×

இந்தியாவின் சட்டங்களை மதித்து நடக்க வேண்டும்: ட்வீட்டர் நிறுவனத்திற்கு மத்திய அரசு மீண்டும் எச்சரிக்கை

புதுடெல்லி: இந்திய அரசின் சட்டங்களை மதித்து நடக்க வேண்டும் என ட்வீட்டர் நிறுவனத்திற்கு மத்திய அரசு மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது. விவசாயிகள் பிரச்னையில் மத்திய அரசின் புகார்கள் குறித்து ட்வீட்டர் நிறுவனம் முறையான நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அதிருப்தி தெரிவித்துள்ள மத்திய அரசு, ட்வீட்டரின் இந்தப் போக்கு தொடர்ந்தால், அந்நிறுவனத்தின் இந்திய நிர்வாகிகள் கைது செய்யப்படுவார்கள் என்றும் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

டெல்லியில் நடந்து வரும் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக பல்வேறு நாடுகளை சேர்ந்த பிரபலங்கள், ட்வீட்டர் மூலம் கருத்துகளை பதிவிட்டிருந்தனர். அந்த பதிவுகளை தொடர்ந்து ‘விவாயிகளின் போராட்டம், விவசாயிகளை காப்பாற்றுவோம்’ என்ற ஹேஷ்டாக்குகள் மூலம் பல்லாயிரக்கணக்கானோர் ட்வீட்டரில் தங்கள் கருத்துகளை தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர்.

‘இந்த பதிவுகள் பலவற்றில் உண்மைத்தன்மை கேள்விக்குரியதாக உள்ளது. உண்மைக்கு புறம்பான விஷயங்கள் வேகமாக பரவுகின்றன. எனவே அந்தப் பதிவுகளை நீக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று மத்திய அரசு, ட்வீட்டர் நிறுவனத்திற்கு உத்தரவிட்டது. ஆனால் இது கருத்து சுதந்திரத்தை பாதிக்கும் என்று ட்வீட்டர் நிறுவனம் மறுப்பு தெரிவித்தது. இதனால் அதிருப்தியடைந்த மத்திய அரசு, ‘அமெரிக்காவில் ட்ரம்பின் ஆதரவாளர்கள் நிகழ்த்திய வன்முறைகளுக்கு பின்னர் ட்வீட்டர் எடுத்த நடவடிக்கைகளுக்கு மாறாக உள்ளது இந்தியாவில் அதே நிறுவனம் மேற்கொள்ளும் அணுகுமுறை.

உண்மைக்கு புறம்பான தகவல்களை பதிவிட்டு, நாட்டில் பிரிவினையை உண்டாக்க முயற்சிக்கும் பதிவுகள் குறித்து ஆதரப்பூர்வமாக பட்டியலிட்ட பிறகும், ட்வீட்டர் நிறுவனம் இவ்வாறு நடந்து கொள்வது அர்த்தமற்றது’ என்று காட்டமாக தெரிவித்துள்ளது.இது தொடர்பாக இன்று காலை மத்திய அரசின் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘விவசாயிகளின் போராட்டம் குறித்து உண்மைக்கு புறம்பான பதிவுகளை வெளியிட்டுள்ள 1,178 பேரின் ட்வீட்டர் கணக்குகளை உடனடியாக நீக்க வேண்டும் என்று ஏற்கனவே உத்தரவிட்டிருந்தோம்.

இந்த உத்தரவுக்கு பின்னரும் ட்வீட்டர் நிறுவனத்திடம் இருந்து எந்த ஒத்துழைப்பும் வரவில்லை. இந்தியாவில் வணிகம் செய்யும் நிறுவனங்கள் இந்திய அரசின் சட்டங்களை மதித்து நடக்க வேண்டும். தவறினால் சட்டப்படியான கடும் நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டியதிருக்கும். இந்தியாவில் ஒட்டுமொத்தமாக ட்வீட்டரை தடை செய்வதுடன், அந்நிறுவனத்தின் இந்திய உயரதிகாரிகளை கைது செய்யவும் நேரிடும்’ என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

Tags : Respect India ,government , Twitter
× RELATED ஒன்றிய அரசு குறித்து அமெரிக்கா மீண்டும் விமர்சனம்