×

சசிகலாவுக்கு எச்சரிக்கையா?.. சொத்து பறிமுதலில் அரசியல்?.. சசிகலா, இளவரசி, சுதாகரனின் சில சொத்துக்கள் மட்டும் பறிமுதல்

சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகளுக்கு பிறகு திடீரென சசிகலா, இளவரசி, சுதாகரனுக்கு சொந்தமான சொத்துக்களை பறிமுதல் செய்யும் தமிழக அரசு வழக்கில் தொடபுடைய கொடநாடு எஸ்டேட்  சிறுதாவூர், பையனூர் பங்களா போன்ற பெரிய சொத்துக்களை பறிமுதல் செய்ய அரசியல் காரணங்களுக்காக தயங்குகிறது என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் அந்த சொத்துக்களில் இருந்து தமிழக அரசுக்கு கிடைக்க வேண்டிய பல கோடி ரூபாய் வருமான இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறும் சட்ட நிபுணர்கள் சொத்துக்கள் பறிமுதலில் அரசு அலட்சியம் காட்டுவது குறித்து விசாரணை ஆணையம் அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி, அளித்த தீர்ப்பை 2017-ம் ஆண்டு உறுதிப்படுத்திய உச்சநீதிமன்றம், இறந்த ஜெயலலிதாவை தவிர வழக்கில் தொடர்புடைய சசிகலா, இளவரசி, சுதாகரனின் சொத்துக்களை பறிமுதல் செய்ய உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை அமல்படுத்தாமல் 4 ஆண்டுகள் மவுனம் காத்த தமிழக அரசு திடீரென சொத்துக்கள் பறிமுதல் செய்யும் நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளது. முதலில் இளவரசி, சுதாகரனின் சில சொத்துக்களை பறிமுதல் செய்த தமிழக அரசு திருவாரூர் மாவட்டத்தில் சசிகலா பெயரில் உள்ள சில சொத்துக்களையும், அரசுடைமை ஆக்கியுள்ளது.

ஆனால் சொத்துக்குவிப்பு வழக்கில் தொடர்புடைய மிக முக்கிய சொத்தான கொடநாடு எஸ்டேட்டை பறிமுதல் செய்வதற்கான எந்த நடவடிக்கையும் அரசு இதுவரை எடுக்கவில்லை. 900 ஏக்கர் உள்ள கொடநாடு எஸ்டேட் சட்ட விரோதமாக வாங்கப்பட்டது என்று சொத்துக்குவிப்பு வழக்கில் உறுதிப்படுத்தப்பட்ட போதும், அந்த சொத்தை பறிமுதல் செய்ய அரசு தயக்கம் காட்டுவது ஏன்? என்று கேள்வி எழுந்துள்ளது. மேலும் அரசின் அலட்சியத்தால் 4 ஆண்டுகளாக கொடநாடு எஸ்டேட்டில் இருந்து அரசு கஜானாவுக்கு வர வேண்டிய பல கோடி ரூபாய் வருமானம் யாருக்கு சென்றது?

அதனை தடுக்க அரசு என்ன நடவடிக்கை எடுத்தது? என்றும் வினாக்கள் எழுந்துள்ளன. கொடநாடு எஸ்டேட் மட்டுமின்றி சிறுதாவூர், பையனூர் பங்களா போன்ற பெறும் சொத்துக்களையும், அரசுடைமை ஆக்க தமிழக அரசு தயக்கம் காட்டுகிறது. பெயருக்கு சிறு சொத்துக்களை மட்டும் பறிமுதல் செய்துவிட்டு பலநூறு கோடி ரூபாய் சொத்துக்களை கண்டுகொள்ளாமல் விடுவது ஏன்? இதனால் பலனடைபவர்கள் யார்? என்பதை கண்டறிய தனி விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என்று சட்ட நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

சொத்துக்குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் இறுதி தீர்ப்பு வழங்கி 4 ஆண்டுகளாக தமிழக அரசு மவுனம் காத்தது மட்டுமல்லாமல் தற்போது சொத்துக்கள் பறிமுதல் செய்வதிலும் அரசியல் உள்நோக்கம் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சசிகலா தீவிர அரசியலில் ஈடுபட்டால் சொத்துக்கள் பறிமுதல் ஆகும் என்று எச்சரிக்கும் வகையிலேயே தமிழக அரசின் செயல்பாடு அமைந்துள்ளதாகவும் விமர்சனம் முன்வைக்கப்படுகிறது. சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பை அரசியலுக்கு பயன்படுத்தாமல் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி அனைத்து சொத்துக்களையும் தமிழக அரசு பறிமுதல் செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி உள்ளனர்.


Tags : Sasikala , Warning to Sasikala? .. Politics in property confiscation in case of embezzlement? .. Seizure of only some properties of Sasikala, Princess, Sudhakaran
× RELATED சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில்...