×

வேலூர் மாவட்டத்தில் ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன் வளர்க்க தடை

வேலூர்: வேலூர் மாவட்டத்தில் ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்கள் வளர்க்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் சண்முகசுந்தரம் தெரிவித்தார். வெளிநாட்டில் இருந்து அறிமுகப்படுத்தப்பட்ட தேளி மீன், அணை மீன், பெரிய கெளுத்தி மீன் எனப்படும் ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்களை வளர்க்க மத்திய, மாநில அரசுகள் தடை விதித்துள்ளன. இந்த வகை மீன்கள் வாழும் நீர்நிலைகளில் மற்ற இன மீன்களை இடைவிடாமல் வேட்டையாடி உண்ணும் திறன் கொண்டது. இவை 7 முதல் 8 ஆண்டுகள் வரை உயிர் வாழக்கூடியவை.

நீர்நிலைகளில் இந்த மீன்கள் நுழைந்துவிட்டால் அவற்றை அழிப்பது சாத்தியமில்லாத ஒன்று. மிக குறைந்த அளவு தண்ணீரில் இனப்பெருக்கம் செய்யக்கூடியது. இந்த வகை மீன்கள் பண்ணைக்குட்டைகளிலோ, குளங்களிலோ வளர்த்து வந்தால், மழை மற்றும் வெள்ளப்பெருக்கு காலங்களில் மற்ற நீர்நிலைகளுக்கு தப்பி சென்று விடும். அவ்வாறு செல்லும் மீன்கள் அங்குள்ள மற்ற மீன் இனங்களை அழித்து விடும். அடுத்த சில ஆண்டுகளில் அந்த நீர்நிலைகளில் இந்த வகை மீன்கள் மட்டுமே இருக்கும். இதனால் மீன் வளர்க்கும் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கும்.

எனவே, வேலூர் மாவட்டத்தில் மீன் வளர்க்கும் விவசாயிகள் அரசால் தடை செய்யப்பட்ட ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்களை வளர்க்க வேண்டாம். இவற்றை மீறி தடை செய்யப்பட்ட மீன் வளர்த்து வளர்ந்தால், உடனடியாக தாமாக முன் வந்து, இந்த வகை மீன்களை அழித்து விட வேண்டும். ஆனால் தொடர்ந்து மீன் வளர்ப்பது தெரியவந்தால், அவை முழுவதும் கைப்பற்றப்பட்டு அழிக்கப்படும். விதிகளை மீறி தடை செய்யப்பட்ட மீன்களை வளர்ப்பவர்களின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் சண்முகசுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags : Vellore district , African catfish
× RELATED ஆம்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில்...