×

அரசு மருத்துவமனையில் பரிசோதனை கருவிகளை சூறையாடிய நோயாளி

விருதுநகர்: விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஆய்வகத்தில் புகுந்த நோயாளி, ரத்த பரிசோதனை இயந்திரம் உள்ளிட்ட இயந்திரங்களை அடித்து நொறுக்கினார். இதில் ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமாகின.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே படந்தால் அண்ணாநகரை சேர்ந்தவர் பாண்டி (38). அச்சக தொழிலாளி. இவரது மனைவி கடந்த ஓராண்டுக்கு முன்பு இறந்துவிட்டார். மதுப்பழக்கத்திற்கு அடிமையான பாண்டிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. சாத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாண்டி, கடந்த 8ம் தேதி விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.நேற்றிரவு மருத்துவமனையிலிருந்து பாண்டி தப்பியோடினார். மருத்துவமனை அருகில் இளங்கோ தெருவிலுள்ள ஓட்டல் உரிமையாளர் வீட்டில் புகுந்தார். வீட்டிலிருந்தவர்கள் பாண்டியை பிடித்து அடித்து உதைத்து கிழக்கு போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணையில், மருத்துவமனையிலிருந்து பாண்டி தப்பியது தெரியவரவே மீண்டும் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்நிலையில், இன்று காலை 6 மணியளவில் ஆய்வகத்திற்கு சென்றார். அங்கு பணியிலிருந்த மருத்துவ பணியாளர் காமாட்சி காந்தி தடுத்துள்ளார். அவரை தாக்கி வெளியே தள்ளிவிட்டு ஆய்வகத்திற்குள் சென்ற பாண்டி உட்புறமாக தாழிட்டு கொண்டார். ரோல் சேரிலிருந்து கம்பியை உருவி எடுத்து 2 ரத்த பகுப்பாய்வு இயந்திரம், எலிசா பரிசோதனை கருவி, கம்ப்யூட்டர் ஆகியவற்றை அடித்து நொறுக்கினார். 100க்கும் மேற்பட்டோரிடம் சேகரித்து வைத்திருந்த ரத்த மாதிரிகளும் வீணானது. பணியிருந்த மருத்துவ பணியாளர்கள் கதவை உடைத்து பாண்டியை மீட்டு மீண்டும் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

பாண்டி அடித்து நொறுக்கியதில் ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் நாசமாகின. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : patient ,government hospital , Government Hospital
× RELATED புதுச்சேரி ஜிப்மரில் நாளை...