×

அதிமுகவை கைப்பற்றும் முயற்சி தோல்வி ...234 தொகுதியிலும் தனித்து போட்டி : அமமுக மாவட்டச் செயலாளர்களுடன் சசிகலா ஆலோசனை நடத்த முடிவு

சென்னை:அதிமுகவை கைப்பற்றும் முயற்சி தோல்வி அடைந்ததால் 234 தொகுதியிலும் போட்டியிடுவது குறித்து அமமுக மாவட்டச் செயலாளர்களுடன் சசிகலா ஆலோசனை நடத்த  திட்டமிட்டுள்ளார். சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை முடிந்த சசிகலா, கடந்த 9ம் தேதி சென்னை திரும்பினார். தமிழக எல்லையான ஓசூரில் இருந்து சென்னை வரை 23 மணி  நேரம் ரோடுஷோ  நடத்தினார். ஆனாலும் அதிமுக தலைவர்கள் யாரும் அவருக்கு பின் செல்லவில்லை. சென்னை வந்தவுடன் அதிமுகவே தன் பின்னால் வந்துவிடும் என்றெல்லாம் கற்பனையில்  வந்தார். குறிப்பாக தென்  மாவட்ட அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அனைவரும் வந்து விடுவார்கள் என்று கருதினார். ஆனால், அவருக்கு பின்னால் பெரிய அளவில் யாரும் வரவில்லை.சில அமைச்சர்களை  சசிகலா தொடர்பு  கொண்டு பேசினார். ஆனாலும் அவருக்கு பின்னால் செல்ல பலரும் அச்சப்படுகின்றனர். அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு பின்னால் பாஜக இருப்பதாக  அமைச்சர்களும்,  எம்எல்ஏக்களும் கருதுகின்றனர். தேவையில்லாமல் ஐடி ரெய்டில் சிக்க வேண்டாம் என்றும் அவர்கள் கருதுகின்றனர். இதனால்தான் அமைச்சர்கள் யாரும் அவருக்கு பின்னால்  வரவில்லை.

இதனால் அதிமுகவை கைப்பற்றும் முயற்சி தோல்வியடைந்ததாக சசிகலா கருதுகிறார். ஆனால் சீட் கிடைக்காத நிலையில் உள்ள ஒரு சில எம்எல்ஏக்கள் மட்டுமே சசிகலாவுடன் தற்போது தொடர்பில்   உள்ளனர். அவர்களையும் தான் கைகாட்டும் நாளில் அதிமுகவில் இருந்து வெளியில் வரவேண்டும் என்று கூறியுள்ளார். இதற்கிடையில், மத்திய மாவட்டம் மற்றும் தென் மாவட்டங்களில் உள்ள மக்கள்   தனக்கு ஆதரவாக எப்போதும் இருப்பார்கள் என்று அவர் கருதுகிறார். கடந்த 30 ஆண்டுகளாக தான் ஆதரவாக இருந்த மக்கள், இப்போது தன்னை கைவிட மாட்டார்கள் என்று கருதுகிறார். இதனால்   தமிழகம் முழுவதும் தனித்துப் போட்டியிடலாம் என்றும் அவர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்து கடந்த இரு நாட்களாக வீட்டை விட்டு வெளியில் வராமலும், யாரையும் சந்திக்காமல் உள்ள சசிகலா, டிடிவி தினகரனை மட்டும் சந்தித்து வருகிறார். ஓரிரு நாளில் அமமுக மாவட்டச்   செயலாளர்களின் கூட்டத்தை கூட்டி அவர்களிடம் மாநிலம் முழுவதும் 234 தொகுதியிலும் தனித்துப் போட்டியிடுவது அல்லது நடிகர் கமல், சீமான் உள்ளிட்டவர்களுடன் கூட்டணி அமைத்து   போட்டியிடுவது குறித்து ஆலோசனையை நடத்த உள்ளார். அதிமுக கூட்டணியில் உள்ள சில கட்சிகளும் விரைவில் வெளியில் வரும் என்று எதிர்பார்க்கிறார். அவ்வாறு வந்தால் அவர்களுடன் சேர்ந்து   தனி அணியை உருவாக்கி போட்டியிடலாம் என்று திட்டமிட்டுள்ளார். இதனால் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்துக்குப் பிறகு அவரது அரசியல் செயல்பாடுகள் வேகம் எடுக்கும் என்று அரசியல்   பார்வையாளர்கள் கருதுகின்றனர்.



Tags : AIADMK ,constituencies ,Competition ,Sasikala ,consultations ,district secretaries , சசிகலா
× RELATED கூடாரமே காலி ஆகிறதா? அதிமுக காலை வாரிய தென் மாவட்ட தொகுதிகள்