டிராக்டர் பேரணியில் விவசாயி பலி டெல்லி காவல் துறைக்கு ஐகோர்ட் நோட்டீஸ்

புதுடெல்லி: குடியரசு தினத்தன்று விவசாயிகள் நடத்திய பேரணியின் போது டிராக்டர் கவிழந்து உயிரிழந்த விவகாரத்தில், சிறப்பு விசாரணைக்குழுவை அமைக்க கோரிய மனுவிற்கு விளக்கம் அளிக்குமாறு ஆம் ஆத்மி அரசு, டெல்லி காவல் துறைக்கு நோட்டீஸ் அனுப்ப உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக குடியரசு தினத்தன்று டிராக்டர் பேரணியை விவசாயிகள் திட்டமிட்டு நடத்தினர். இந்த பேரணியின் போது போலீசாருக்கும் விவாசயிகளுக்கும் இடையே மோதல் உருவானது. அப்போது நவ்ரீத் சிங் என்கிற 25 வயது இளம் விவசாயி ஓட்டிச்சென்ற டிராக்டர் கவிழந்து விபத்துக்குள்ளானது. இதில், அவர் பரிதாகமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட நவ்ரீத் சிங்கின் தாத்தா, நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் சிறப்பு விசாரணைக்குக்குழு அமைத்து விசாரித்து உண்மையை கண்டறிய வேண்டும் என்று கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், நவ்ரீத்தின் தலையில் குண்டடிப்பட்ட காயத்தால் இறந்துவிட்டதாகவும், எனவே, இதனை நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் விசாரிக்க வேண்டும் என்றும் கோரியுள்ளார். இந்த மனு நேற்று நீதிபதி யோகேஷ்கண்ணா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, இந்த மனுவிற்கு ஆம் ஆத்மி அரசு, உபி அரசு டெல்லி காவல் துறை மற்றும் நவ்ரீத் சிங் உடலை பிரேத பரிசோதனை செய்த மருத்துவமனையில் தலைமை மருத்துவ கண்காணிப்பாளர்கள் விளக்கம் அளிக்குமாறு கூறி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். அதோடு, இந்த விவகாரம் குறித்து போலீசார் இதுவரை நடத்திய விசாரணை தகவல்களின் அறிக்கையினை அடுத்த கட்ட விசாரணை தேதிக்கு முன்பாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை பிப்ரவரி 25ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.

Related Stories:

>