போலி ஆவணங்கள் தயாரித்து பி.டி.ஏ நிலங்களை விற்பனை செய்ய முயற்சி: இன்ஜினியர், உதவி இன்ஜினியர் உள்பட 5 பேர் கைது

பெங்களூரு: போலி ஆவணங்களை தயாரித்து பல கோடி ரூபாய் மதிப்பிலான பி.டி.ஏ நிலங்களை விற்பனை செய்ய முயற்சித்த ஆர்.டி.நகர் பி.டி.ஏ இன்ஜினியர், உதவி இன்ஜினியர் உள்பட 5 பேரை சேஷாத்திரிபுரம் போலீசார் கைது செய்துள்ளனர். பெங்களூரு எச்.பி.ஆர் லே அவுட் முதலாவது மற்றும் இரண்டாவது ஸ்டேஜில் உள்ள 20x30, 30x40, 40x50 சதுர அடி பரப்பளவு கொண்ட பி.டி.ஏ நிலத்தை, போலி ஆவணங்களை தயாரித்து, சட்டவிரோதமாக பல கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ய உதவி இன்ஜினியர்கள் மற்றும் இன்ஜினியர்கள் திட்டமிட்டிருந்தனர்.

இது குறித்து பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சிலர் மாநில அரசுக்கும் மற்றும் போலீசிற்கும் புகார் அளித்து வந்தனர். இதையடுத்து தனிப்படை அமைத்த போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அதன்படி நேற்று சமீபத்தில் பெங்களூரு வருவாய் துறை அலுவலகத்தில் ஊழல் தடுப்பு படையினர் அதிரடி சோதனை நடத்தினர். ஆவணங்கள் உள்பட பல்வேறு விவரங்களை பி.டி.ஏ அதிகாரிகள் வாங்கியுள்ளனர். பின்னர் அந்த விவரங்களை வைத்து போலி ஆவணங்களை தயாரித்து, சம்பந்தப்பட்ட பி.டி.ஏ நிலத்தை தனி நபர்களுக்கு பல கோடி ரூபாய்க்கு விற்பனை செய்து, பின்னர் அதை தனது பெயர்களுக்கு மாற்றி கொள்ள திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது. ஏற்கனவே இதற்கு முன்னதாக வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த பி.டி.ஏ அதிகாரி ஒருவரை ஏ.சி.பி கைது செய்துள்ளது. அவர் கொடுத்த தகவல் மற்றும் பொதுமக்கள் தரப்பில் வந்த புகாரை ஆதாரமாக கொண்ட போலீசார் நடவடிக்கை எடுக்க முடிவு செய்தனர்.

இது குறித்து உயர் அதிகாரிகளின் அனுமதிக்காக காத்திருந்தபோது, சேஷாத்திரிபுரம் போலீசார், இந்த பி.டி.ஏ விவகாரம் குறித்து நடவடிக்கை எடுக்க அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி நேற்று முன்தினம் காலை பெங்களூரு ஆர்.டி நகர் வடக்கு மண்டலத்தில் உள்ள பி.டி.ஏ அலுவலகத்தில் அதிரடி சோதனை நடத்திய, போலீசார், எச்.பி.ஆர் லே அவுட்டில் நிலம் விற்பனை செய்வது மற்றும் அதற்காக தயாரிக்கப்பட்ட ஆவணங்கள், விலை நிர்யணம் அடங்கிய சி.டி போலீசாருக்கு கிடைத்தது. அதை வைத்து யார் யார் மோசடியில் ஈடுபட்டனர் என்ற விவரங்களை சேகரித்த போலீசார், ஆர்.டி.நகர் அலுவலகத்தில் பணியாற்றி வந்த இன்ஜினியர், உதவி இன்ஜினியர்கள் உள்பட 5 பேரை கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் ஆர்.டிநகர் வடக்கு மண்டல இன்ஜினியர் சீனிவாஸ், உதவி இன்ஜினியர்கள் எம்.எஸ் சங்கரமூர்த்தி, கே.என் ரவி குமார், சபீர் அகமது, டி.ஸ்ரீராம் என்று தெரியவந்தது. ஏற்கனவே விதானசவுதாவில் இந்த பி.டி.ஏ நிலம் மோசடி தொடர்பான விவாதங்கள் நடந்தது. அப்போது முதல்வர் எடியூரப்பா, ஒரு வாரத்தில் பி.டி.ஏ மோசடியில் ஈடுபடுவர்களை கைது செய்து நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளித்திருந்தார். இந்நிலையில் இந்த கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதால், மேலும் சில பி.டி.ஏ அதிகாரிகள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது.

* ஓய்வுபெறும் நேரத்தில் கைது

பெங்களூரு ஆர்.டி நகர் பி.டி.ஏ அலுவலகத்தில் பணியாற்றி வந்த இந்த இன்ஜினியர் மற்றும் 4 உதவி இன்ஜினியர்கள் இன்னும் சில நாட்களில் ஓய்வு பெறவுள்ளனர். அதற்கு பி.டி.ஏ நிலத்தை விற்பனை செய்து, போதியளவு பணம் சம்பாதிக்க வேண்டுமென்ற நோக்கில், வருவாய்துறை மற்றும் பி.பி.எம்.பி அதிகாரிகள் உதவியுடன் அரசு நிலத்தை போலி ஆவணங்களை தயாரித்து விற்பனை செய்ய முயற்சித்து கைதாகியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories:

>