தை அமாவாசையை முன்னிட்டு அக்னி தீர்த்த கடலில் 1 லட்சம் பக்தர்கள் நீராடல்

ராமேஸ்வரம்: தை அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில்  பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இன்று காலை புனித நீராடி தரிசனம் செய்தனர். ஸ்ரீராமர் பஞ்சமூர்த்திகளுடன் அக்னி தீர்த்த கடற்கரைக்கு எழுந்தருளி தீர்த்தவாரி வழங்கி பக்தர்களுக்கு காட்சியளித்தார். தை அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில்  பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இன்று காலை புனித நீராடி தரிசனம் செய்தனர்.

இதையொட்டி அதிகாலை 2.30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. பின் ஸ்படிகலிங்க தரிசானத்தை தொடர்ந்து கால பூஜைகள் நடைபெற்றது. இன்று அதிகாலை முதல் ராமேஸ்வரத்தில் குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் அக்னி தீர்த்த கடலில் அதிகாலை முதல் புனித நீராடி தர்ப்பணம் கொடுத்து முன்னோர்களை வழிபட்டனர். தொடர்ந்து கோயில் வடக்கு ரத வீதியில் நீண்ட வரிசையில் காத்திருந்து கோயிலுக்குள் உள்ள 22 தீர்த்தங்களிலும் நீராடி ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்பாளை தரிசனம் செய்தனர்.

அமாவாசையை முன்னிட்டு பகல் 10.30 மணிக்கு மேல் ஸ்ரீராமர் பஞ்சமூர்த்திகளுடன் அக்னி தீர்த்த கடற்கரை மண்டகப்படிக்கு எழுந்தருளி பக்தர்களுக்கு தீர்த்தவாரி வழங்கி காட்சியளித்தார். கொரோன ஊரடங்கு தளர்வுக்குப்பின் பத்து மாதகால இடைவெளிக்குப்பின் தை அமாவாசை வந்ததாலும், கோயிலுக்குள் தீர்த்தமாடுவதற்கு சமீபத்தில்தான் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாலும் இன்று அதிகாலை முதல் வெளியூர்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ராமேஸ்வரத்தில் குவிந்தனர். இதனால் அக்னி தீர்த்த கடற்கரை, ரதவீதிகள் உட்பட நகரின் அனைத்து பகுதியிலும் மக்கள் நெருக்கடி அதிகளவில் இருந்தது. கன்னியாகுமரி: தை அமாவாசையையொட்டி கன்னியாகுமரியில் உள்ளூர் மட்டுமின்றி நெல்லை, தூத்துக்குடி உள்பட பல மாவட்டங்களை சேர்ந்தவர்கள் அதிக அளவில் குவிந்தனர். அவர்கள் திரிவேணி சங்கமம் கடற்கரையில் திரண்டு தங்களது முன்னோருக்கு பலி தர்ப்பணம் பூஜை செய்தனர். பின்னர் கடலில் முக்கடல் சங்கமத்தில் புனித நீராடிவிட்டு பகவதியம்மனை தரிசனம் செய்தனர்.

தை அமாவாசையையொட்டி இன்று கன்னியாகுமரி பகவதி அம்மனுக்கு வைரக்கிரீடம், வைரக்கல் மூக்குத்தி, தங்ககவசம், தங்க ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு சந்தனகாப்பு அலங்காரத்துடன் சிறப்பு தீபாராதனை நடந்தது. மாலையில் சாயாரட்சை தீபாராதனை, இரவு 8 மணிக்கு அம்மன் பலவண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி கலைமான் வாகனத்தில் வீதி உலா, இரவில் முக்கடல் சங்கமத்தில் அம்மனுக்கு ஆராட்டு நடக்கிறது. காவிரி: கடந்த ஆடி, புரட்டாசி அமாவாசையின்போது கொரோனா பரவலை தடுப்பதற்காக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்ததால் நீர் நிலைகளில் திதி கொடுப்பதற்கு தடை விதிக்கப்ப்டடது. இந்நிலையில், தை அமாவாசையான இன்று திதி கொடுக்க அரசு சார்பில் தடை எதுவும் அறிவிக்கப்படவில்லை. இதனால் இன்று அதிகாலை முதலே நீர்நிலைகளில் அதிகளவில் மக்கள் வந்து புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்து வருகின்றனர்.

திருச்சியில் காவிரி ஆற்றின் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறை, வேதாரண்யம் சன்னதி கடல் மற்றும் கோடியக்கரை ஆதிசேது கடற்கரை மற்றும் காவிரியின் கரையோரங்களில் எல்லாம் மக்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபட்டனர். தஞ்சை மாவட்டம் திருவையாறு காவிரி புஷ்பமண்ட படித்துறையில், நீராடுவதற்கும், தர்ப்பணம் செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டதால் பக்தர்கள் ஏமாற்றமடைந்தனர். பவானி கூடுதுறை: அதேபோல் ஈரோடு மாவட்டம், பவானி கூடுதுறையிலும் இன்று ஏராளமான பக்தர்கள் புனித நீராடி முன்னோர்களை வழிபட்டனர்.

Related Stories:

>