×

தூண்டில் வளைவு அமைக்கும் விழாவில் தமிழ்த் தாய் வாழ்த்தை தப்பாக பாடிய அமைச்சர் ஜெயக்குமார்

திருக்கழுக்குன்றம்:சென்னை அருகே கல்பாக்கம் அடுத்த  புதுப்பட்டினம், உய்யாலிகுப்பம் மீனவர் பகுதிகளில் தூண்டில் வளைவு அமைக்கும் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.இந்த  விழாவுக்கு முன்னாள் எம்எல்ஏ எம்.தனபால் தலைமை வகித்தார். செங்கல்பட்டு கிழக்கு  மாவட்ட  அதிமுக செயலாளர்  எஸ்.ஆறுமுகம், மீன்வளத்துறை ஆணையர் ஜெயகாந்தன், மாவட்ட  மீனவரணி  செயலாளர் கலியபெருமாள், மாவட்ட துணை செயலாளர் எஸ்வந்த் ராவ், ஒன்றிய செயலாளர் விஜயரங்கன், மாவட்ட பிரதிநிதி காதர் உசேன் முன்னிலை வகித்தனர். விழாவில், அமைச்சர்கள்   டி.ஜெயக்குமார், மாஃபா பாண்டியராஜன் ஆகியோர் கலந்துகொண்டு தூண்டில்வளைவு அமைப்பதற்கு அடிக்கல் நாட்டி பேசினர்.

முன்னதாக அமைச்சர் ஜெயக்குமார் பேசும்போது காலதாமதம் ஏற்பட்டதால் மைக்செட் காரர்களிடம் தமிழ்த்தாய் வாழ்த்து போடுங்கள் என்றார். ஆனால் மைக்செட் காரர்களிடம் தமிழ் தாய் வாழ்த்து   பாடல் இல்லை என்று கூறியதால் அமைச்சர் ஜெயக்குமாரே தமிழ் தாய் வாழ்த்து பாடினார். ஆனால் அவர் தமிழ்தாய் வாழ்த்தை தப்பு, தப்பாக பாடியதால் விழாவுக்கு வந்திருந்த  அனைவரும் அதிர்ச்சி   அடைந்தனர். இதன்பிறகு சமாளித்த அமைச்சர் ஜெயக்குமார், எம்ஜிஆர் நடித்த படகோட்டி படத்தில் வருகின்ற தரைமேல் பிறக்க வைத்தார் என்ற பாடலை பாடி உற்சாகப்படுத்தினார்.இதன்பின்னர்  அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது;

அதிமுக கூட்டணியில் உள்ள  அனைத்து கட்சிகளும் தற்போது வரை எங்களுடன்தான் உள்ளனர். எங்கள் கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை. எங்கள் கூட்டணியில் தற்போது உள்ள கட்சிகளை   விட அதிக கட்சிகள் இணையும் வாய்ப்புகள்தான் உள்ளது. அமமுகவினர் அதிமுகவை எதிர்த்தவர்கள். ஜெயலலிதாவை எதிர்த்தவர்கள். எங்கள் பலத்திற்கு முன்பு அமமுகவினர் ஒன்றுமில்லை.   சசிகலாவால் அதிமுகவுக்கு எந்த பிரச்சனையும் வராது. கோடிக்கணக்கில் கொள்ளையடித்த பணத்தை வைத்துக் கொண்டு காசு கொடுத்து கூட்டம் சேர்க்கிறார். கூலிக்கு ஆள் பிடிக்கிறார்கள்.இவ்வாறு  அமைச்சர் கூறினார்.



Tags : Jayakumar ,bait bending ceremony ,Thai ,Tamil , அமைச்சர் ஜெயக்குமார்
× RELATED வரலாறு தெரியாமல் அண்ணாமலை பேசுகிறார்:...