய  விவகாரம் சர்ச்சையாகி உள்ளது.  தெலங்கானா மாநிலம் நலகொண்டா மாவட்டத்தில் நாகர்ஜூன் சார் பகுதியில் அரசு திட்டப்பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. இதில் அம்மாநில முதல்வரும், தெலங்கானா ராஷ்டிரிய சமிதி (டிஆர்எஸ்) கட்சி தலைவருமான சந்திரசேகர ராவ் பங்கேற்று அடிக்கல் நாட்டினார். விரைவில் அத்தொகுதியில் இடைத்தேர்தல் நடக்க உள்ளதையொட்டி, பொதுக்கூட்டமும் நடந்தது. இதில் அவர் பேசிக் கொண்டிருந்த போது, பெண்கள் உள்ளிட்ட சிலர் பதாகைகளை ஏந்தி அரசுக்கு எதிரான கோஷமிட்டபடி போராட்டம் நடத்தினர்.

இதனால், பொறுமை இழந்த சந்திரசேகர ராவ், பொது இடம் என்றும் கூட பாராமல், ‘‘மனு கொடுத்து விட்டு இங்கிருந்து இடத்தை காலி செய்யுங்கள். இல்லாவிட்டால் அமைதியாக இருங்கள். உங்கள் கோமாளித்தனத்தால் இங்கு யாரையும் தொந்தரவு செய்யாதீர்கள். உங்களைப் போன்ற நிறைய நாய்கள் இருக்கிறார்கள்.

நாங்கள் மட்டும் உறுதியாக இருந்தால், உங்கள் தடமே இல்லாமல் போய்விடும். நீங்கள் எல்லாம் தூசியாகி விடுவீர்கள்,’’ என கோபம் கொந்தளிக்க பேசினார். இதற்கு பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும், ‘நாய்’ என பேசியதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும்’ என கூறியுள்ளனர்.

Tags : Rao ,Telangana ,protesters ,Opposition parties , Telangana, struggle, Chief Minister Rao, Opposition, condemnation
× RELATED தெலுங்கானாவில் உள்ள கோயிலில் பிரபல...