×

தொழிற்சாலை உரிமையாளர்களுடன் ஆலோசனை: திடக்கழிவுகளை முறையாக வெளியேற்ற வேண்டும்: கலெக்டர் அறிவுறுத்தல்

காஞ்சிபுரம்: தொழிற்சாலை உரிமையாளர்கள், பிரதிநிதிகளுடன் நடந்த கலந்தாலோசனை கூட்டத்தில், தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் திடக்கழிவுகளை முறையாக வெளியேற்ற வேண்டும் என கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் அறிவுறுத்தினார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு தொழிற்சாலைகளின் உரிமையாளர்கள் மற்றும் பிரதிநிதிகளுடன் கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார், தலைமையில் கலந்தாலோசனை கூட்டம் நடந்தது.

கூட்டத்தில், தொழிற்சாலைகள் மற்றும் தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள், அரசின் வழிகாட்டுதலை பின்பற்றி முகக்கவசம், சமூக இடைவெளி ஆகியவற்றை கடைபிடித்து பாதுகாப்பாக பணியாற்ற வேண்டும். இதற்கு உரிய முன்னேற்பாடுகளை தொழிற்சாலைகள் மற்றும் தொழில் நிறுவனங்கள் செய்ய வேண்டும்.

தொழிற்சாலைகளில் குழந்தை தொழிலாளர்களை சேர்ப்பதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் தொழிற்சாலைகள் முக்கிய பங்கு வகிக்கிறது, தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் திடக்கழிவுகளை முறையாக வெளியேற்ற வேண்டும். அபாயகரமான கழிவுகளை முறையாக பாதுகாக்கப்பட்ட நிலத்தில் கொட்டுதல் மற்றும் மறுசுழற்சிக்கு அனுப்ப வேண்டும். தொழிற்சாலைகள் மற்றும் தொழில் நிறுவனங்களின் சுற்றுப்புறங்களில் சுற்றுச்சூழலை பாதுகாக்க மரக்கன்றுகள் நட்டு, முறையாக பராமரிக்க வேண்டும். தொழில் நிறுவனங்களின் சமூக பொறுப்புணர்வுக்காக ஒதுக்கப்படும் நிதிகள் முறையாக செலவிட வேண்டும்.

கொரோனா காலத்தில் தொழிற்சாலைகள் மற்றும் தொழில் நிறுவனங்களின் சார்பில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பு நிவாரண பொருட்களை வழங்கி உதவியதற்கு மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன் என கூறினார். இதில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஸ்ரீதர், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ரவிச்சந்திரன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் மதியழகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Tags : factory owners ,Collector , Factory, consulting, solid waste
× RELATED வாக்குச்சாவடி மையங்களுக்குள்...