பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்கள் கிடைக்குமா?: சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நியாய விலை கடை ஊழியர்கள் நாளை காத்திருப்பு போராட்டம்.!!!

சென்னை: சம வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி நியாய விலை கடை ஊழியர்கள் நாளை முதல் காத்திருப்பு போராட்டம் அறிவித்துள்ளனர். இதனால் பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்கள் கிடைக்குமா? என்ற  அச்சம் ஏற்பட்டுள்ளது.இதுகுறித்து தமிழ்நாடு கூட்டுறவு நியாயவிலை கடை அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு கூட்டுறவு நியாயவிலை கடை ஊழியர்கள் அனைத்து தொழிற்சங்க  கூட்டமைப்பு நிர்வாகிகள் கூட்டம் நேற்று (10ம் தேதி) சென்னையில் தொமுச பேரவை செயலாளர் இரா.பொன்னுராம் தலைமையில் நடைபெற்றது.

 இந்த கூட்டத்தில் தொமுச, சிஐடியு, தமிழ்நாடு அரசு கூட்டுறவு நியாயவிலை கடை  பணியாளர் சங்கம், ஏஐடியுசி, ஐஎன்டியுசி, டிடியுசி, அம்பேத்கர் சங்கம், ஜெஎம்எஸ், போக்குவத்து மற்றும் பொது தொழிலாளர்கள் சங்கம், எரிவாயு  பணியாளாகள் சங்கம் ஆகிய தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொணடனர். இந்த கூட்டத்தில், கூட்டுறவு நியாயவிலை கடை ஊழியர்களுக்கு சமவேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும், பொது விநியோக திட்டத்தை சீரழிக்கும்  நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் கைவிட வேண்டும், ஒரே துறையின் கீழ் பொது வினியோக திட்டம் செயல்படுத்த வேண்டும் என்ற பிரதான கோரிக்கைகளை முன்வைத்து 2018ம் ஆண்டு முதல் தொடர்ந்து மாநில அளவில் பல்வேறு  கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டது.

பின்னர் வேலைநிறுத்த போராட்டம் நடத்துவதாக ரேஷன் கடை ஊழியர்கள் அறிவித்ததால், தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தி, ஊதிய குழு அமைப்பதற்கான குழு அமைத்தது. ஆனாலும் கடந்த 3 ஆண்டுகளாக ஊதிய உயர்வு  கிடைக்கவில்லை. தமிழக அரசால் ரேஷன் கடை ஊழியர்கள் தொடர்ந்து ஏமாற்றப்பட்டு வருகிறோம். இதையடுத்து ரேஷன் கடை ஊழியர்களின் கோரிக்கையை அரசு நிறைவேற்றும் வரை 12ம் தேதி (நாளை) சென்னை, கீழ்ப்பாக்கத்தில் உள்ள  பதிவாளர் அலுவலகத்தில் காலை 10 மணியில் இருந்து ஊதிய உயர்வு அறிவிப்பை தமிழக அரசு வழங்கும் வரை காத்திருப்பு போராட்டத்தை நடத்துவது என கடந்த வாரம் ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டது.

அதன்படி, நாளை முதல் நியாயவிலை கடை ஊழியர்கள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.இந்த போராட்டம் தொ.மு.ச. பேரவை பொருளாளர் கி.நடராஜன், தமிழ்நாடு கூட்டுறவு ஊழியர் சம்மேளனம் (சிஐடியு) மாநில தலைவர்  ஆர்.கிருஷ்ணமூர்த்தி, தமிழ்நாடு அரசு நியாயவிலை கடை பணியாளர் சங்க மாநில தலைவர் ஜி.ராஜேந்திரன், தமிழ்நாடு அரசு பொது விநியோக ஊழியர் சங்க மாநில தலைவர் டி.பால்ராஜ் ஆகியோர் தலைமையில் நடைபெறும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நியாயவிலை கடை ஊழியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை முதல் காத்திருப்பு போராட்டம் நடத்துவதால், நாளை முதல் ரேஷன் கடைகள் மூடப்பட்டு இருக்கும் என்றும், பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்கள் கிடைக்காது என்றும்  கூறப்படுகிறது.

Related Stories:

>