×

எம்.பி. சீட் வாங்கி தருவதாக 1.50 கோடி மோசடி: பெங்களூருவை சேர்ந்த தந்தை, மகன் உட்பட மூவர் கைது: சிபிசிஐடி போலீசார் நடவடிக்கை 300 கோடி மோசடி செய்ததும் கண்டுபிடிப்பு

சென்னை: பிரதமர் மோடி மற்றும் தமிழக கவர்னர் பெயரைச் சொல்லி ஒரு கும்பல் ேமாசடி செய்து பல கோடி மோசடி செய்துள்ளதாக புகார்கள் வந்தது. இந்நிலையில், சென்னையை சேர்ந்த தொழிலதிபர் ஜான் என்பவர் தனக்கு ராஜ்ய சபா சீட் வாங்கி தருவதாக ரூ.1.50 கோடி பெற்று மோசடி செய்ததாக தமிழக ஆளுநர் மாளிகையில் புகார் அளித்துள்ளார். இது குறித்து விசாரிக்கும்படி ஆளுநர் பன்வாரிலால், தமிழக டிஜிபி திரிபாதிக்கு உத்தரவிட்டார்.

இது குறித்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி, மைசூரை சேர்ந்த மகாதேவ் ஐயா என்பவர் தான் இந்த மோசடியில் ஈடுபட்டது தெரியவந்ததால், அவர் மீது வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து அவரை பிடிக்க சிபிசிஐடி தனிப்படையினர் மகாதேவ் ஐயா (59), அவரது மகன் அங்கீத் (29) மற்றும் ஒசூரை சேர்ந்த புரோக்கர் ஓம் (49) ஆகிய மூவரையும் நேற்று முன்தினம் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், சென்னை தி.நகரில் அலுவலகம் தொடங்கி, பிரதமர் நரேந்திர மோடியிடம் பரிந்துரை கடிதம் பெற்று மாநிலங்களவை உறுப்பினர் சீட் பெற்றுத்தருவதாகவும், பல்கலை துணைவேந்தர் பதவி, சிண்டிகேட் உறுப்பினர் பதவி, பேராசிரியர் பதவிகள், மற்றும் மத்திய அரசின் டெண்டர்களை பெற்றுத்தருவதாக தொழிலதிபர் ஜான் உட்பட பலரிடம் பல கோடி ரூபாய்க்கு மோசடி செய்துள்ளது தெரியவந்துள்ளது.

மேலும் தூத்துக்குடி தொழிலதிபர் ஒருவரிடம் மத்திய அரசின் டெண்டர் வாங்கித் தருவதாக ரூ.18 கோடி வாங்கி உள்ளனர். லஞ்ச ஒழிப்பு வழக்கில் இருந்து விடுவிக்க சிபிஐ இயக்குனரிடம் இருந்து சிபாரிசு கடிதம் தயாரித்து மோசடி செய்தது உள்ளிட்ட பல்வேறு புகார்களில் இருப்பது தெரியவந்துள்ளது. இப்படி மோசடியாக பெற்ற ரூ.300 கோடி பணத்தை மகாதேவ் ஐயா, தனது மகன் அங்கீத் பெயரில் டெபாசிட் செய்துள்ளார்.
இதையடுத்து மூன்று பேரையும் சிபிசிஐடி ேபாலீசார் சென்னைக்கு நேற்று காலை அழைத்து வந்தனர். அவர்களிடம் இந்த மோசடி பின்னணியில் உள்ள நபர்கள் யார் என்பது குறித்து சிபிசிஐடி போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். கைது செய்யப்பட்ட மூன்று பேரையும் 5 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தவும் சிபிசிஐடி போலீசார் முடிவு செய்துள்ளனர்.

சிபிசிஐடி போலீசாரை ரவுடியாக சித்தரித்த மகாதேவ்

சென்னை சிபிசிஐடி தனிப்படையினர் மகாதேவ் ஐயா மற்றும் அவரது மகன் அங்கீத், புரோக்கர் ஓம் ஆகியோரை கைது செய்தனர். அப்போது மகாதேவ் ஐயா சென்னையில் இருந்து ரவுடி கும்பல் ஒன்று எங்களை துப்பாக்கி முனையில் கடத்துவதாக மைசூர் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். அதன்படி, தமிழக சிபிசிஐடி போலீசாரை, ரவுடிகள் என்று நினைத்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அப்போது சிபிசிஐடி போலீசார் எவ்வளவு கூறியும் அதை மைசூர் போலீசார் நம்பவில்லை. அந்த அளவுக்கு மகாதேவ் ஐயா மைசூரில் செல்வாக்கு வாய்ந்த நபராக இருக்கிறார். இதையடுத்து, தமிழக உயரதிகாரிகளுக்கு சிபிசிஐடி தனிப்படையினர் தகவல் தெரிவித்தனர். அதன்படி சிபிசிஐடி உயரதிகாரிகள் கர்நாடகா காவல் துறை உயர் அதிகாரிகளிடம் பேசி தனிப்படையினரை மைசூர் போலீசாரிடம் இருந்துவிடுவித்துள்ளனர்.

Tags : Bangalore , Bangalore, fraud, arrest, CPCIT, action
× RELATED பெங்களூரு விமான நிலையத்தில்...