×

இடஒதுக்கீடு பின்பற்றாமல் பணி ஆணை 284 உதவி மருத்துவர்கள் நியமனம் இரவோடு இரவாக ரத்து: எதிர்க்கட்சிகள், மருத்துவர் சங்கங்கள் போராட்ட அறிவிப்பு : பின்வாங்கியது அரசு

சென்னை: தமிழகத்தில் இடஒதுக்கீடு முறைகளை பின்பற்றாமல் நியமிக்கப்பட்ட 284 உதவி மருத்துவர் பணி நியமன ஆணை இரவோடு இரவாக ரத்து செய்யப்பட்டது. எதிர்க்கட்சிகள், மருத்துவர் சங்கங்கள் சார்பில் போராட்டம் நடத்தப்படும் என எச்சரிக்கை விடுத்ததால் முறையாக இடஒதுக்கீட்டை பின்பற்றி புதிய ஆணையை அரசு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் 284 உதவி மருத்துவர்கள் பணியிடங்கள் நிரப்ப, தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டது. இதைத்தொடர்ந்து தேர்வு நடத்தப்பட்டு, தகுதியானவர்களின் பட்டியல் தமிழக அரசின் பொது சுகாதாரத்துறை இயக்குனருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த பட்டியலின் படி சுகாதாரத்துறை இயக்குனர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். பணி நியமனத்தில் இட ஒதுக்கீடு முறை முழுமையாக பின்பற்ற வேண்டும். முறையாக கலந்தாய்வு நடத்தி பணி நியமன ஆணைகளை வழங்க வேண்டும். ஆனால் இடஒதுக்கீடு முறையை பின்பற்றாமலும், கலந்தாய்வு நடத்தாமலும் பொது சுகாதார துறை உதவி மருத்துவர் பணியிடங்களுக்கு ஆட்களை நியமித்து நேற்றுமுன்தினம் உத்தரவு பிறப்பித்தது.

குறிப்பாக எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டை பின்பற்றாமலும், கலந்தாய்வு நடத்தாமலும் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. மருத்துவ பணியாளர் தேர்வாணையம் அளித்த பட்டியலில் இருந்த முதல் 284 நபர்களுக்கு அப்படியே பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் மற்றும் மருத்துவர் சங்கங்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்தன. இடஒதுக்கீட்டை பின்பற்றாத காரணத்தால் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கான இடங்கள் பறிக்கப்பட்டுள்ளது. கலந்தாய்வு நடத்தாததால் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு நெடுந்தூரத்திலும், குறைந்த மதிப்பெண் பெற்றவர்களுக்கு சொந்த ஊர்களிலும் பணி நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர். எனவே இந்த பணி நியமன உத்தரவை ரத்து செய்து விட்டு, விதிகளை பின்பற்றி உதவி மருத்துவர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். அவ்வாறு செய்யாவிட்டால், போராட்டத்தில் ஈடுபடப்போவதாகவும் மருத்துவர் சங்கங்கள் எச்சரிக்கை விடுத்தன.

இந்நிலையில் நேற்று இரவோடு இரவாக உதவி மருத்துவர் பணி நியமன ஆணைகளை ரத்து செய்து பொது சுகாதாரத்துறை இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. விதிகளை பின்பற்றாமல் மருத்துவ பணியாளர் தேர்வாணையம் அளித்த பட்டியலில் உள்ள முதல் 284 நபர்களுக்கு வழங்கப்பட்ட பணி நியமன ஆணைகளை ரத்து செய்து அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து உரிய விதிகளை பின்பற்றி, எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்கி புதிய பணி நியமன ஆணையும் இரவோடு இரவாக வழங்கப்பட்டது. இது தொடர்பாக மருத்துவர் சங்கத்தினர் கூறியதாவது: மருத்துவர் பணியிடங்கள் நியமனத்தில் சமீப காலமாக முறையான விதிகள் பின்பற்றப்படுவதில்லை. உடனே எந்த இட ஒதுக்கீட்டையும் பின்பற்றாமல் பணி நியமன ஆணை வழங்கப்பட்டு வருகிறது.

மினி கிளினிக்குகளில் பணியாற்ற தேர்வு செய்யப்பட்ட மருத்துவர்கள், பணியாளர்கள் கூட முறையாக தேர்வு செய்யப்படுவதில்லை. தேர்தல் நேரத்தில் இவ்வாறு செய்வது முறையல்ல. விதிகளை பின்பற்றியே அனைத்து பணி நியமனங்களும் நடக்க வேண்டும் என்றனர். இதுபற்றி பொது சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, மருத்துவ பணியாளர் தேர்வாணையம் அளித்த பட்டியலின்படிதான் பணிநியமனம் வழங்கப்பட்டது. அதில் குறைபாடு இருப்பதாக பல்வேறு தரப்பில் இருந்து கருத்துக்கள் வந்ததால் ஆய்வு செய்யப்பட்டு, ஏற்கனவே வழங்கப்பட்ட பணி நியமன ஆணை ரத்து செய்யப்பட்டு விட்டது. புதிதாக இட ஒதுக்கீடு பின்பற்றி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது. எனவே இதில் எந்த பிரச்னையும் இல்லை. இவ்வாறு தெரிவித்தனர்.

Tags : Opposition ,Work Order 284 Non-Occupational Physicians Appointment ,Government , Work Order 284 appointment of assistant doctors canceled overnight without reservation
× RELATED ரஷ்ய அதிபர் தேர்தலில் புடின் மீண்டும்...