டிவிட்டருடன் மோதல் நிலவும் நிலையில் சமூக வலைதளங்களை கட்டுப்படுத்த சட்டம்: மத்திய அரசு அதிரடி அறிவிப்பு

புதுடெல்லி: டிவிட்டர்-மத்திய அரசு இடையே மோதல் வலுத்துள்ள நிலையில், இந்திய சட்டங்களுக்குள் சமூக வலைதளங்களை உட்படுத்த சட்ட திருத்தம் செய்ய இருப்பதாக நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவான கருத்துகள் டிவிட்டரில் வேகமாக பரவியது. அதில் பல சர்ச்சையான பதிவுகள் இருப்பதாகவும், பொய் தகவல்களை பரப்பும் கணக்குகளை நீக்க வேண்டும் எனவும் மத்திய அரசு உத்தரவிட்டது. கிட்டத்தட்ட 1200 கணக்குகளை முடக்க மத்திய அரசு உத்தரவிட்ட நிலையில், டிவிட்டர் நிர்வாகம் வெறும் 500 கணக்குகளை மட்டும் இடைநீக்கம் செய்தது.

அதுமட்டுமின்றி, டிவிட்டர் சட்டவிதிகளுக்கு புறம்பாக அந்த கணக்குகள் நடந்து கொள்ளவில்லை என்பதால் 500 கணக்குகள் இந்தியாவில் மட்டுமே முடக்கப்படும் என்றும், இதில் ஊடக நிறுவனங்கள், பத்திரிகையாளர்கள், சமூக அமைப்புகள், அரசியல்வாதிகளின் கணக்குகள் இடம் பெறவில்லை என்றும் கூறியது. மேலும், கணக்குகளை முடக்குவது கருத்து சுதந்திரத்தை பாதிப்பதாகவும் டிவிட்டர் கூறியது. இதன் காரணமாக மத்திய அரசுக்கும் டிவிட்டருக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது. அரசு உத்தரவை முழுமையாக அமல்படுத்தாவிட்டால் டிவிட்டரின் உயர்பதவி அதிகாரிகள் கைது செய்யப்படுவார்கள் என மத்திய அரசு தரப்பில் கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக மாநிலங்களவையில் நேற்று பேசிய மத்திய தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத், ‘‘சமூக வலைதளங்களை நாங்கள் மதிக்கிறோம். அவை சாமானிய மக்களுக்கு அதிகாரம் அளிக்கின்றன. டிஜிட்டல் இந்தியா திட்டத்தில் சமூக வலைதளங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆனால், அதே சமூக வலைதளங்கள் பொய் செய்திகள் மற்றும் வன்முறையை பரப்பினால் அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

இதில், அரசு எந்த தயக்கமும் காட்டாது. சமூக வலைதளங்கள் இந்திய சட்டங்களுக்கு பொறுப்பு கூறும் வகையில் விரைவில் சட்ட திருத்தம் கொண்டு வரப்படும்’’ என்றார். மத்திய அரசு புகார் அளித்த கணக்குகள் இந்திய சட்டவிதிகளை மீறியிருந்தாலும், டிவிட்டரின் விதிகளை மீறவில்லை என்றே டிவிட்டர் நிர்வாகம் நடவடிக்கை எடுக்காமல் தட்டிக் கழிக்கிறது. இந்நிலையில், மத்திய அமைச்சர் சட்ட திருத்தம் செய்ய இருப்பதாக கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>