×

இயல் இசை நாடக மன்றத்தில் கலைஞர் அல்லாதவர்கள் நியமனம்: கலைமாமணி விருதை திருப்பி கொடுக்க முடிவு

சென்னை: தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தில் கலைஞர் அல்லாதவர்கள் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டதற்கு கலைஞர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து, கலைமாமணி வேல்கனி, கோமதி உள்ளிட்டோர் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:  
கலைஞர்களின் நலத்திட்டங்களை நிறைவேற்றும் தலைமை பீடமான தமிழ்நாடு இயல், இசை நாடக மன்றத்தின் பொதுக்குழுவில் கலைஞர் அல்லாதவர்களை தமிழக அரசு நியமனம் செய்துள்ளது. இது கலைஞர்களை வேதனைப்பட வைத்துள்ளது.

கிராமியக் கலை பிரிவில் பொதுக்குழு உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டுள்ள திருநெல்வேலியை சேர்ந்த பொன்பாண்டி கலைநிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யும் அமைப்பாளர். அதேபோல், மற்றொரு உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டுள்ள துரைராஜ் ஓய்வுபெற்ற பள்ளி ஆசிரியர். இவரும் கலை நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்பவர். இவர்கள் கலைஞர்கள் இல்லை. ஆனால் அரசாணையில் பொன்பாண்டி கரகாட்டக் கலைஞர் என்றும், துரைராஜ் வில்லிசைக் கலைஞர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவர்கள் எப்படி கலைஞர்களுக்கான நலத்திட்டங்களையும் கலைமாமணி விருது மற்றும் தேசிய விருதுக்கான சிறந்த கலைஞர்களை தேர்வு செய்வார்கள். எனவே, கலைஞர் அல்லாத பொன்பாண்டி மற்றும் துரைராஜ் ஆகியோரை மாற்றம் செய்து தகுதிவாய்ந்த, அனுபவம் மிக்க கலைஞர்களை நியமனம் செய்ய வேண்டும்.

எனவே, கலைமாமணி விருதுக்கு உரியவர்களை தேர்வு செய்திட தமிழக அரசு உரிய விதிமுறைகளை உருவாக்கி உத்தரவிடவும் அதனடிப்படையில் விருதுக்கு உரியவர்களை தேர்வு செய்யவும் அரசை வேண்டுகிறோம். எங்கள் கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அனைத்து கலைஞர்களும் கலைமாமணி விருதினை திருப்பி கொடுக்க இருக்கிறோம். இவ்வாறு கூறினர்.

Tags : Non-Artists , Physical Music Theater, Artists, Condemnation
× RELATED பணம் கொடுத்து ஆட்களை அழைத்துச்சென்று...